Sunday, 31 July 2016

பெருஞ்சுழி 43

எண்பது  வயதிருக்கும்  என எண்ணத் தக்க அந்த முதியவனுக்கு உண்மையில்  நூறு வயது கடந்திருந்தது. இளமையில்  பெரு வீரனாக இருந்தமைக்கான தடங்கள்  அவன் உடலில்  அழிந்து கொண்டிருந்தன. மதிழ்யம்  எனப் பெயர் கொண்ட ஆழிமாநாட்டின்  தென்னெல்லை தேசத்தை அவன்  அடைந்து மூன்று இரவுகள் கடந்திருந்தன. அன்னையின்  தாலாட்டை நோக்கி நகரும்  மகவென ஆழியை நோக்கி நடந்து கொண்டிருந்தான் முதியவன். கால்கள்  பின்னிட்டுத் தளர்ந்தன. சூரியனின்  இளங்கதிர்களே அவனை சுட்டெரிக்க  போதும்  என்றிருந்தது. ஆர்த்தெழும் கடலோசை கேட்கத் தொடங்கிய போது ஒரு மண்டபத்தை அடைந்தான்  முதியவன். ஏக்கம் நிறைந்த விழிகளுடன்  அவனை வெறித்து நோக்கின சுனதனின் விழிகளில். நிமிர்ந்த  உடலுடன்  எதிரே நின்றிருந்தாள் ஆதிரை.
பாணரும் விறலியருமாக வந்த சிறு குழு மண்டப நிழலில்  அமர்ந்தது. இளம் விறலியின் திறந்த தோள்களை நோக்கி தன் கண்களை  திருப்பினான் முதியவன். 'உப் உப்' எனச் சொல்லி பெரிய விழிகளால்  அவனை நோக்கிச்  சிரித்தது விறலியின் தோளில்  கிடந்த குழந்தை. அன்னையின்  முதுகுப்பின்னே அமர்ந்திருக்கும் முதியவனை நோக்கி கை நீட்டியது குழந்தை. உப்பு மணம் கொண்ட கடற்காற்று  தொண்டையை வறண்டு போகச் செய்தது. கால்களை  பற்றியிருக்கும் அன்னையின்  கரங்களை  விலக்கி முதியவனை ஓட எத்தனித்து முடியாததால் அன்னையை அடிக்கத் தொடங்கியது.
"எனக்கென வந்து தொலைந்தது பார்! சவமே! உன் அப்பன் தான்  அடிக்கிறான் என்றால் ஒரு வயது முடிவதற்குள் நீயும்  என்னை அடித்தே கொன்று விடு" என்று திட்டிவிட்டு மடியில்  குழந்தையை மடியில்  எடுத்துப் போட்டுக் கொண்டாள். புரியாது வெறித்த விழிகளால் அன்னையை நோக்கியது குழந்தை. பின் நெஞ்சதிர்ந்து அழத் தொடங்கியது. "ரோ ரோ ரோ யாரு யாருடா என் தங்கத்தை அடித்தது. இல்ல இல்ல அழக்கூடாது அழக்கூடாது" என சமாதானப்படுத்தத் தொடங்கினாள் அன்னை.
"தண்ணீர்" எனக் கேட்டவாறே தன் பின்னே மண்டபத்திலிருந்து சரிந்து விழும் முதியவனை அப்போது தான்  கண்டாள் விறலி. மற்றவர்களும்  கண்டு விடவே மீண்டும்  முதியவனை மண்டபத்தில்  தூக்கி அமர வைத்தனர். அவர்கள்  மொழி முதியவனுக்கு  புரியவில்லை. விழித்த போது போர்த்தப்பட்ட தன் உடலுக்குள் தான்  உயிரோடிருப்பதை முதியவன் அறிந்தான். மது அருந்திக் கொண்டிருந்த பாணர்களும் விறலியரும் போதையின் உச்சத்தில்  அடித்துக் கொண்டும்  வசை பொழிந்து கொண்டும்  