Saturday 30 July 2016

இரண்டாம் இடம் - எம்.டி.வாசுதேவன் நாயர்

மகாபாரதத்தில்  இடம் பெற்றிருக்கும்  ஒரு தொன்மத்தையாவது ஒரு பெயரையாவது அறியாத ஒருவர் நம்மிடம்  இருப்பதற்கான வாய்ப்பு  மிகக் குறைவு. நாமே அறியாமல்  மகாபாரதம்  நம்முடன்  பயணித்துக்  கொண்டே இருக்கிறது  நான்காயிரம்  ஆண்டுகளாக. தொலைக்காட்சிகளின் பரவலாக்கத்திற்கு பிறகு மகாபாரத்தை எண்பதுகளின் இளம் தலைமுறை நீள் தொலைத்தொடர்கள் (Mega serial) வழியாகவே அறியத் தொடங்கியது. தொலைத்தொடர்கள்  மிகத் தீவிரமான  விவாதங்களும் இடைவெளிகளும் நிறைந்த மகாபாரத்தை  தன் வழியே அனுமதிக்க முடியாது. பெரும்  பொருட்செலவில் காவிய நாயகர்கள் பெரும்  மக்கள் திரளை சென்றடையும்  போது அவர்களின்  அத்தனை  கொந்தளிப்புகளையும் மனக்குழப்பங்களையும் அள்ளி வைக்க முடியாது. எனவே  மகாபாரத்தை  ஒட்டி எடுக்கப்பட்ட தொலைத்தொடர்கள்  ஒற்றைப்படையான "நல்லவன்" "கெட்டவன்" சித்திரத்தையே கொண்டிருக்கும். அப்படிப்பட்ட  சித்திரங்களை  உருவாக்குவதன் வழியாக  தர்மனென்றால் நீதி கர்ணன்  என்றால் கொடை அர்ஜுனன் என்றால் வீரம் போன்ற "ஒரு வார்த்தை" விழுமியங்கள்  பரவலாகின. அந்த "விழுமியங்களை" கேள்விக்குட்படுத்தும் எதுவும்  தவறே என எண்ணத் தலைப்பட்டனர் பெரும்பான்மையினர்.

அதே நேரம்  மகாபாரதம்  இன்றைய சூழலில் இந்திய மொழிகள் பலவற்றில்  மொழியாக்கமும் மறு ஆக்கமும்  செய்யப்பட்டது. கிசாரிமோகன் கங்குலியின் ஆங்கில மொழியாக்கம் இந்தியாவைக் கடந்தும்  மகாபாரதம் வாசிக்கப்படுவதற்கு வழி வகுத்தது. பல்வேறு  வழிகளில்  விரித்தெடுக்கக் கூடிய இடைவெளிகளையும் மௌனங்களையும் தன்னுள்  கொண்ட படைப்பு மகாபாரதம்.

எம்.டி.வாசுதேவன் நாயரின் இரண்டாம்  இடம்  ஒரு மலையாள  நாவல். 1983-ல் வெளிவந்தது. தமிழில்  குறிஞ்சி வேலனின் மொழிபெயர்ப்பாக சாகித்திய அகாடமி  வெளியிட்டது. பாண்டவர்கள் ஆட்சியைத் துறந்து மகாபிரஸ்தானம் எனும்  வனம் புகுதலை மேற்கொள்ளும்  சித்தரிப்புடன் தொடங்குகிறது இரண்டாம் இடம். திரும்பி நோக்கக் கூடாது  என்ற நெறியுடன் அவர்கள்  மலை ஏறுகிறார்கள். திரௌபதி  விழுந்து விடுகிறாள். பீமன்  திரும்பி வந்து அவளை நோக்கி நிற்கிறான். அக்காட்சியை தொடக்கமாக கொண்டு பல்வேறு  கேளிக்கை  கதைகளின்  வழியாக  அறிமுகம்  செய்யப்பட்ட பீமனை கதை சொல்லியாகக் கொண்டு இறுதிவரை கருணையும்  கொந்தளிப்பும் கொண்ட ஒரு "எளிய மனிதனாக" அவனை நிறுத்தி மகாபாரத்தை விரித்தெடுக்கும்  முயற்சி  இரண்டாம்  இடம்.

மகாபாரதத்தில்  இடம்பெறும்  தொன்மங்களை முற்றாகத் தவிர்த்து ஒரு கறாரான  நவீனத்துவ பாணியில்  நகரும்  படைப்பு. குந்தியாலும் பின்னர்  திரௌபதியாலும் பீமன் அலைகழிக்கப்படுவதை அவர்களின்  வழியாக  தன் முழுமையை கண்டு கொள்வதை விவரிக்கிறது. சிறு வயது முதலே அர்ஜுனனுக்கு  கிடைக்கும் புகழும்  பெருமையும்  தன் செயல்களுக்கு கிடைக்காததை எண்ணி வருந்தியும் கௌரவர்களால்  அவமானப்படுத்தப்பட்டும் வளர்கிறான் பீமன். துரியோதனன்  அன்புடன்  அழைத்து நஞ்சளித்த பின் நாகர்களிடமிருந்து மீண்டு வரும்  பீமன் இன்னொருவனாக இருக்கிறான். எதிரியின்  மீது இரக்கம்  அற்றவனாக மாறுகிறான்.

