பெருஞ்சுழி 38

சபையினர் முற்றமைதி கொண்டிருக்க பாணன் தொடர்ந்தான்.
ஆதிரையின் விழிகள்  விரிந்தவண்ணம்  இருந்தன. அவள் முகம்  கண்ட ஒவ்வொரு சிரமும் தாழ்ந்தது. மல் புரிந்த வீரர்கள்  அடுமனை அமர்ந்த பெண்கள்  கூவிச் சிரித்து விளையாடிய  குழந்தைகள் என அனைவரும் அவளருகே வந்தனர். சந்தேகம்  கொண்டவர்களாய் அவளைப் பின்  தொடர்ந்தவர்களில் சிலர் அவள் கூந்தலை  பிடித்திழுத்தனர். மகோதவன்  எவரையும்  கவனிக்காமல்  சென்று கொண்டே இருந்தான். மூங்கில்  மரங்களை நெருக்கமாக ஊன்றி  குறுக்கும் நெடுக்குமாக  பல தடுப்புகளை ஏற்படுத்தி வீடுகளை  அமைத்திருந்தனர். ஆதிரை  அவர்களிடம்  ஒரு அடங்கிய தன்மை வெளிப்படுவதாக எண்ணிக் கொண்டாள்.  சிறு வேலியைக் கடந்து ஒரு மூங்கில் குடில் தனித்து  நின்று  கொண்டிருந்தது. அங்கிருந்து அமைதி பெருகி வழிந்து அனைத்தையும்  மூடுவது போல் அக்குடிலை நெருங்க நெருங்க மௌனம்  பெருகத் தொடங்கியது. குழந்தைகள்  ஓடி விட்டன. மகோதவன்  முன் நடக்க ஒரு கணத்தில்  தன் பின்னே யாரும்  இல்லை  என்பதை ஆதிரை  உணர்ந்தாள். மகோதவன்  நடையிலும்  துள்ளல்  குறைந்தது. தன்னுள்ளும் ஒரு உதறல்  எழுவதை ஆதிரை  உணர்ந்தாள். ஏன் இந்த நிலையின்மை? பெரும்  நிலைகள் அனைத்தும்  நிலையின்மையால் சமப்படுத்தப்படுவதாக ஆதிரை எண்ணிக் கொண்டாள்.
மகோதவனும் குடிலுக்கு  வெளியே நின்று  விட்டான். ஆதிரை  படலைத் திறந்து கொண்டு உள் நுழைந்தாள். குடில் வெளிச்சமாக  இருப்பதைக் கண்டதும்  தான்  ஆச்சரியம்  கொள்வது ஏன் என வியந்தாள். அக்குடில் இருளடைந்து இருக்கும்  என தான் கற்பனை செய்ததே அதற்கு  காரணமென எண்ணித் தெளிந்தாள்.
"வா ஆதிரை" என்றவாறே தலை நரைத்து பேருடல்  கொண்ட ஒருவர்  ஆதிரையின்  முன் வந்து நின்றார்.
கூர்மதி உடைய ஒருவரை சந்திக்கப்போவதாக எண்ணியிருந்த ஆதிரை தான் ஆதிரை என அழைக்கப்பட்டதும் முறுவலித்தபடி "தாங்களும் என்னை குடி தெய்வம்  என எண்ணி விட்டீர்களா? என் பெயர்  அலங்கை" என்றாள்.
"நீ அலங்கனின்  புதல்வியென அறிவேன். உன் மற்றொரு  பெயரைச் சொல்லி அழைப்பதில்  உனக்கு  வருத்தமிருக்காது என்றெண்ணுகிறேன்" என்று ஆதிரையின்  எதிரே அமர்ந்தார்  முதியவர். ஆதிரை ஒரு கணம்  திகைத்தாள். மறுகணம்  தன்னை திரட்டிக்  கொண்டு  "ஏன் என்னை இவர்கள்  தங்கள்  பேரன்னை என எண்ணுகின்றனர்?" என்றாள்.
"உன் தோற்றம் அப்படி. இங்கு வந்தபோது உன்  வயது தான்  உனக்கு மூதன்னை  ஆதிரைக்கும் இருந்திருக்கும். அவளும்  நீ புறப்பட்ட சுனத வனத்திலிருந்து புறப்பட்டு இவ்விடம்  நோக்கி வந்திருக்கிறாள்  நீ வந்த வழியாகவே. உன் போலவே  அவளும் மெலிந்து வலுத்து வந்திருப்பாள். பாறை புடைப்புகளில் தெரியும்  அவள் போலவே நீ எண்ணப்படுவதற்கு ஒரே வழியில்  நீங்கள்  பயணித்ததே காரணம்  என எண்ணுகிறேன்." என்றார்.
ஆதிரை  வியக்கவில்லை. அவரிடம்  தான்  எதையும்  மறைக்க  முடியாது  எனக் கண்டு கொண்டவளாய் "ஆதிரை  அன்னையின் வாழ்வறியும் விழைவு  உந்தியதாலேயே இலக்கற்று பயணிக்கத் தொடங்கினேன். என் ஊழ் என்னை இங்கு வந்து சேர்த்திருக்கிறது." ஆதிரை. அச்சொற்களின்  பொருளின்மையும் நடைமுறைத் தன்மையும்  அவளையே வெறுப்படைய வைத்தது. ஆனால்  அவரிடம்  சிறப்பாக  சொல்லெடுக்க தன்னால்  முடியாது  என்றும்  அவள் அகம்  சொல்லியது.