கூவிச் சிரித்துக் கொண்டும்  விளையாடியவாறு இருந்தனர். சில கைக்குழந்தைகள் காரணம்  புரியாமல்  கைகளை கொட்டிக் கொண்டு  சிரித்தன. முதியவனின் விழிகளில் எதையோ நினைத்து கண்ணீர்  வழிந்தது. அக்கண்ணீர் சில  கணங்களில்  அவனை சூழ்ந்திருந்த அனைத்தையும்  கரைத்தழித்தது. விசும்பலென தொடங்கிய  அழுகை ஓலமெனப் பெருகியது. விரும்பிய பொருள்  பிடுங்கப்பட்ட குழந்தை போல அவன் அழுதான். மீட்டுக் கொள்ள முடியாத அதிர்ச்சியே அழுகை. அழுந்தோரும் மீள்கிறோம் என்றொரு எண்ணம்  அப்போதும் அவன் ஆழத்தில்  எழுந்தது. முதலில்  தயங்கி நின்ற விறலியரில் ஒருத்தி அவன் அழுகை உச்சம் தொடவே தாளாது எழுந்து சென்று அணைத்துக் கொண்டாள். நீர்பெருக்கில் சிக்கிய உலர்மரமென அவளை அவன் பற்றிக் கொண்டான். ஆறடி உடல் கொண்ட குழந்தையை அணைத்திருப்பாதாக அவள் உணர்ந்தாள். தன் மகவை அணைத்திருக்கும் போது  எழும் ஊற்றெடுப்பு தன்னுள் நிகழ்வதை அவள் உணர்ந்தாள்.
"அய்யனே! அழாதே! இல்லை  அழு முழுமையாக  அழுது விடு! எத்துயரெனினும் இவ்வணைப்பு உன்னுடன்  இருக்குமென எண்ணிக் கொள். நீ குழந்தையெனில் உன்னை அள்ளி முலை சேர்த்திருப்பேன். ஆணெனில் என்னுடலுடன் உன்னுடலை இணைத்துக் கொண்டிருப்பேன். நீ என் தாதை! ஏது செய்வேன்! தாதையே உன் துயர் ஏதென நாங்கள்  அறியோம். நோய் கண்டு மருந்து சொல்ல நாங்கள்  மருத்துவர் அல்ல. பாணர்கள். நோயறியாது நோய் மூலம் தீர்க்கும்  எங்கள்  பாடல் என்கின்றனர் கேட்போர். மதிழ்யத்தின் அரசன் செவிகளில்  முதலில்  ஒலிக்க வேண்டுமென்றே இப்பாடலை இயற்றி பல காத தூரம்  நடந்தோம். என் தாதையே இன்று அறிகிறேன். அவன் இதனை முதலில்  பெற தகுதி அற்றவன். உன்னிடம்  வைக்கிறோம். உன் குன்றாப் பெருந்துயரை எங்கள்  அழியா சொற்கள்  நீக்கி விட முயலும். முயன்று முயன்று ஆயிரமாயிரம்  ஆண்டுகளாய் தோற்றுக் கொண்டிருக்கின்றன எங்கள்  சொற்கள். இருந்தும்  நாங்கள் முயல்கிறோம். நிழலை பிடிக்க ஓடும்  உடலென உலகின் துயர் பின்னே ஓடுகின்றன எங்கள்  சொற்கள். பாணர்களே! விறலியர்களே! எழட்டும்  நம் கிணைகளும் துடிளும்! தாதையின் தூய துயர் போக்க" என்றவள் சொன்ன பின்னே தன் சொற்களை எண்ணினாள். ஏது சொன்னோம் என அறியாதவளாய் விழி திருப்பினாள். அவளெதிரே முது விறலி கண்களில்  கண்ணீர்  வழிய  நின்றிருந்தாள்.
அழுகை குறைந்து விம்மல்கள் அடங்கி உடல் தளர்ந்து பாடலை கேட்கத் தொடங்கினான் அரிமாதரன். விறலியின்  குழந்தை அவன் மடியில்  இருந்தது.

No comments:

Post a Comment