அரங்கேற்ற நிகழ்வில்  அவன் விற்திறனை யாரும்  வியக்காதது கண்டு வருந்துகிறான். கர்ணன்  மேல்  வெறுப்பு  கொண்டவன்  எனினும்  குதிரைச்சூதன் என அவன் இகழப்படும் போது அவனுக்காகவும் வருந்துகிறான். அவன் விருப்பங்கள்  புறக்கணிக்கப்படுகின்றன. கருவுற்றிருக்கும் முதல் மனைவி இடும்பியை காட்டில் விட்டு வெளியேறுகிறான். பகனைக் கொல்கிறான். திரௌபதியின் சுயம்வரத்திற்கு  பாஞ்சாலம் செல்கிறான். பீமனின் பார்வையில்  விரியும்  யுதிஷ்டிரனின் சித்திரம் வேறு வகையானது. பயமும்  குழப்பமும்  இச்சையும்  கொண்டவனாக  பீமன் யுதிஷ்டிரனை காண்கிறான். திரௌபதியை ஐவர்  மணங்கொள்வதும் யுதிஷ்டிரனின் இச்சையால் என்றே எண்ணுகிறான்.

ஜராசந்தனை கொன்றதை திரௌபதியிடம் பீமன் விவரிப்பதாக கொண்டு செல்கிறார்  ஆசிரியர்.  அதன் பிறகான கூடலை அவன் விரும்புகிறான். பீமன்  அமைதியாக  ஏற்றுக்  கொள்ள வேண்டியவனாகவே இருக்கிறான். தன் முதல் கடோத்கஜனை நெருங்கவும் விலகவும் முடியாமல் தவிக்கிறான்.

"இக்களத்தில்  இல்லையெனில்  கடோத்கஜனை  நாமே கொள்ள வேண்டியிருந்திருக்கும்" என கடோத்கஜன் கொல்லப்பட்ட பின் கிருஷ்ணன்  சொல்வதைக் கேட்டு அமைதியாக  வெளியேறுகிறான். இறுதிவரை தன்னை உதாசீனம்  செய்தாலும்  குந்தியையும் திரௌபதியையும் அவனால்  வெறுக்க முடிவதே இல்லை.

வாயுதேவனை தந்தையென நம்பி அவனடைந்த பலமனைத்தும் இழந்து போகும்  தருணத்துடன் முடிகிறது  இரண்டாம் இடம். பேராற்றல்  மிக்கவனாகவும் பாண்டவர்களின் முக்கிய  எதிரிகளை நேற் போரில்  கொன்றவனாகவும் உடல் வலுவன்றி வேறெந்த உத்திகளையும் பயன்படுத்தாதவனாகவும் காட்சிப்படுத்தப்படுகிறான் பீமன். பல இடங்களில்  பீமனை  மௌனம்  காக்க வைப்பதன் வழியாகவே அவனை மேலு‌ம்  நெருங்கி உணர வைக்கிறார் ஆசிரியர். திரௌபதிக்காக மலையுச்சியில்  குடிலமைக்கும் பீமன்  அது நிறைவேறாத போது என்ன மனநிலையில்  இருந்திருப்பான் என்பதும்  கர்ணன்  தன் மூத்த சகோதரன்  என பீமன்  மட்டும்  அறிந்து அமைதி காப்பதும்  என மௌனங்கள் வழியாகவே பீமனை உரையாட வைக்கிறார்  ஆசிரியர்.

கிருஷ்ணன்  குறித்து மிகக் குறைவாக சொல்லியிருப்பதும் கௌரவர்களின் தரப்பை முழுமையான  நிராகரிப்பதும் பீமன்  பார்வையில்  கதை நகர்வதால் ஏற்றுக் கொள்ளத் தக்கதே. இருந்தும்  சில இடங்களில்  இன்றைய  சமூக ஒழுக்கக் கூறுகளை அன்றைய வாழ்வியலில்  போட்டுப்பார்ப்பது சற்றே நெருடுகிறது.

வெண்முரசின்   மிக விரிவான நாவல் வரிசைக்குள் நுழைய விரும்புகிறவர்கள் விரைவாகவும் எளிமையான நடையிலும்  சொல்லப்பட்டிருக்கும்  இரண்டாம்  இடம் என்ற இந்நாவலை ஒரு முறை வாசிப்பது நன்றே.

No comments:

Post a Comment