Wednesday, 13 July 2016

பெருஞ்சுழி 26

மாசறியானின்  மாணவரான  தனித்யர் பெருஞ்சுழி  ஏற்பட்டதற்கான  காரணங்களை  சுனதரின் குறிப்புச் சொற்கள்  வழியாக  உணர்ந்து  நூலாக  எழுதினார். சுனதர் அவர் தவிர்த்து யாரிடமும்  பேசவில்லை.  மாவலியம்  என்ற முழுநிலப்பரப்பும் மூழ்கி  மீண்டு  கொண்டிருந்தது. 
தனித்யரின் மகள்  சுகத்யை சுனதரின்  குடிலுக்கு  ஒருநாள்  சென்றாள்.  அவள் பிறந்த  போதே  சுனதர்  காடு நீங்கி  மாவலியம்  சென்றிருந்தார்.  அவர் குறித்து  கேட்ட  கதைகளைக்  கொண்டே  தனக்கான  சுனதனை  அவள் வரித்துக்  கொண்டாள்.  இறைக்கு இணையாக  நிறுத்தப்பட்டு  சுனதர்  குறித்து  சொல்லப்பட்ட  கதைகள்  அவளுக்கு  ஈர்ப்பினை தரவில்லை. களிற்றின்  மீதேறி  சிம்மத்தை துரத்தும்  திறத்தவனிடம் அடையும்  காமம்  எத்தகையதாக  இருக்கும்  என எண்ணி உளம் பொங்கினாள்.
பின் சீற்றம்  கொண்டாள்.
'ச்சீ கீழ் மகளே. ஏன் இப்படி  ஏங்கித் தவிக்கிறாய்? யாரவன்? உருவமே இல்லாதவன். உன் வயதிற்கு  ஒரு விதத்தில்  அவன் முதியவன்.
முதுமை வருடங்களிலா இருக்கிறது?
ஆம் வருடங்களில்  தான் இருக்கிறது. அப்படியே  நம்ப வைக்கப்பட்டிருக்கிறேன். அதையே நம்புகிறேன்  உனக்கென்ன. நான் அச்சமும் நாணமும்  நிறைந்த குலப் புதல்வி அல்லவா? ஏய்! ஏனடி சிரிக்கிறாய்? பின் நான்  என்ன வேட்கை கொண்ட  மிருகமா?
ஆம் அதில்  என்ன சந்தேகம்.
கீழ் மகளே விலகு. நெருங்காதே என்னை.
சரி நெருங்கவில்லை. நீ உறங்காவிடில் உண்ணாவிடில் உன்னுடன்  பேசும்  கானகத்தின் மொழி புரியாவிடில் பறவைகளின் குரல்கள்  கேட்காவிடில் உன் உடலில்  முளைப்பவற்றை நீ உணராவிடில் உன்னோடு நான் இல்லாவிடில் உன்னை விலகுகிறேன்.
இல்லை. அது முடியாது. என் கனிவும் வீரமும்  பெண்மையும் உறுதியும்  மட்டுமல்ல என் இருப்பும்  அவன் மீதே கட்டப்பட்டுள்ளது'
தன்  உடலின்  முதல்  இணைதல் ஒரு பெரும்போரென உணர்ந்தவளாக இரும்பென வலுவும்  வைரமென ஒளியும்  கொண்டவளாக தன்னை  தீட்டிக்  கொண்டாள். பெருஞ்சுழியில் மாவலியம்  வீழ்ந்த போது  சுனதனும்  இறந்தான்  என்றெண்ணி  அவன் குடி  கண்ணீர்  விட்டது. சுகத்யை அறிந்திருந்தாள் அவன் மீள்வான் என. நீள் அருவியில்  அவன் விழுந்த  போது  சுனதனை முதலில்  கண்டவள் சுகத்யை. அவனை  அப்படியே  அள்ளி இழுத்து  தன்னுள்  நிறைக்க நினைத்து  ஓரடி  வைத்தாள்.  அதன் பின்னே  அவள்  காதல்  பெருகி  வரைந்தெடுத்த அவன்  மீது  கடவுளே  ஆனவன்  என்ற  சுமை  ஏறியிருப்பதை  உணர்ந்தாள்.  ஒரு  கணம்  தன்னுள்  சிறுமையை உணர்ந்தாள்.  