Saturday, 16 July 2016

பெருஞ்சுழி 29

சுகத்யை  மகவுடன் குடியிருப்பு  திரும்புவது  கண்டு  சுனத  வனம்  மகிழ்ந்தது. ஆனால்  அது நீடிக்கவில்லை.  சுனதனும்  மீளாத சமயத்தில்  தனித்யரும்  மாசறியானும்  அடுத்தடுத்து  இறந்தனர்.
அமைதியான  வனமும் நிலையான  உணவும்  மக்கள்  பெருக  வழிவகுத்தன. மலை  விட்டு  கீழிறங்க  பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை. வலுத்தவர்களே மலையில்  நீடிக்க முடியும் என்ற நிலை  உருவானது. கற்றவர்கள்  துரத்தப்பட்டனர்.
சிலர் தாங்களே  இனி சுனத  வனத்தின்  தலைவிதியை  தீர்மானிக்கப்  போவதாய் நினைத்தனர். மாவலியனை போன்று  தங்களை  வீரர்களாக  கற்பனை  செய்து  கொண்டு  போர் அறியாத  குடிகளிடம் அதிகாரம்  செலுத்தினர்.  சுகத்யையிடமும் மாசறியானை முதலில்  காண வந்த முதல் துயவராகிய  நூற்றியிருபது  பேரின்  குடும்பங்களிடமும் இவர்கள்  அதிகாரம்  செல்லவில்லை. 
தினம் தினம்  சுனத வனத்தை  உண்டு  வளர்ந்தாள் ஆதிரை. ஆறு  வயதிலேயே  பன்னிரண்டு  வயதுப்  பெண்ணின்  தோற்றம் கொண்டவளாய் மிளிர்ந்தாள். சுனத வனத்தின்  குடியினர் மலைச்  சரிவுகளில் பரவி  நிலம் நோக்கியும் விரிந்தனர். சுனத வனத்தில்  தங்களை  திறமையானவர்கள்  என நினைத்து  கொண்டிருந்த  சில அசடர்களின் ஆட்சி  நடந்தது. மரத்தாலான  ஒரு அரண்மனையையும் துதிபாடும்  கூட்டத்தையும்  தனக்கென  உருவாக்கிக்  கொண்டனர்.  ஆதிரையின்  இருப்பு  அவர்களை  உறுத்தியது. எட்டு  வயதடைகையில் ஆறடி  வாளால்  ஒரே வீச்சில்  முழு  பனை மரத்தை  மண்ணில்  வீழ்த்தும்  வலுப்  பெற்றிருந்தாள். சுகத்யையையும்  ஆதிரையையும் மற்றும்  நூற்றியிருபது  துயரவரையும் பின்பற்ற  நினைத்தவர்கள்  மலைச்சரிவுக்கு விரட்டப்பட்டு  கடுமையாக  உழைக்க  வைக்கப்பட்டனர் . ஆதிரை  எதையும்  ஏற்கவில்லை. எதையும்  இழக்கவுமில்லை. வலு. மேலும்  வலு. இது மட்டுமே  அவள் எண்ணமாய் இருந்தது. ஆதவனொளியில் மறையும்  நிலவென சுகத்யை ஆதிரையின்  முன் மறைந்து கொண்டிருந்தாள். தன் தந்தையின்  பெயரை ஒரு நாளும்  அவள் உச்சரிக்கவில்லை. சுனதன்  குறித்த பேச்சுகளையே தவிர்த்தாள். அது ஒரு குழந்தை  கோபம்  என்றெண்ணினாள் அவள் தாய்.  