Thursday, 21 July 2016

பெருஞ்சுழி 34

சவில்யத்தின்  மேற்கெல்லை தேசமான  சுனதபாங்கத்தின்  அரசவை முற்றமைதி கொண்டிருந்தது. பேரரசர் விகந்தர் வெண் தாடியை நீவியபடி அவை வாயிலை நோக்கி அமர்ந்திருந்தார். இந்தக் காத்திருப்பு எந்தப் புள்ளியில்  நிகழத் தொடங்கியதென அவரால்  ஊகிக்க முடிவதில்லை. ஆனால்  அதைப்பற்றி  எண்ணத் தொடங்கும்  போதே உடைந்து நொறுங்கப் போகும்  அவர் சித்தத்தை  காப்பதற்காக மூளை அத்தனை  பாவனைகளை பூண்டு கொள்ளும். இருந்தும்  ஒவ்வொரு  முறையும்  உடைந்து விழுவார் விகந்தர்.
விகந்தரின் தந்தை அகீதரின் ஆட்சி காலத்தில்  சுனதபாங்கத்தின்  பூர்வ குடிகளும் உழவர் குடிகளும்  ஒன்றிணையத் தொடங்கின. மக்கள்  ஒன்றிணைவது மன்னனுக்கு  ஆபத்தாகவே முடியும்  என எண்ணினார்  அகீதர். பட்டத்து இளவரசன் விகந்தனுக்கு சுனதபாங்கத்தின்  பூர்வ குடிகளின் தலைவர் சமித்தரின் மகளான அகல்யை மணம் புரிந்து வைத்து  பூர்வ குடிகள்  தனக்கு நெருக்கமாக  உணருமாறு வைத்துக்  கொண்டார் அகீதர். அகல்யை அவள் பிறந்தது  முதல்  இந்த மண நிகழ்வை நோக்கியே தான்  உந்தப்பட்டிருப்பதை எண்ணி நாணினாள். அவள் குடி பெண்கள்  உதிர வாயில்  திறக்கும்  முன்னரே பனை ஏறவும் கொம்புத் தேனெடுக்கவும் காட்டுப் பன்றிகளை வேட்டையாடவும் கற்றிருந்தனர். அகல்யையின் பாதம் நிலம் படாமல்  அரசியென்றே எண்ண வைத்து வளர்த்தார்  சமித்தர். கொம்புத்தேனை கிண்ணங்களில்  ஊற்றி சுவை பார்க்கும்  அகல்யை அவள் குடிப் பெண்களால்  வெறுக்கப்பட்டாள். அவள் யாரிடமும்  இயல்பாக இருக்க முடியவில்லை. பன்னிரண்டு  பேருக்கு  சமைக்கப்பட்ட ஊன் சோற்றினைக் கூட தூக்கத் தெரியாதவள் எனச் சொல்லி  அவள் அன்னையே அவளை ஏளனம்  செய்தாள். சமித்தரிடம் தன் நிலை சொல்லி  அழுவாள்  அகல்யை. அவரும்  ஆறுதல்  சொல்வார். அதிலும்  ஏளனம்  தொனிப்பதாக அகல்யை எண்ணிக் கொள்வாள்.