மறுகணம்  அறிந்தாள்  மனிதச்  சிறுமைகள் மறைக்கவே  சுனதனின்  மீதொரு சுமையேற்றப்பட்டிருக்கிறது  கடவுளே  ஆனவன்  என. அவனை  வணங்கிய  அனைவரையும்  வெறுத்தாள். அவ்வெறுப்பின்  உச்சத்தில்  அமர்ந்திருந்தான்  பெண் தீண்டாது காமம்  அறியாது  கடவுளை  நடிக்கும்  சுனதன். சுகத்யைக்கு பதினாறு  வயதானபோது திருமணம்  பேசப்பட்டது. “என்னை  களத்தில்  வெல்பவன் என் உடலை அடையலாம். வெல்வது  நான்  எனில்  தோற்பவன் குறியை  அறுத்துக்  கொண்டு  உயிர் விட  வேண்டும் சம்மதமா?” என்றாள்  சிரித்துக்  கொண்டே.  சீண்டப்பட்டு  இளையவர்  எழ மூத்தோர்  அவர்களை  மட்டுப்படுத்தினர். ஆணறியாது  அவள்  வாழ்ந்தாள். சுனதன்  வனம்  மீண்டது  முதல்  அவனை கணம்கணமென அறிந்து  வந்தாள்.  பெண்ணிடமிருந்து  விலகும்  கடுமையான பயிற்சியை  அவன் மேற்கொண்டிருப்பதை  அவளால்  உணர  முடிந்தது. பெருஞ்சுழியில்  மீண்டு  சுனத  வனத்தில் தஞ்சமடைந்தவர்களை மாசறியானும்  அவர்  மாணவர்  தனித்யரும் சிறு சிறு  நிரைகளாக  பகுத்து  உணவு  முதலிய  அடிப்படை  தேவைகளை  நிறைவேற்றிக்  கொள்ளச்  செய்திருந்தனர். தெரிதர்  சற்று  உடல் நலம் பாதிக்கப்பட்டு  ஓய்வெடுத்தார்.  சுனதன்  தன்னுள்  தன்னை  ஒடுக்கி  அமர்ந்திருந்தான். 
சுகத்யை  அலரி  மலர் சூடி  உதட்டில்  செஞ்சாந்திட்டு  புருவங்கள்  திருத்தி  சுனதனின்  குடில்  அடைந்தாள்.  அவளுடைய  அழுத்தமான  விழிநோக்கினை விழி  மூடியிருந்த  சுனதனால் உணர முடிந்தது.  மூங்கிலரிசிக்  கூழை  அவன் அருகில்  வைத்தபோது அவள் அனல்  மூச்சு  சீண்டி  சுனதன்  கண் திறந்தான். அவள் விழிகளில்  ஒளிர்ந்தது அப்பட்டமான  இச்சை.  அதை  உணர்ந்த  அவனுள்  எழுந்த  மிருகம்  ஒரு கணம்  பிடரி சிலிர்த்தாலும் மறுகணம்  அவன் மேல் கட்டமைக்கப்பட்ட மனிதனும்  அவன்  வயதும்  அவள் இச்சை  கண்டு கூசியது.  உலகம்  கற்பித்து  வைத்திருக்கும்  சுனதனை  அவன் சூட நினைக்கிறான்   என்றுணர்ந்த  கணமே  சுனதனை  கீழே  தள்ளி  அவன் மார்பில்  தன் இடக்காலை மடித்து  அமர்ந்து “முடிந்தால்  என்னைக்  கொன்று  உன் நெறியினை காத்துக்  கொள்” என்று சுனதருக்குள் கொந்தளிக்கும்  சுனதனை  சீண்டினாள்  சுகத்யை. இருகரம்  கொண்டு  அவளை  அள்ளி  எறிந்து  முதுகில்  புரளும்  முடியினை அள்ளிக்  கட்டி  அவளை வீழ்த்த  தயாரானான்  சுனதன். சுகத்யையும்  குருதி  சொட்டும்  வாயுடன்  இறை  தேடும்  வேங்கையென அவன்  முன் நின்றாள்.
         தொடங்கியது  யுத்தம்.  இருவருமே  அசையாமல் நின்றிருந்தனர். சுனதன்  உணர்ந்தான்  தன்னுள்  எழும்  முதல்  அசைவே தன்னோடிருக்கப் போவது  தன் நெறியா அவள் உடலா என்பதை  தீர்மானிக்குமென. உடல் என்ற  வார்த்தையை  சித்தம்  தொட்டதுமே சுனதனுள் ஒரு  உதறல்  ஏற்பட்டது.  அது உடலுக்கு  பரவக்கூடாது  என அவன் நினைத்து  கொண்டிருக்கையில்  உடலில்  சில  குறைவியக்கங்களாக அந்த  மன  உதறல்  வெளிப்பட்டது.  அதை சுகத்யை  உணரும்  முன்  அவள் விழிகளை  தன்னுடையதால் ஏந்திக்  கொள்ள  நினைத்து  அவள்  விழிகளை  சந்திக்கும்  முன் அவனை  முழுதுணர்ந்து கொண்டு  முன்  நகர்ந்தாள்  சுகத்யை. 
