Friday 22 July 2016

பெருஞ்சுழி 35

படகின்  அமர முகப்பில்  அமர்ந்து வேடிக்கைப் பார்த்து வந்தான் இரண்டரை வயது சிறுவனான வன்தோளன். எவர்தொடாமேட்டின் கிழக்கில்  உற்பத்தியாகும்  மதீமம்  சுனதபாங்கத்தின்  வழியாக தனல்வனம்  மிதஞ்சிகம்  தென்நுழைபுனல்  வழியாகப் பாய்ந்து  கடலில்  கலக்கும். மிதஞ்சிகத்திற்கு நட்புமுறைப் பயணமாக சென்றிருந்தது சுனதபாங்கத்தின்  அரசு நிரை. ஒரு வயதிலிருந்தே ஆசிரியர்களையும்  அமைச்சர்களையும் பார்த்தே வளர்ந்திருந்தான் வன்தோளன். சிறுவர்களின் பொருளில்லாப் பேரின்பங்களை அறியாத குழந்தையாய்  வளர்ந்தான். உப்பரிகையிலிருந்து எட்டிப்  பார்க்கையில்  ஒருவேளை  உணவிற்கும்  வழியில்லாத சிறுவர்கள்  கையில்  விளையாட்டுப்  பொருட்கள்  ஏதுமின்றி கூவிச் சிரித்து விளையாடுவதை அவனால்  புரிந்து கொள்ள முடியவில்லை.

மிதஞ்சிகத்தின் அரண்மனை  சிறுவர் நிரை அவனை உள்ளிழுத்துக்  கொண்டது. தன்னுள்  இருந்து வெளிப்படும்  துள்ளலையும் மகிழ்வையும்  இன்னொருவன்  என உவகையுடன்  பார்த்து நின்றான் வன்தோளன். அகல்யை  அவற்றை விரும்பவில்லை. சுனதபாங்கத்தின் கரை நெருங்கிய போது அமர முகப்பில்  துள்ளலுடன் அமர்ந்து கால்களை  ஆட்டிக் கொண்டிருந்தவனை ஆற்றில்  தூக்கி வீசி எறிந்தாள். ஆறு வயது சிறுவனின்  உடல் நீளம் கொண்டிருந்தாலும் அரண்மனையின் நீச்சல்  குளங்களில்  பயின்றிருந்தாலும் மதீமத்தில் விழுவது அவன் வயதிற்கு  தற்கொலையே. மூழ்குவதற்கு முன் சில நொடிகள்  அவன் விழிகள் அகல்யையின் விழிகளை சந்தித்தன. தெய்வங்களும் அறியா தனி மொழியில் அவை பேசிக் கொண்டன. விகந்தர்  பதறி ஓடி வந்தார். ஆயிரம்  வீரர்கள்  மதீமத்தில்  இறக்கப்பட்டனர். கைகளை இடுப்பில்  பொருத்தியவாறு கருங்கூந்தல் அலையடிக்க ஆற்றைப் பார்த்து  நின்றிருந்தாள்  அகல்யை. அரச நிரையினர் அவள் மீது வசைகளைப் பொழிந்தனரே ஒழிய அவளை நெருங்கும்  துணிவு யாருக்கும்  இருக்கவில்லை. வீரர்கள்  ஒவ்வொருவராக உளம் சோர்ந்து கரை திரும்பினர். விகந்தரும் துக்கத்தை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியிருந்தார். மதீமத்தின்  ஆழங்களில்  மட்டுமே  கிடைக்கும்  ஒரு மீனை அவர்கள்  முதலில்  கண்டனர். ஐந்தடி நீளம் கொண்ட அதன் தலையை கண்டபோது அதனை சுமந்து வருபவன் வன்தோளன் என யாரும்  எண்ணவில்லை. நீர்க்கொடிகளால் உடலில்  கட்டப்பட்டிருந்த  மீனை அவிழ்த்து எறிந்த பின் ஒருவரையும்  திரும்பி நோக்காது நாகத்தை அஞ்சிப் பதறும்  கூட்டமென மக்கள்  வழிவிட நிமிர்ந்து சென்று அரசணித் தேரில்  ஏறிப் புறப்பட்டான்  வன்தோளன். அதன்பின்  அவனைக் காண்பது  அரிதாயிற்று. சுனதபாங்கத்தின் அடர் காடுகளில்  குடிலமைத்து வில்லும் வாளும் சொல்லும்  பயின்றான் வன்தோளன். சுனதபாங்கத்தின் சிறந்த வீரர்கள்  அவன் பக்கம்  நின்றனர். அவனுடைய  ஆணைகள்  மட்டுமே  அரண்மனை  அடையும்.

