Wednesday, 6 July 2016

பெருஞ்சுழி 19

அனல் நெருங்குவதை  சமர்வர் உணர்ந்தார். அனிந்தரின்  பிரதானப் படைகளும்  அரண்மனை  நீங்கியிருந்தன. இருள்போர் என்ற முறையை குடிகள்  கையாண்டன. மாவலியத்தின்  விளிம்பு நிலைக் குடிகள்  அனைத்தும்  ஒன்றிணைந்து கொண்டே வந்தன. விளிம்பு மையம் நோக்கி முன்னேறத் தொடங்கியது. அனிந்தர்  அவர்களை நிறுத்த வேண்டிய  இடங்களை தெளிவாக வகுத்துக்  கொண்டார். ஆனால்  அவர்களின்  போர் முறைகள்  கணிக்க முடியாததாய் இருந்தன.படைகளின் ஊடே புகுந்து சிதறடிப்பது படை நிலையினரை பிரிப்பது என எந்த முயற்சிகளையும்  அவர்கள்  மேற்கொள்ளவில்லை. படை நிலைகளை இரவுகளில்  தாக்கி விற்களையும் வாட்களையும் கைப்பற்றுவது போரில்  கலந்து  கொள்ள முடியாதவாறு வீரர்களுக்கு சிறு ஊனங்களை உண்டாக்குவது உணவு நிலைகளை கைப்பற்றுவது என நேரடிப் போரை தவிர்த்தே வந்தனர்.
சோர்வடையச் செய்வதே அவர்களின்  பிரதான  உத்தி என அனிந்தர்  எண்ணி அதற்கேற்றார் போல் அடுத்து நகர்வினை நிகழ்த்த நினைக்கும்  போதே படை நிலைகளை நேர் நின்று  பலம் கொண்டு தாக்கினர்.
"மையத்தில்  பற்றி விளிம்பிற்கு  நகரும்  நெருப்பின் போக்கினை  கனித்து விட முடியும்  சமர்வரே. இந்நெருப்பு விளிம்பில்  பற்றி மையம் நோக்கி ஏறுகிறது. மாவலியருடன் என் பனிரெண்டாம்  பிராயத்தில் இணைந்தேன். யுத்தம் குருதி  விரைவு என்றே கழிந்திருக்கிறது என் இளமை. சோர்வென்பதை அறியாதவனாய் இருந்து  வந்திருக்கிறேன். தேர்ந்த  பெரும் படைகளை சந்தித்திருக்கிறேன். என் அகம் இன்னும்  இன்னும்  என்றே கூவியது. ஆனால்  இரண்டாண்டுகளாக நாம் ஈடுபட்டிருக்கும்  போர் எத்தகையதென என்னால்  ஊகிக்க  இயலவில்லை  சமர்வரே. " அனிந்தர் சொன்னார்.
"வெல்வது மட்டுமே  நோக்கமென கொண்டவர்களை வீழ்த்தி விட முடியும். இவர்கள்  போர் புரிவதொன்றே நோக்கம் எனக் கொண்டிருக்கிறார்கள். எனக்கான  தண்டனையை நான்  கடுமையானதாக  கற்பனித்திருந்தேன். கசைகளால் உடலின் இறுதிப் பிடி சதையும் பிய்த்தெடுக்கப்படுவது உயிருடன்  கொதி நீரில்  வேக வைக்கப்படுவது குதிரையின் கால்களில்  கட்டப்பட்டு இழுபடுவது என இன்னும்  எத்தனையோ வதைகள். ஆனால்  இன்றுணர்கிறேன் சமர்வரே தண்டனை கற்பனைக்கு அப்பாற்பட்டதென்று. மாவலியர் அழுத்தம்  தரவில்லை  நம் படை வீரர்கள்  கலகம் செய்யவில்லை  பெரும்  போர் எதையும்  நாம் எதிர்கொள்ளவில்லை. இருந்தும்  ஒவ்வொரு  நொடியும்  வதைபடுகிறேன் அமைச்சரே. தண்டனை என்பது  உடல் கிழிபடுவதல்ல அதனுள்  சுருண்டுறங்கும் ஆணவம் கிழிபடுவது தான் எனப் புரிகிறது." எனப் பெருமூச்செறிந்தார் .
"இனி ஆற்றுவதற்கு  ஏதுமில்லை  என உணர்கிறேன்  அனிந்தரே. காத்திருப்போம் நம் அழிவுக்கென" என்றார்.
