Sunday, 31 July 2016

பெருஞ்சுழி 44

ஆயுத சாலையில்  மயங்கிக் கிடந்தான் அரிமாதரன். "தாதையே! அறிக! போரென்பது அழிவு மட்டுமே. எத்தனை  நியாயங்களை  அள்ளிப் போட்டு மூடினாலும் அழித்தெழும் எண்ணம்  மட்டுமே  போர்! அடங்கா வெறி என்பதே போர்! உள்ளுறங்கும் மிருகம் நா சுழற்றி எழுகிறது! கிளர்ந்து விட்ட காமமும்  விடுபட்ட அம்பும் ஒன்றே என்றறிக!" அவன் செவிகளில்  விறலியின்  குரல் கேட்டது. கடலோசை நிறைந்த ஓரிடத்தில்  கல் மண்டபம்  ஒன்றில்  தலை சாய்த்து அமர்ந்திருப்பதாக தன்னை உணர்ந்தான். அதே நேரம்  தன்னை குனிந்து நோக்கும்  ஆதிரையை கண்டான்.
"இளவரசர் நஞ்சளிக்கப்பட்டிருக்கிறார். போர் நெருங்கும்  சமயத்தில்  உங்கள்  உறுதியை குலைக்கவே இச்செயல்  செய்யப்பட்டிருக்கிறது" என யாரோ சொல்வது கேட்டது.  ஆதிரை எழுந்துவிட்டாள்.
"அம்மா அம்மா" என கண்களில்  நீர்  வழிய அவளை அழைத்தான்  அரிமாதரன். "போருடை அணிவித்து அரிமாதரனை ஆயுத சாலைக்கு அழைத்து வாருங்கள். என் தேர் தட்டில் ஒரு பாதுகாப்பான சிற்றிடம் ஒருங்கட்டும். அவன் போரைக் காண வேண்டும். அவனுக்கு  நஞ்சளித்தவன் அறியட்டும்  என் மகன்  களம் காண பிறந்தவன் என" என்றவாறே வெளியே சென்றாள்  ஆதிரை.
"கணபாரர்  இன்னும்  சவில்யம்  நுழையவில்லை  அரசி. வன்தோளன் ஒரு பெரும்  வீச்சில்  சவில்யத்தை கைப்பற்ற நினைக்கிறார். மூன்று திசைகளில்  இருந்தும்  மூன்று  கூட்டு நாடுகளின் படைகளும் நம்மை சூழ்ந்திருக்கின்றன. மேலும்..." என சொல்ல வந்த அமைச்சர்  நிறுத்திக் கொண்டார்.
"தயங்க வேண்டாம். சொல்லுங்கள்  அமைச்சரே" என்றாள் ஆதிரை  கசந்த புன்னகையுடன்.
"மாரதிரனின்  புதல்வர்களை  நாம் இப்போது  விடுவித்தது பெரும்  பிழையாகியிருக்கிறது அரசி. அவர்கள்  தங்கள்  ஒற்றர்களின் வழியே சவில்யத்தின்  படை நிலைகள் குறித்த துல்லியமான  தகவல்களை அறிந்துள்ளனர். கருவிழி கண்டு தைக்கும்  அம்பென வன்தோளனின்  படை நம் படையினரை குலைக்கிறது. தங்கள்  அணுக்கத் தோழி மோதமதி  ஏனோ வாள் கொண்டு தலை அறுத்துக்  கொள்ள நினைத்தார்கள். அவரை மீட்டு மருத்துவ சாலையில்  வைத்திருக்கிறார்கள்"என்றவர் "கருணை கொண்டு வெளியேற்றப்பட்ட தன் புதல்வர்கள்  உங்களுக்கு துரோகம்  இழைத்ததும் பெற்ற பிள்ளையென வளர்த்த அரிமாதரனுக்கு அரண்மனையிலேயே நஞ்சூட்டப்பட்டதும் அவர்களின்  உளநிலையை மிகவு‌ம்  பாதித்திருக்கிறது என எண்ணுகிறேன்" என முடித்தார்.
ஆதிரை  மோதமதியை காணச் சென்றாள்.
விரிந்து கலைந்து கிடந்த கூந்தலுடன்  விழிகளில்  நீர்   வழிய நெஞ்சில் கைகளை கோர்த்துக் கொண்டு கிடந்தாள்  மோதமதி. ஆதிரையை  கண்டதும்  அவள் அழுகை  உச்சம்  தொட்டது. அவள் தலையை வருடிய வண்ணம்  ஆதிரை  மோதமதியின்  அருகே அமர்ந்தாள்.