ஆதிரை  சவில்யத்தை  கைப்பற்றிய பிறகு வன்தோளனை அவ்வப்போது நாட்டில்  காண முடிந்தது. மாரதிரனின்  அரசி மோதமதி  விகந்தரின் தங்கை. அவள் புதல்வர்களை மூன்று  வருட அகச்சிறைக்குப் பிறகு விடுவிக்க ஆதிரை  உளம் கொண்டிருப்பதாக சவில்யத்தின் தூதுவர்கள்  தகவல்  கொணர்ந்திருந்தனர். அதன் பின்னர்  நடக்கும்  முதல்  அவை கூடலில்  தான் கலந்துகொள்ளவிருப்பதாக வன்தோளன்  விகந்தருக்கு தகவல்  அனுப்பிருந்தான். விகந்தரின் மணிமுடியை  எந்நேரமும்  எடுத்துக்  கொள்ளும் படை பலமும்  மக்களின்  ஆதரவும் இருந்தும்  வன்தோளன்  அரியணை அமர விரும்பவில்லை. விகந்தரை ஈட்டி  முனையில் நிறுத்தவே அவன் அரியணை  கொள்ளாமல்  இருப்பதாக  பேசப்பட்டது.

அழுத்தமான  காலடிகளுடன் பருத்திச் சால்வையை உடலில்  போர்த்தியவாறு இடப்புற மீசையை வலக்கையால் நீவியபடி பீடத்தில்  அமர்ந்தான்  வன்தோளன்.

சாதாரண  அவை நிகழ்வுகளை  விவாதிக்கும்  போதே அனைவருள்ளும்  ஒரு இறுக்கம் பரவியிருப்பதாக விகந்தர் எண்ணினார். முக்கிய  நிகழ்வுகள்  சிற்றமைச்சர்களால் விளக்கப்பட்ட பின் பிரதான  செய்தியான மோதமதியின் மைந்தர்களை சவில்யம்  ஏற்றுக் கொள்ளவது பற்றிய முடிவினை நோக்கி விவாதம் திரும்பியது.

முதலமைச்சர்  காமீயர் "மன்னருடன் ஆழிமாநாட்டின்  பெரு வீரரும்  நம் இளவரசருமான வன்தோளர் அவை அமர்ந்திருப்பதைக் காணும்  பேறு பெற்றவர்களானோம். சவில்யத்தின்  அரசி ஆதிரை  நம் குலம் பிறந்தவரான மோதமதியின்  புதல்வர்களை சுனதபாங்கம்  அனுப்ப விரும்புவதாக தகவல் அனுப்பியுள்ளார். அவை ஒப்புதல்  கேட்டு..."என்று தொடரும் போதே பல குரல்கள்  அவரை மறித்தன.

பிரதானமாக  "அரசி என்றா சொல்கிறீர்கள்?  இரவோடிரவாக மாரதிரன்  தலை வீழ்த்திய தந்திரக்காரி. அவள் மகனை எவனுக்கு  ஈன்றாள் என இன்று வரைத் தெரியவில்லை. சவில்யத்தை விட மும்மடங்கு  பெருந்தேசம் சுனதபாங்கம். இருந்தும்  அவளுடன்  போர் புரிய  எழாமல் பயந்து இருக்கிறோம். நம்மை இழிவுபடுத்தவே மோதமதியின்  புதல்வர்களை இங்கனுப்புகிறாள். இதைக் காரணம்  எனக் கொண்டே சவில்யக் கோட்டத்தின்  மீது படை கொண்டு  செல்வோம்" என்றார்  வணிகர் தலைவரான  புவந்திரர்.