"பொருண்மையின் அழிவென்பது பொருண்மையின்மையின் பிறப்பல்லவா மூத்தவர்களே" என்றவாறே அனிந்தரும்  சமர்வரும்  பேசிக் கொண்டிருந்த மந்தண அறைக்குள்  நுழைந்தான் சுனதன்.
நிதானித்து வெளிப்பட்ட அக்குரலில் சில நொடிகள்  ஆழ்ந்தனர் சமர்வரும்  அனிந்தரும். அதன் பிறகே மன்னர்  மட்டுமே  நுழையக் கூடிய  மந்தண அறையில்  முப்பது தாண்டாத ஓரிளைஞன் நின்றிருக்கிறான் என உணர்ந்து திடுக்கிட்டனர். மறு நொடியே அவர்கள்  இருவரின் சித்தமும் அவன் யாரென தொட்டறிந்தது.
"வா இளையோனே. உன்னை இப்படித்தான்  சந்திப்பேன்  என என் ஆழம்  அறிந்திருந்தது போல. நீ யாரென உணர்ந்தும் என் சித்தம்  நடுக்குறவில்லை. உன்னால்  வெல்லப்பட்டவர்களை காண வந்தாயா? நன்றாகப்  பார்த்துக்  கொள்" என பேச்சில்  சற்றே சகப்பு தொனிக்க கூறினார் சமர்வர்.
"அனிந்தர்  என்னிடம்  இவ்வளவு  கடுமை காட்டமாட்டார் என எண்ணுகிறேன்" என தலை குனிந்து நின்றான்  சுனதன்.
மென்மையாய்  புன்னகைத்தவாறே அனிந்தர் "நேற்றொரு பாணன் தெருவில்  பாடினான் மலைகள் தழுவ விழைந்தால் மரங்கள்  நெறிபட்டே ஆக வேண்டுமென. மாவலியர் தனியறையில்  இருக்கிறார். நீ செல்லலாம்  இளையோனே. அதற்கு  முன் அரசரை சந்திப்பவனின் தகுதியை  சொல்லால் நிறுவ வேண்டியவர் சமர்வர். நீ அதை ஏற்கனவே நிறுவி விட்டாய். செயலால் நிறுவிய  பின் முன் செல்" என ஒரு கனத்த வாளினை அவன் முன் தூக்கியெறிந்தார் அனிந்தர்.
மலர்ந்த முகத்துடன்  சுனதன்  அவ்வாளினை குனிந்து எடுந்த போது முதுகில்  புரண்ட அவன் குழலினை வெட்டிச் செனறது அனிந்தரின்  வாள்.சுனதன்  நிமிர்ந்த போது அனிந்தரின்  வாள் தரையில்  தெறித்து விழுந்தது. வாளினை அனிந்தரின்  கையில்  கொடுத்து  விட்டு உள்ளறை நோக்கிச்  சென்றான்.
அரண்மனையின்  ஒளிக்கு தொடர்பே இல்லாமல்  இருண்டு போயிருந்தது மாவலியரின் அறை. சற்று நேரம்  நகர்ந்ததும் கரு நாகத்தின்  உடலென மின்னத் தொடங்கியது கருமை. கருமையின் ஒளி. கருமையின் குளிர். கருமையின் சுகந்தம். கருமையின் இறுக்கம். கருமையின் அடர்வு. கருமையின் தனிமை. கருமையின்  காமம். கருமையின் கண்ணீர். கருமையின்  வீரம். சொல்லப்படாதவற்றின் பெருங்குரல் வெல்லமுடியாதவற்றின் தொகுப்பு. கருமை. கண்கள்  பழகிய பின்னும்  கவர்ந்திழுக்கும்  கருமை. பழகியதற்காக கண்களை சபிக்கிறது மனம்.
திரண்ட கருமையென மணிக்கட்டிலும் புயங்களிலும் கணுக்காலிலும் பொன் மின்ன மீசையை நீவியபடி தரை அதிர நடந்து வந்தார்  மாவலியர்.
"வா சுனதா" என்றார்.
இருளையே  அணைக்க நெருங்குவது  போல அணைந்து மாவலியரின்  பாதங்களை சிரம் சூடினான் சுனதன்.

No comments:

Post a Comment