விகந்தனை மணம் கொண்டவன்று தன் ஊமை வலிகள் அத்தனையும்  ஓய்ந்து விட்டதாக எண்ணி  மகிழ்ந்தாள் அகல்யை. ஆனால்  அரண்மனை  நுழைந்த சில நாழிகைகளில்  கண்டு கொண்டாள்  அங்கும்  தான் பொருந்திப் போக முடியாதென. சமித்தருக்கு பதில்  அகீதர். அவர் ஒருவரை  மட்டுமே அகல்யை அணுகக்கூடியவராக உணர்ந்தாள். மஞ்சம் நோக்கி நடந்தாள் அகல்யை. அங்கு நிகழப் போவதை எண்ணிய போது அடிவயிற்றிலிருந்து ஒரு குளிரலை எழுந்து தொண்டையை நனைத்தது. ஒரு ஆணின்  உடலை அறியப் போகிறோம் என்ற எண்ணம்  அவளை அழுத்தியிருந்த அத்தனை எடைகளையும் அகன்று போகச் செய்தது. சமித்தர்  அகீதர்  ஏன் விகந்தன் கூட அக்கணத்தில் அவள் நினைவில்  எழவில்லை. கன்னங்களின் மென்மையை உடலின் நெகிழ்வை முலைகளின் நிமிர்வை எண்ணிப் படபடத்தாள். மஞ்சம் நோக்கி நடக்கையில்  கால்கள்  பின்னிக் கொண்டு தடுமாறி விழப் போனாள். மலையருவியின் உச்சியிலிருந்து  குதிப்பதற்கு முந்தைய  பரவசம்  அவள் அங்கங்களில் ஏறியிருந்தது. ஆனால்  அப்பரவசத்தை இன்னொருவன்  தொட்டுத் தூண்ட வேண்டும்  என்றெண்ணிய போது ஒரு நொடி உடல் கூசிச் சிறுத்தது. மனதின் அத்தனை  வாயில்களும் அடைத்துக்  கொண்டன. ஆனால்  அவ்வெறுப்பே உள்ளெரியும் கனலுக்கு நெய் என்றாவதை எண்ணி வியந்தாள் அகல்யை. வெறுப்பு அவள் இச்சையை இன்னும்  பெருக்கியது. முழுமையாக்கியது.
மஞ்சத்தறையின் கதவினை திறந்த போது ஒரு நொடி அவள் மனம்  அவள் காண்பதை நம்பவில்லை. விகந்தனின் மார்பில் பொதுமகள் ஒருத்தி துயின்று கொண்டிருந்தாள். அவள் எச்சில்  விகந்தனின் மார்பில்  வழிந்தது. கண் விழித்த விகந்தன் "நீ நாளைக்கு  வா" என்றான். அகல்யை  மௌனமாய் தலையசைத்து வெளியேறினாள். வாளினை எடுத்து அவ்வரண்மனையில் தென்படும்  அத்தனை  உயிர்களையும்  வெட்டி எறிய வேண்டும்  என்று  வெறி எழுந்தது அவளுள். ஒரு சிறு குழந்தை  அவளை பின்புறமிருந்து தட்டியபடி "அக்கா அக்கா" என்றது. குழந்தையைக் கூட கொன்று விடும் வன்மம் தன்னுள்  ஊறுவதை அகல்யை உணர்ந்தாள். 'நான்  இருக்கக்கூடாது. இருந்தால் சிலர்  எனக்கு இழைத்தவற்றுக்காக பலரை சிதைத்து  விடுவேன். இக்கணமே இறந்தாக வேண்டும். தெய்வங்கள்  சொல்லட்டும் என் நெஞ்சில்  ஊறிய விழைவெனும் கனிவிற்கு பதில்  என்ன என்று?' என உப்பரிகை நோக்கி நடந்தாள். அங்கிருந்து இடப்பக்கம்  திரும்பினால் படைக்கல நிலையத்தைக் காணலாம். அங்கிருந்து குதித்தால் கீழே நடப்பட்டிருக்கும் குத்தீட்டிகளில் உடல் தைக்கும். மெல்ல மெல்ல ஒவ்வொரு  குத்தீட்டியின் உள்ளேயும் உடல் வழிந்து இறங்கும்  என எண்ணிய போது அவள் உடல் சிலிர்த்தது. "தெய்வங்களே" என கை கூப்பி குதிக்கப் போகும்  போது விகந்தன் அவள் கரங்களைப் பற்றி கீழே தள்ளினான்.
