Tuesday 19 July 2016

பெருஞ்சுழி 32

“இப்பெருநிலம் இனி  ஆழிமாநாடு   என்றழைக்கப்படட்டும்” என சுனதன்  உரைக்க  தெரிதர்  தொகுத்த  ஆழிமாநாடு சாசனத்தின்  கூறுகளை  ஆதிரை  உயர்ந்த குரலில்  வாசித்தாள். சுனதர் இறந்த இடம் சவில்யத்தின்  அண்டை தேசமான  சுனதபாங்கத்தின்  மேற்கெல்லையில்  உள்ளது. அவ்விடம்  நீங்கி மாவலியத்தின்  தலைநகர்  பகுதியாக  இருந்த மைய நிலம் நோக்கி மூன்று மாதங்கள்  நடந்தனர் துயரவர்கள். அதற்குள்ளாக ஆதிரை  சுனத சாசனத்தை முழுமையாக  அறிந்து விட்டிருந்தாள். தெரிதர்  மனம் பிசகியவராய் வெறித்த  விழிகளோடு  படுக்கையில்  கிடந்தார். அதன்  கூறுகளை துயரவர்களுக்கு விளக்கத் தொடங்கினாள்  ஆதிரை.
“ஆழிமாநாட்டின் வடக்கெல்லையாய்  உயர்ந்திருக்கிறது  சுனத  வனம்.  நீங்கள்  அறிந்த  சுனத  வனம்  என்பது  ஒரு பெரு மரத்தின் ஒற்றைக்  கிளை மட்டுமே.  அதை  தாங்கி  நிற்கும்  வென்றெடுக்க  முடியாத  பிரம்மாண்டம்  எதிர்காலத்தில்  எவனாலோ வெற்றி  கொள்ளப்பட  காத்திருக்கிறது. அது  எவர்தொடாமேடு  என்றழைக்கப்படட்டும். எவர்தொடாமேட்டின் உச்சியை  கடப்பது  நம் அறிவுக்கும்  ஆற்றலுக்கும்  என்றென்றைக்குமான  அறைகூவல். அவள்  பேரியற்கையின் புதல்வி.  அவள்  பாதங்களில்  உழல்கிறோம்  நாம். அன்னையின்  ஆடை பற்றி  மேலேறும்  மகவென  ஏதோ  ஒருநாள்  அவள் இடையால் சுமக்கப்பட அவள் மார்பினாள் முலையூட்டப்பட அவள்  இதழ்களால் முத்தமிடப்பட அவள் நாசிகளால் உச்சி  முகரப்பட அவள் தோளில் ஏறிக்  கொண்டு  ஆனந்தக்  களியாட நம்மில்  ஓருயிர்  எழும். அதுவரை  பாதங்களில்  பரவிக்  கிடக்கும்  இந்நிலத்தில்  நாம்  விரிந்து  வாழ்வோம். நீரென  வேலி  அமைத்து  நம்மை  சூழ்ந்து  நிற்கிறது  அவள் கருணை. மேற்கு  தேசம்  மாவில்யம்  என்றும்  கிழக்கு   எல்லை  தேசம்  சவில்யம்  என்றும்  தெற்கெல்லை தேசம்  மதிழ்யம் என்றும்  பெயர்  கொண்டு  வகுக்கப்படுகின்றன. தனித்யரின்  குலம்  மாவில்யத்தையும் சுனதனுக்கு  அடுத்த  மாசறியானின்  மகனான  திரன்யன் குலம்  சவில்யத்தையும் சனையரின் குலம்  மதிழ்யத்தையும் அடையட்டும்.” என்று  ஆதிரை  நிறுத்தினாள். 
சுனதன்  ஒவ்வொரு அரசின்  எல்லையையும்  விரிவாக  வகுத்திருந்தான். துயரவரின் எக்குலம் எப்பகுதியை  காக்க  வேண்டும் என்று  தெளிவாக  வகுக்கப்பட்டிருந்தது. சுனதபாங்கம், ஆநிலவாயில், திருமீடம், முகல்வயம் ,தனல்வனம் , மிதஞ்சிகம், சகதீயம், ஞாலானிகம்,தமக்கிரியை,சாகவரனி,சிலவாகம்,திமரநேமம், சவ்யாதிமரி,சக்கிலந்தணம்,சமராபுலம், மாதிரண்யம், மகாவகம், யாமசுக்லம், திசவீர்யம், கர்யம்புலம், கனலாகம், மணிநித்யை, ஆகசுக்ரம்,பவாமனீயம்,நேநிலவாக்யை,மிருத்யபர்வதம், நிகலொளிவாயில்,நேமபஞ்சமம்,நிர்கவநித்யை, நீலொளிநித்யை, நிகாரமசக்யை, ஊச்சரிமத்யம், புனல்புகுபுலம் ஆகிய  நாடுகள்  சவில்யம்  என்றழைக்கப்பட்ட  சவில்யக்கோட்டத்துடன் இணைத்து  கிழக்கு  நாடுகளாக  வகுக்கப்பட்டிருந்தன.
புகாரிகபுரம், மாகவாதனம், மண்டில்யம்,தென்நுழைபுனல்,திராடவித்யை,சக்தயம்,சிவலானி, மணற்புலம், மண்யநித்யை,மககுவ்யம், மாக்கியபுலம்,தீர்மபுலம், நிகநிலம், நிம்வானகம்,நிலவாநிலம், மகரிகரணம்,ஒமீரிகவாயில், வாகாரிகை,ஐநீகரன்யை,அகாதிரன்யை,புனலறுசேக்கை,புலவார்தீர்கை,நீத்தவாரிக்கை, நித்யமசேக்கை, நிகழாபுலம்,நேமாதகம்,பல்வியபுலம் என்ற நாடுகளுடன்  மதிழ்யம் இணைக்கப்பட்டு ஆழிமேட்டின்  தெற்கு  நாடுகளாயின.