பின்னரே அறிந்தாள்  சுனதனை அவள் தனக்குள் காண்கிறாள் என. தான் ஆணாக ஆற்றலாக சதையாக கண்டது போல் ஆதிரை அவனைக் காணவில்லை என சுகத்யை உணர்ந்தாள். கனவுகளில்  சிரிக்கும்  ஆதிரையை சுகத்யையும் அதே கனவில்  பல்லாயிரம்  காத தூரத்திற்கு  அப்பால்  சிரிக்கும்  சுனதனை தெரிதரும்  கண்டனர். பகலில் உடல் நிமிர்த்து இறுகிய முகத்துடன்  வாட் பயிற்சியும் நூற் பயிற்சியும் மேற்கொள்ளும்  ஆதிரை இரவுறங்கையில் கனிந்த குழந்தையென கனவுகளில்  சிரிப்பாள். கண்ணீர்  விடுவாள். சில நாட்களில்  தூக்கத்திலேயே அருகில் உறங்கும்  சுகத்யையை கட்டிக் கொண்டு "எந்தை எந்தை" என முத்தமிடுவாள். சுகத்யையும்  உடன் அழுவாள். குழந்தையின்  விழிகளுடன்  நிலத்தையும்  பருவத்தையும் ஆயும் சுனதன்  இரவினில்  முகம்  இறுகி உறங்குவான். அவன் இதழ்கள்  சொல்லில்லாமல் ததும்பிக் கொண்டே இருக்கும். விழிநீர் காதுகளையும்  பின் மயிரையும்  நனைக்கும். "ஆதிரை  என் சிறு பெண்ணே" என அவன் அழுதபடி புலம்புவதை மூச்சடக்கி விழிநீர்  வார பார்த்து அமர்ந்திருப்பார் தெரிதர். சில  இரவின் ஆழ் கனவுகளில்  தெரிதரின் மடியில்  முகம்  புதைத்து  அழுவான்  சுனதன்.
மாவலியத்தின்  முழு விரிவையும் அறியாதவர்களாய் சுனத  வனத்தின்  எளியவர்களை  மிரட்டி  ஆட்சி  புரிந்தது  ஒரு மூடர்  கூட்டம். சுனதனின்  பேச்சு  ஏறக்குறைய நின்றது.  ஆறுகளையும்  மலைகளையும்  ஏரிகளையும்  புல்வெளிகளையும் பாலைகளையும் புல்லினங்களையும் வல்லினங்களையும் மண்ணையும்  மழையையும்  வானயையும் கடலையும்  பூச்சிகளையும் பறவைகளையும் தன் அறிவால்  பகுத்து  சொல்லாய் தெரிதரிடம் கொடுத்தான். சுனதன்  கால்  பட்ட இடமெல்லாம்  விரியப் போகிறது  வாழ்வென உணர்ந்து  தெரிதர்  அகம்  பொங்கினார். மாவலியரை  வீழ்த்தவும் சுனதனுடன் இவ்வாறு  தெரிதர்  நடந்திருக்கிறார். அப்போது சுனதனிடம்  இருந்தது  உந்துதல்.  இப்போது  அவனை உந்துவது  கருணை.  அறிவு முதிர்ந்து கனிந்த  கருணையென தெரிதர்  எண்ணிக்  கொண்டார்.
ஆதிரை  யாரும்  அடக்க  முடியாதவளாய் வளர்ந்தாள். கனவிலன்றி அவள் கண்கள்  சிவக்கவில்லை. பன்மடங்கு மரியாதை காட்டும்  பாவனையில்  சுனத வனத்தில்  ஆட்சி செய்பவர்கள் என அமர்ந்திருப்பவர்களை நுண்மையாக  அவமதித்தாள். சுனதனால் தான் அங்கு கலகங்கள் மூழ்கிறது என்றனர். அவனை கோழை என்றனர். அற்பன் என்றனர். மாயம் நிறைந்தவன் என்றனர். மாயங்களை ஏவி பெரு வீரரான மாவலியரையும் மாவலியத்தையும் அழித்தான்  என்றனர். எவர்தொடாமேட்டினை  அழிக்க ஏவல் செய்யப் புறப்பட்டிருக்கிறான் என்றனர். ஆதிரை புன்னகைக்கும்  விழிகளுடன்  அவற்றை கேட்டு நின்றாள்.