"நீ அவளைத் தேடி  வரவில்லை. உன்னைத் தேடி  வந்திருக்கிறாய். தமையனின்  தலை  கொய்து சுனத வனத்தின்  தலைமை ஏற்பதை இலக்கென நீ வரித்துக்  கொள்ளவில்லை. உன்னைக் கட்டுப்படுத்தும்  ஒரு தளை அங்கு எழுந்ததும்  எவ்வுணர்வும்  இன்றி அதனை அறுத்தெறிந்து  முன்னேறினாய். ஆட்சியிலும் உன் மனம் அமையவில்லை. நீ சிறு வயது முதல்  கேட்டு வந்த கதைகளின் நாயகியாக நீயே மாறுவதை நோக்கி நின்றாய். ஆனால்  அவளாகவும் மாறி அமைய முடியவில்லை  உன்னால். அதற்கும் மேல் நீ இருப்பதாக  எண்ணியதாலேயே அவளை முற்றறிய இங்கு வந்திருக்கிறாய். உண்டு செறித்து கடந்து செல்லவே எண்ணுகிறாய் மகளே. அமையாத உயிர்  இங்கு எதையும்  ஆற்றவிட முடியாது." என்றார்.
தன் ஆழ் கனவிலிருந்து எழுந்து வந்து பேசும் உருவென அவரை எண்ணிய மறுகணமே  ஆதிரையினுள் கடுஞ்சீற்றம் எழுந்தது. சீற்றம்  வெளிப்படுவது மேலும்  தன்னை கீழிறக்கும் என எண்ணி "கூறுங்கள்  அன்னையின்  கதையை" என்றாள்.
"இப்பெருநிலம்  முழுதும்  தன் சொல் நிற்பதாக  எண்ணி சுனத வனம்  நுழைந்த ஆதிரையாய் அவள் இங்கு வரவில்லை. கனிந்த மனதுடன்  கருணை என்ற எண்ணம்  மட்டும்  கொண்டவளாய் நடந்த அன்னை வனத்தினை அறிந்தாள். ஊழ்கப் பெரு நிலையில்  மூழ்கியிருந்தான் ஒருவன்  அவள் முன். அவனுள் அவள் சுனதனைக் கண்டாள். தெரிதனைக் கண்டாள். மாவலியனைக் கண்டாள். கனிவும் காமமும்  வேறல்ல என்றுணர்ந்தாள் அன்னை. மிச்சமின்றி  அவனைக் கூடினாள். அன்னை அமைந்தாள். அதன்பின்  தான்  கூடியவனை அன்னைக் காணவில்லை. கருவுற்றாள். தாயானாள். மெல்ல  முதிர்ந்தாள். அக்கனிவின் சுரப்பினை மீண்டும்  உணர்கையில்  அவன் மீண்டு வந்தான். அதே இளமையுடன். ஆதிரை  மகவுகளால்  நிறைந்தாள். கனிந்து விண்ணேகினாள். அவள்  மண் நீங்கிய பிறகு  மண்  நீங்கி முழுமை பெற நினைக்கும்  பெரு வீரர்கள்  மட்டுமே  இங்கு நுழைய  முடிந்தது. அவர்களைக் கூடி இக்குடி வளர்ந்தது. இக்காடு நீங்க அன்னை  எங்களை அனுமதிக்கவில்லை. கருணையும் வீரமும்  ஒருங்கே கொண்ட ஒருவனை குடிக்குத் தலைமை கொண்டு வழி நடத்த பல பயிற்சிகளை ஏற்படுத்தினாள் அன்னை. சில காலங்களில்  பயிற்சிகள் குடிச் சடங்குகளாகி தலைமை உதிரத் தொடர் கொண்டவர்களுக்கானது. இன்றும்  ஆதிபுரம் என்றழைக்கப்படும்  இச்சிறு நிலப்பரப்பு போர்களும் பூசல்களும் இன்றித் தொடர்கிறது. ஆதிரையின்  நோக்கமே அதுதான். நாங்கள்  வென்றெடுக்கப் பிறந்தவர்கள்  என அவள் எண்ணவில்லை. அமைதியாய்  வாழவே எங்கள்  வீரம் எங்களுக்கு  துணை நிற்கிறது. இதற்கு  முன்னும்  சுனத  வனம் நீங்கி இங்கு வந்தவர்கள்  சிலருண்டு. ஆனால்  பேரன்னைக்குப் பின் இளையவளென இந்நிலம்  நுழைபவள் நீயே." என முடித்தார் குடித்தலைவர்.
சில நொடிகள்  மௌனம் நீடித்தது.
"தந்தையே" திடீரென  தொடங்கினாள் ஆதிரை "எரியின் நோக்கம் ஒளி மட்டுமல்ல" என்றாள். ஏன் அதைச் சொன்னோம் என எண்ணி வியந்தாள்  ஆதிரை.

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024