"ஆதிரை  ஆதிரை என்னை மன்னித்து  விடம்மா. இல்லை. நான்  மன்னிக்கப்படக் கூடாது. இத்தகைய  பிள்ளைகளை பெற்ற என் கருவறையில்  வேல் பாய்ச்சிக்  கொண்டு இறக்கிறேன். என் செல்லம் அரிமாதரனை ஒரு முறை பார்த்தபின் உயிர் விடுகிறேன்" எனச் சொல்லி  மோதமதி  எழ முயல்கையில்  ஆதிரையின்  விழிகளில்  கருணையும்  குழப்பமும்  தீர்ந்து அவள் முகம்  சுடர்ந்தது. தன்னுள்  பரவும்  அச்சத்தை மோதமதி  உணர்ந்தாள். அவள் தலையை வருடிக் கொண்டிருந்த ஆதிரையின்  கை சட்டென்று  நின்றது. உச்சி மயிர் பற்றி மோதமதியை தரையில்  வீசி எறிந்தாள்  ஆதிரை.
"உன் விழிகளில்  மின்னிய கனவுகளை அறியாதவள் என எண்ணியிருந்தாயா என்னை? நம் படை நிலைகள்  குறித்து தகவல்கள்  சுனதபாங்கம் சென்றது உன் புதல்வர்கள்  வழியே அல்ல உன் வழியே. மோதமதி  உன்னால்  உயர்வானவற்றை எண்ணவே முடியாதென நானறிவேன். உன்னை நான்  சிறை கொண்டிருக்கிறேன்  என எண்ணி என்னினும்  உயர்ந்தவனாக நீ எண்ணும்  உன் தமையனின் புதல்வனை கொண்டு என்னை வீழ்த்தலாம் என நினைத்தாய். ஒருவேளை  அது நடந்திருந்தால்  நீ அவனிடம்  அடிமையாய் வாழ நேர்ந்திருக்கும். அடிமையாய் இருக்க உன் மனம்  விழைகிறது. முதலில்  உன் தந்தை அகீதர்  பின் உன் தமையன் விகந்தர் அதன்பின்  உன் கணவன்  மாரதிரன். இப்போது  உன் மருகன் வன்தோளன். சுனதபாங்கத்தின்  இளவரசியாக சவில்யத்தின்  அரசியாக ஒரு நொடி கூட நீ உன்னை உணரவில்லை. நீ அறிந்த சவில்யத்தின்  படை நிலைகள் என்னால்  உருவாக்கி அளிக்கப்பட்டது. அச்சித்திரம் பொய்யென வன்தோளன்  உணரும்  போது  சவில்யத்தின்  படைகள் முழுமையாக  களம் இறங்கியிருக்கும். அரிமாதரனுக்கு  நஞ்சூட்டியதும் நீ தான். அவன் பிழைத்ததும் என்னிடமிருந்து  தப்பவே உயிர் நீக்கம்  செய்ய  எண்ணி இருக்கிறாய். பேரரசி  நீங்கள்  அப்படி  எளிமையாக இறந்துவிட முடியாது. உன்னுடைய  எளிய வஞ்சத்தால் இறந்து கொண்டிருக்கும்  உயிர்களை நீ காண வேண்டும். உன் மருகன்  உன்னை ஒரு பொருட்டென்றே கொள்ளவில்லை  என்பதை நீ அறிந்தாக வேண்டும். வன்தோளன்  எனும்  பெரு வீரனை உன் வஞ்சத்தால்  என் போர்க்களம்  நோக்கித் திருப்பிவிட்டாய். களம் நின்று  முடிவெடுக்கும்  ஆழிமாநாட்டில் எஞ்சப் போவது ஆதிரையா வன்தோளனா என. புறப்படு உள்ளுறங்கும்  மிருகங்களை எழுப்பி விட்டாயல்லவா? விளைவுகளை வந்து பார்" என்றவள்  வாசலில்  தலை குனிந்து  நின்ற வீரனை நோக்கி "யானைச்சங்கிலியால் இவள் உடலை பிணைத்து என் தேர் தட்டில்  போடு" என்றவாறே வெளியே சென்றாள்.
மூன்று  வீரர்கள்  சேர்ந்து  தூக்கி வரும்  யானைச் சங்கிலியை வெறித்தவாறே அமர்ந்திருந்தாள் மோதமதி.

No comments:

Post a Comment