பன்னிரண்டு  வயது  தொடங்குகையில் அவள் உதிர வாயில்  திறந்தது. சுகத்யையின் முன்நின்று  “புறப்படு. இப்படி  வழி பார்த்து  அமர்ந்திருக்க  நாம்  பிறக்கவில்லை.  என்னை  உன்னுள்  புகுத்தியவனை  காணச்  செல்வோம்” என்றாள்.  இறை கட்டளையென சுகத்யை  அவள் கையைப்  பற்றிக்  கொண்டாள்.  நூற்றியிருபது  துயரவர்  குடும்பமும்  அவள் பின்னே மலை விட்டிறங்கியது. சிலர் பழுத்த முதியவர்கள். துயர் தாளாமல்  அரற்றினர். "மாசறியாரே உம்மை அழிக்கவே வேட்கை கொண்டு கொடும்பாலை  கடந்தோமா? வாழ்வென்பதை யாருக்கும்  மறுக்காத பேரரறத்தான் நீ. முகத்தில்  எழும் கனிவு கூட எதிர் உயிரை அவமதிக்கும்  என குனிந்து நடந்தவன் உன் மகன். நீ மண் நீங்கினாய். உன் புதல்வன் எங்களை நீங்கினான். நூற்றியிருபது  பேரின் குலமும்  மொத்தமாய் சுனத வனம்  நீங்குகிறது. அறம் சென்று தைக்கும்  புள்ளி வெறுமை மட்டும்  தானா? இல்லை நாங்கள்  மன்னிக்கப்படக் கூடாது. மாசறியாரே உம்மைத் தேடி நாங்கள்  வராமல்  இருந்திருந்தால் இன்று உன் குலமும்  எங்களுடன்  சேர்ந்து  மலையிறங்க வேண்டி இருந்திருக்காது. எங்களை மன்னித்து விடாதே" என கூவியவாறே ஒரு பழுத்த முதியவர் ஓடிச் சென்று பாறையில்  மடேரென சிரத்தை முட்டினார். முன் நெற்றி உடைந்து குருதி பீறிட திரும்பினார். இருகரம்  கூப்பியவாறே மண்ணில்  விழுந்தார். சில கணங்கள்  அவர் உடல் இழுபட்டு  அடங்கும்  வரை கூட்டம்  அமைதி காத்தது. பெண்கள்  தலையில்  அடித்துக்  கொண்டனர். சுகத்யை  முகம் பொத்தி அழுதாள். குருதியின் சிவப்பு விழிகளில்  மின்ன ஆதிரை அங்கு  நடப்பதை தாண்டி வேறொன்றை பார்ப்பவள் என நின்றிருந்தாள். வேறு சில முதியவர்களும் ஓடிச் சென்று  முட்டி  மண்டை சிதற இறந்து விழுந்தனர். மேலு‌ம்  சிலர் ஓட முயல இடியென இறங்கியது  ஆதிரையின்  குரல் "நில்லுங்கள்". அடர் இருளில்  மின்னலில் தோன்றி மறையும்  காட்சி என ஓடியவர்கள்  அத்தனை பேரும்  சிலைத்து நின்றனர்.
"இனி இக்கணத்திலிருந்து உடன் வரும் ஒவ்வொரு  உயிருக்கும்  நான் பொறுப்பு. இது சுனதனின்  சொல்" என்றாள். மௌனம் பெரும்  நிம்மதியென பரவுவதை சுகத்யை  கண் முன் கண்டாள்.
சுனதன்  தன் பணியை முடித்திருந்தான். “ஆழியே அனைத்தும்  தீர்மானிக்கும்  விசை  என்பதால்  இந்நிலம் இனி ஆழிமேடு என்றழைக்கப்படட்டும்” என அவன்  அறிதலின் இறுதியை தெரிதரிடம் சொன்னான் சுனதன்.

1 comment:

  1. எத்தனை உறுதியும் பலமும் கொண்டு முதியவர் முதல் பிறக்கப்போகும் உயிர் வரை மரணத்தைக் கண்டு அஞ்சாத நெஞ்சினராய் வீறு கொண்டெழச் செய்யும் மாபெரும் படைப்புக்களாய் என் உள்ளத்தில் சித்தரித்து வைத்திருந்தாலும் தொலைவு கடந்த எல்லையறியா முகமறியா ஆழ்மன தந்தை மகள் அணுக்கத்தில் ஆதிரையும் சுனதரும் என்னை கண்கலங்க வைத்துவிட்டார்கள்.

    ReplyDelete