தெரிமநீன்கை, தென்யாவடம், வளியெழுங்கை, புகவாரிகை,மான்யசன்யம், ஆக்யநித்றை, அகாரிம தீர்மை, புனலவீனம், வாரீந்தகம், அரின்மதேசம், அனித்ர தேசம், புன்யாபுலம், மாகவிதகம்,தண்டனம், ஏயையம்,யாதீரனம்,இங்கீரம், நகாரித்யம், மோதபனின்யை,எட்டிரிவாயில்,கடாம்பிலம், ஈழாதின்யம், ஓங்குரம்யம், தீர்மிகம்,மிவாரகத்யை,நீலாபுனற்புலம,நேய்மநித்யம்,மிகாபுலம்,புனலந்தம், ஆன்யகதேசம்,அதாரதநத்யம்,நகாரிழம், நன்மயபுலம்,நராநிகபுலம்,சீர்மம்,பகநயம்,தாவீர்கம், நாமல்யம் ஆகிய  நாடுகள்  மேற்கு  தேசமான  மாவில்யத்தை சூழ்ந்தமைந்தன.
முயங்கவனம்,அநாதியன்யம்,அகாதிகம், மாகோபர்வயம் மானாதாகிகன்யம்,தேமாநிதன்யம்,எக்கியம்,ஓர்தான்யம்,சாகமரினியம், சலைதாரித்யை,பல்வதேர்த்யை, பாந்தவன்யை,ஆதிபுனலம்,நடுமல்யம், கைவாநிதம், சேக்யபுலம்,வானியத்யை,உர்கனம்,ஔவாநிலம் ஆகிய  நாடுகள்  சுனத வனத்தினை வடக்கெல்லையாய்  கொண்டு  வடநாடுகள்  ஆயின.
ஆதிரை  தொடர்ந்தாள். தீப்பந்தங்கள் காற்றுடன் உரையாடும்  ஒலி உறுமல்கள் எனச் சூழ அவள் குரல்  ஒரு முனையில்  ஆணையிடும் அரசியெனவும் மறு முனையில் அணைத்து முலையூட்டும் அன்னை எனவும் ஒலித்தது.
"துயரவரே கேளுங்கள். இக்காலத்தில்  நிற்கும்  நமக்கு  இறைவனின்  குரல்  கேட்பதேயில்லை. காலங்களை கடக்கும்  கண் கொண்டு பிறக்கும்  மானுடன் நம்மை போலல்ல என்பதாலேயே அவன் நம்மில்  ஒருவன்  கிடையாது. சுனதர் நம்முடன்  வாழ்ந்திருக்கலாம் நமக்காக கண்ணீர்  விட்டிருக்கலாம் ஆனால் அவர் நம்மில்  ஒருவரல்ல. நமக்கு மேலானவரும் அல்ல. அவர் வழி நம்மை இயக்கும்  பெருவிசைகளை  நமக்களித்துச் சென்ற செய்தியை ஏற்பதன்றி செய்ய பிறிது இல்லை  நமக்கு. சுனத சாசனம்  இம்மண்ணில்  நிகழ நாம் கடந்த கொடுமைகள்  பல. மாவலியன் எனும்  பெரு  வீரன் மண் நிகழ்ந்தான். அவன் விழைவால் துயரும்  கண்ணீரும்  அன்றி வேறு காணது பிறந்திறந்தன பல உயிர்கள். சுனதர் எழுந்தார். மாவலியம் வீழ்ந்தது. ஆனால்  இறைவனுக்கு  அதனினும்  பெரிய  நோக்கங்கள் இருந்தன போலும். இறைச் சீற்றத்தால்  நிகழ்ந்த பேரழிவுகளில் நாம் அழிந்தோம். நம் ஆணவத்தால்  நாம் வாழ வேண்டும்  என்ற எளிய ஆதி இச்சையினால் இறையையும் இயற்கையையும்  நிந்தித்தோம். இதோ! நம் நிந்தனைகளுக்கு மறு சொல். சுனத சாசனம்  எக்காலத்திலும்  மீறப்படக் கூடாத இறைவனின்  கட்டளை. இச்சாசனத்தின் மையம் நோக்கிக் குவியவே நம் குலம்  இத்தனை இடர்களை சந்தித்திருக்கிறது. சுனத  சாசனத்திற்கு எதிராக  எழும் எச்சொல்லும் இறைவனுக்கு  எதிரானதே. எழுவோம். இவ்வார்த்தைகளை இந்நிலத்தின் வாழ்க்கையாக்க" என நிறுத்தினாள்.
ஆதிரையின்  விழிகளில்  மின்னிய கனவு  சுகத்யையை  அச்சுறுத்தியது. அதே கனவினை அங்கு சூழ்ந்திருந்த அத்தனை விழிகளிலும் கண்டாள். தெரிதர்  சுனதன்  இறந்த  தினத்திலிருந்து  பித்து  பிடித்தவர்  போலிருந்தார். ஒரு மாதம்  ஆதிரை  சுனத சாசனம்  அன்றி வேறெதுவும்  நினைவற்றவளாய் நிலைத்திருந்தாள். தெரிதர்  நினைவு மீண்டவன்று “குழந்தை” என ஆதிரையின்  தோளில்  கை வைத்தார்.  அமைதியாய்  அவர்  முகம்  நோக்கி  ஆதிரை  திரும்பினாள்.  சொல்ல  முடியாத பேரச்சம் தெரிதருள் எழுந்தது.

No comments:

Post a Comment