அவள் நிதானித்து எழுவதற்குள் ஓங்கி அவள் இடக்கன்னத்தில் அறைந்தான். உதட்டில்  மென் கோடாக உதிரம்  கசிந்தது. "இழி குடி பிறப்பே. இறப்பதென்றால் உன் தந்தை எனக்கு  உன்னை கையளிப்பதற்கு முன் இறந்திருக்க வேண்டும். பட்டத்து  இளவரசனின் மனைவியான பின் இறப்பதற்கும் உனக்கு  உரிமையில்லை" என அவள் தலை பற்றித் தூக்கினான். இடக்கன்னம் சிவக்கத் தொடங்கியிருந்தது. கண்ணீர்  படும் இடங்களில்  அவள் முகத்தில்  வண்ண மாறுபாடு  ஏற்பட்டது. உதடுகள்  ஆத்திரத்தில்  துடித்தன. மார்புகள் ஏறியிறங்கின. மறு கன்னத்தில்  ஓங்கி அறைந்தான். இடப்பக்கம்  உதட்டில் உதிரக் கோடு காய்ந்திருந்து. அவள் முகத்தைத் தூக்கி உதட்டில்  முத்தமிட்டான். உள்ளறைக்குத் தூக்கிச் சென்று  வெறி கொண்டு  அவளைப் புணர்ந்தான். யாருக்கோ நடப்பதோ போல பார்த்து நின்றாள்  அகல்யை. அந்த விழிகளை அரண்மனையில்  யாருமே  சந்திக்க முடிந்ததில்லை. கரு சுமக்க தொடங்கிய பிறகு  அவள் யாரையும்  தன்னை அணுக விடவில்லை.
விகந்தர் ஒரு நாள்  அவளை நெருங்கிய போது "இனி உன் கை என் மேல் பட்டால் உன் குலத்தில்  ஆணென எவனும்  எஞ்ச மாட்டான். இழிமகனே வெளியே செல்" என்றாள். அவள் உறுதியும்  நிதானமும்  விகந்தரை சொல்லிழக்க வைத்தது. அகன்ற தோளுடன் மகனைப் பெற்றெடுத்தாள். தன் பிறந்த அகத்திற்கு முழுதலங்காரத்தில்  அரசணித் தேரில்  மகனை ஏந்திய வண்ணம்  வந்தாள். கனிவென நடித்த வன்மத்தை உடலின் ஒவ்வொரு  அசைவிலும் இழையவிட்டு  தன் குடியின் ஒவ்வொரு  பெண்ணையும்  துன்புறுத்தினாள். அவள் உள்ளுக்குள்  அறிவாள்  அவள் தோழியரின் ஏளனம்  அகன்றிருக்காது என. இருந்தும்  இந்த பாவனை அவளுக்குத் தேவையாக  இருந்தது. சமித்தர் மகவைத் தீண்ட அகல்யை  அனுமதிக்கவில்லை. தன் தண்டனையை வலியுடன் ஏற்றார் சமித்தர்.
மகவிற்கு பெயர்  சூட்டுவதற்கு நிமித்திகர்கள் வந்தனர். அவர்கள்  கூடி முடிவெடுக்கும்  முன்னரே "ஊழினால் கட்டுப்படுத்தப்படுவனே நீங்கள்  அளிக்கும்  பெயரை ஏற்பான். இவன் தன் வலுவால் ஊழையும் கடந்து செல்பவன். தன் வலு எந்நேரமும்  இவன் நினைவில்  நிற்க வேண்டும். ஆகவே இவனுக்கு  நான்  வன்தோளன் எனப் பெயரிடுகிறேன்" என்றாள் அகல்யை.
உடற்தசைகள் புடைத்துத் திமிற சுனதபாங்கத்தின்  அத்தனை  தலைக்கும் மேலெழுந்து நிற்கும்  தோளுடன்  மீசையை நீவியபடி அரசவை நுழைந்தான்  வன்தோளன்.
அனைவரும்  எழுந்து வணங்கினர் அவனை. விகந்தர் தானும்  எழுந்து விட்டிருப்பதை அமரும் போதே உணர்ந்தார்.

No comments:

Post a Comment