தன்னை  மறைக்க அவளை வெறுப்பது  போன்று  முகத்தை மாற்றினான்  சுனதன். கனிந்து நெருங்கிய  அவள்  கண்களில்  கணலேறத் தொடங்கியது. மெல்லிய  இதழ் விரிவாக தன் வெற்றியை  உணர்ந்தான்  சுனதன்.  சிறிய  மேலுதட்டில் பூத்து நிற்கும்  வியர்வை  முத்துக்கள் சீர்நடை  வைக்கும்  போது  மென்னதிர்வு கொள்ளும்  அதரங்கள்  காதோரச் சுருள்  முடிகள் காற்றில்  அலைவுற்று அவனுடன்  உரையாடி அவள் கன்னங்களை தழுவும்  நீள் முடிகள் ஒசியாத வலுவிடை புன் மயிர் பரவி வலுத்து மெலிந்த நீள் கரங்கள்  அகன்ற நெற்றி வளைந்த புருவங்கள் கோபத்தில்  ஏறியிறங்கும் நிமிர்த்த மார்பு அகன்ற தோள்கள் கனிவற்ற முலைகள் துளைத்து உள் சென்று  தைக்கும்  நேர்விழிகள் என அவள்  உருவம்  தனித்தனியே  பொலிவுறுவதை  சுனதன்  கண்டான். அவள்  அவனை  நெருங்கினாள். தன் மனவுறுதியின்  இறுதி  துளி வரை  பிழிந்து  அவளை  இடக்கையால் அறைந்து  தரையில்  விழச்செய்தான். விழுந்த  வேகத்தில்  படுத்த  நிலையிலேயே  நின்றிருந்த  சுனதனின்  வலக்காலினை  தன் இடக்காலினால் உதைத்தாள். நிலை  தடுமாறி  அவள் மேலேயே  விழுந்து  அவள்  கழுத்தில் முகம்  புதைத்தான். சூடான  அவள்  மூச்சு  அவன் தலையை  வருடியது. ஒரு கணம்  தசை மணம்  உண்டாக்கும்  மயக்கத்தில்  கிறங்கினான். மென்மை. வேறேதுமற்ற மென்மை. புறாக்களின் அடிவயிறு காளான் குடைகளின் அடுக்கிய மேற்பரப்பு பிறந்த  குழந்தையின் மென் வயிறு பச்சை ஒட்டும் தளிரிழைகள்.  
சுகத்யை  அவனை  அப்படியே  சுழற்றி  அவன்  மேல் தான்  என அமைந்து  கொண்டாள்.  வெல்லும்  நொடியில் அவளுள்  எழுந்த  சிரிப்பு  கோபம்  கொள்ளச்  செய்யவே  சுனதன்  அவளை  தன்  மேலிருந்து  தூக்கி  வீச  முயன்றான்.  சுகத்யை அவன் முன்  மயிர்  கற்றையை இறுக்கமாக  பற்றியிருந்ததால் அவளை  தூக்கி  வீசும் போது  கொத்தாக மயிர்  பிடுங்கப்பட்டு சுனதனின்  முன்  நெற்றியில்  குருதி  வழிந்தது.  சுகத்யையும்  வீசப்பட்ட  போது  பீடத்தில்  மோதியதால் அவள்  நெற்றியிலும்  குருதி  வழிந்தது.  அது  கண்டு  சுனதன்  லேசாக  இறங்கினான். சீற்றத்துடன்  எழுந்தாள் சுகத்யை. விரித்த கூந்தலை அள்ளிச் சுழற்றினாள். இரண்டில்  ஒன்றே என எண்ணியிருந்தான் சுனதன். கொல்வாள். அல்லது  கொல்லப்படுவாள். கோபத்தின் உச்சம் கனிவென மாறுவதை சுனதன்  நோக்கி அமர்ந்திருந்தான் நெற்றியில்  குருதி வழிய. சாய்ந்தமர்ந்திருந்த  சுனதனை  நோக்கி  நகர்ந்த  சுகத்யை  அவன் நெற்றிப்  புண்ணில்  பின் தலையை  பிடித்துக்  கொண்டு  ஆழமாக  முத்தமிட்டாள். அன்றுணர்ந்தான் எரியும்  பனியும் வேறல்ல என.  அவள்  வியர்வை  மணம்  மயங்கச் செய்யவே  அவள் நெற்றிப்  புண்ணில்  முத்தமிட்டான்.  குருதியில்  நனைந்து சிவந்த  நான்கு  உதடுகளும் ஒன்றையொன்று இடைவெளியின்றி பற்றிக்  கொண்டன.  சுனதன்  தன்  மொத்த  இறுக்கமும் நீங்கித் தளர்ந்தான். சுகத்யை  தன்னுள்  இறுகி  அவனுள்  புதைந்தாள்.

No comments:

Post a Comment