காமீயர்  தொடர்ந்தார். "உங்கள் கோபம்  புரிகிறது  புவந்திரரே. ஆதிரையின்  நோக்கம் என்னவென்று  புரியாமல்  சில மாதங்கள் படை கொண்டு செல்ல சுனதபாங்கம்  தவிர்த்தது  உண்மைதான். ஆனால்  அந்த இடைவெளி ஆதிரைக்கு போதுமானதாக இருந்தது. முப்பக்கமும் நிலங்களால் சூழப்பட்ட தேசம்  சுனதபாங்கம். ஆனால்  சவில்யத்தின்  மேற்கே ஆழி விரிந்து கிடக்கிறது. பெரு நாவாய்கள்  கட்டப்பட்டு இதுவரை ஆழிமாநாட்டில் எத்தேசமும் சென்றதை விட பல மடங்கு அதிக தூரத்திற்கு  சவில்யத்தின்  பயணங்கள்  விரிந்திருக்கின்றன. மேலு‌ம்  தெற்கு வரை அத்தனை  கடலோர நாடுகளிலும்  கடல் வழியாகவே வணிகத்தை  முடுக்கி விட்டிருக்கிறார் ஆதிரை. மாரதிரன் தனக்கு நெருக்கமான  ஒரு குறுங்குழுவுக்கு மட்டுமே  நன்மை விளைவிப்பவராக இருந்தார். அதிருப்தி  கொண்ட பல குழுக்கள்  திருமீடத்திற்கும் ஆநிலவாயிலுக்கும் மாரதிரனை வீழ்த்த படை வல்லமை கோரி தூது அனுப்பின. சுனதபாங்கத்தின்  தலையீட்டால்  மட்டுமே  சவில்யம் நீடித்தது. மாரதிரனை அகற்ற எழுந்த தெய்வமென்றே ஆதிரை  சவில்யத்தின்  குடிகளுக்குத் தெரிகிறாள். மேலு‌ம்  கடல் வணிகம் உயர்ந்ததாலும் புராதன   வணிகக் கட்டுப்பாடுகள் தளர்ந்ததாலும் திறனும்  பொருளும் இருப்பவர் வணிகம்  செய்யலாம் என்ற நிலை சவில்யத்தில்  நிலவுகிறது. கடலோர தேசங்களில்  இருந்தும்  ஏன் சுனதபாங்கத்தில் இருந்தும்  கூட சவில்யம்  நோக்கி குடிகள்  இடம் பெயர்கின்றன. உங்களைப் போன்ற புராதன  வணிகர்களின் அதிகாரத்தை நீக்கினாலே சுனதபாங்கம்  மேலெழ முடியும்  என மன்னருக்கு  பலமுறை  நான்  அறிவுறுத்தி இருக்கிறேன். இப்போது கூட உங்கள்  வணிக முறைகள்  பாதிக்கப்படுவதாலேயே நீங்கள்  கொதிக்கிறீர்களே ஒழிய சனதபாங்கத்தின் மீதான  பற்றினால் அல்ல  என இங்கு  அனைவரும்  அறிவோம். ஆகவே  நடக்க வாய்ப்பிருப்பவற்றைப் பேசலாம்" என நிறுத்தினார்  காமீயர். அவரில் வெளிப்படும்  நிமிர்வு வன்தோளனின் இருப்பால் என அனைவரும்  உணர்ந்தனர். இத்தகைய  நேரடித் தாக்குதலை எதிர்பார்க்காத புவந்திரர்  தலை குனிந்து சொல்லவிந்து அமர்ந்திருந்தார். வன்தோளன் எண்ணும்  வார்த்தைகளை அவையில்  உச்சரிப்பதன்றி தனக்கு  வேறு வழியில்லை  என உணர்ந்தார். வன்தோளனின்  முதன்மைச் சேவகன் அவை நுழைய  அனுமதி கோரினான். அங்கு நடப்பவற்றுக்குத் தொடர்பற்றவனாக மீசையை நீவியபடி சாளரங்களுக்கு வெளியே  பார்த்து  அமர்ந்திருந்தான் வன்தோளன்.

முதன்மைச் சேவகனுடன் கனவில்  மிதக்கும்  விழிகள்  கொண்ட பாணன் ஒருவன்  நடந்து வந்தான். அவையின்  அத்தனை  விழிகளுடன்  அவனே வெறுத்தன. அதற்கு காரணம்  தாங்கள்  ஏதோவொரு  கணத்தில்  இழந்தவிட்ட குழந்தைமை இன்னும்  அவன் விழிகளில்  மின்னுவதே எனத் தெளிந்தனர். அவன் உதடுகள்  முனுமுனுத்த வண்ணமே இருந்தன. அவனை ஒரு பீடத்தில்  அமரச் செய்தான் வன்தோளனின்  முதன்மைச் சேவகன். அன்னையின்  மடியில்   சிரிக்கும்  குழந்தை போல் ஒருக்களித்து  பீடத்தில்  அமர்ந்து கொண்டான். சேவகன் அவையை வணங்கி "அவையீரே நம் இளவரசர்  வன்தோளர் தன் தந்தை இந்தப் பாணனின்  சொற்களை கேட்க வேண்டுமென விழைகிறார். அவை ஒப்புதல்  அளிக்குமா?" என்றான். அதிலிருந்த  அப்பட்டமான  கட்டளை விகந்தரை எரிச்சல்  கொள்ளச் செய்தது. முகத்தை  முடிந்தவரை கனிவுடன்  வைத்துக்  கொண்டு  "ஆகட்டும்" என்றார்.

பாணன் அதற்குள்  உறங்கிப் போயிருந்தான். அவனுடைய  கிணையை மெல்லச் சுண்டினான் தலைமைச் சேவகன். பத்தி விரித்த நாகமென விழிகள் ஒளி கொள்ள எழுந்தமர்ந்தான் பாணன்.

"பசும்பரப்பு. பனிவெளி" கம்பீரமாக  எழுந்தது அவன் குரல். "அவையீரே  அறிக. ஞானம் என்பது  வெண்மை. வீரம்  கருமை. வேகமே செந்நிறம். ஞாலம் என்பது நீலம். இவை அனைத்தையும்  அளிக்கும்  தாய்மையே பசுமை" பாணன் சொன்னான்.

No comments:

Post a Comment