Tuesday, 29 December 2015

கடவுளின் நம்பிக்கை

குற்ற  உணர்வு தோன்றாமல்  சிலரை கடந்து செல்ல முடிவதில்லை . அத்தகைய நிலையில் எழுந்த எண்ணம்

கடவுளின் நம்பிக்கை 

Monday, 28 December 2015

பித்து நிலை

இதன் தலைப்பினை  போலவே இக்கதையும்  ஒரு பித்து நிலையிலிருந்து  எழுதப்பட்டதே . எந்த விதமான  அமைப்பும் அற்ற ஒரு வகை.

Saturday, 26 December 2015

துயர்வினா

     
      இக்கதை  ஒரு வரலாற்றுப்  புனைவிற்கான (historical fiction) முன் முயற்சி  எனச்  சொல்லலாம் . கோரத்தில்  கருணை  கலக்கும்  ஒரு சிறுகதை . இதனை  நேரடியாக  பதிவேற்ற  முடியாததால்  இக்கதையின்  சுட்டியை (link) கொடுத்துள்ளேன் .

துயர்வினா  துளியென்றுணர்தல்


துளியென்றுணர்தல்
நெளிந்து  நகர்கிறது  வாழ்வு
நிதர்சனம்  மறுக்கிறது  நினைவு
கடலின்  விரிவை கைக்குவளையில் அளக்கிறேன்
எந்நிகழ்வாயினும்  எனைக்  கொண்டே  உணர்கிறேன்
கைமீறுகையில் தெரிகிறது  கருணையில்லா காலம்
நெருக்கும்  நகரத்தில்  அறுக்கும்  தனிமையில்
நொறுக்கும்  சிந்தனையில்  வெறுக்கும்  உறவினில்
சிலிர்க்கும்  குளிரில்  தகிக்கும்  அனலில்
பிறக்கும்  சிசுவினில் அழுகும்  சவத்தினில்
உறைகின்றன மானுடம்  காணா  மகத்துவங்கள்
முழுப்பாலை காணும்  நீள்விழி உண்டு
இருந்தும்  ஓரடியே வைக்கின்றன குறுங்கால்கள்
அள்ளிக்  கொள்வதா ?தள்ளி  நிற்பதா?
முயன்று  கடப்பதா ? வேடிக்கை  பார்ப்பதா?
எதுவெனினும்  ஒன்று  புரிகிறது
எதனுள்ளும்  இறுகி  நிறைவதது
அதன்  துளி  நான்
நான்  மட்டுமே  அதுவல்ல
நான் இன்றியும்  அதுவல்ல
பெருநிம்மதியில் விழிக்கிறேன்

துளியென்றுணர்கிறேன்

மழையழுகை

உப்பற்ற கண்ணீராய் உடல்  நனைக்கிறது
ஒவ்வொரு  துளி  மழையும்
கன்னம் வழியும் உன்  கண்ணீர்  தேடி
பின்னோக்கி நகர்கிறது  
என் ஒவ்வொரு  துளி  நினைவும்
                 -----------
மண்  தொடுகையில்  மழை தரும்  சுவை  உணரும்  நாசிகள் போல்
உன் இதழ்  தொடும்  கண்ணீர்  சுவைக்கும்  நான்
                 ----------
வீடற்ற  இயலாமையில்  மழைக்கஞ்சும்
பிச்சைக்காரன்  என
உன் கண்ணீரின் காரணமறியாமல்
அஞ்சுகிறேன்  நான்
                  ----------
தேங்கிய குப்பைகளை அடித்து நகர்த்தும்  அடைமழையென
நெஞ்சம்  நுகர்ந்த  அழுக்குகளை
அழித்துத் துடைக்கிறது
அகம்  நிறையும்  உன்  கண்ணீர்
                  ---------
மேகங்கள்  பிழிந்து  மழை காண நினைத்தது
குழந்தைமைத் தினவு
உன் சோகங்கள் பிழிந்து  கண்ணீர் கண்டது
என் வண்ணக்  கனவு
                    --------
அழகை  ரசிக்காமல்  அழுகை  விரும்பும்
அயோக்கியன்  எனச்  சொல்லும்  என்னை
இவ்வுலகம்
அவர்களிடம்  சொல்
நான்  மழையில்  நனைபவனல்ல
மழையை  நனைப்பவனென்று
                 ____________

அவளவன்

அவளவன்


அவள்  தனிமை


அள்ளிச் சேர்த்த ஆசைகளை காணவில்லை
எப்படித் தொலைத்தேன் என்றென நான் அறியவில்லை
உள்ளுணர்ந்தது தடமின்றி தொலையுமா?
பசி தீர்க்க பார்த்திருக்கும்  பணிகள் முடிந்தன நேற்று
பேருந்தில்  தலைசாய்த்த நேரம் உள்ளிருந்து உருப்பெற்றான் அவன்
எவன்
எப்படிச் சொல்வேன்
நான்  இக்காலப் பெண்ணாயிற்றே
நீ நினைப்பது எதுவெனினும்
எவன் நினைவெழும்போது இதயத் துடிப்பது இரண்டிலக்கம் தாண்டுகிறதோ
எவன் பெயர்  எங்கு கேட்பினும் என் சித்தம்  மொத்தமும் செவியென குவிகிறதோ
எவன் அணுக்கம் என்னை நானென  உணரச்  செய்கிறதோ
அவன் நினைவு  அன்றெழுந்தது
அந்நினைவிற்கு அவனும்  நிகரில்லை
உடலென ஒன்று எனக்கிருந்ததா அப்போது?
காற்றென அவன் நிரம்ப வெளியெனக் கிடந்தேன்
என்னை அழுத்தும் அனைத்தும் துடைத்தெறியப்பட
உடலாய் விழியாய் மொழியாய் என்னைச்
சூழ்ந்தவன் அனைத்தும்  கடந்து நின்றென்னை
நிறைக்கிறான்
என்ன உளறல் இது?
எவ்யுகத்தில் எதைப்  பேசுவது ?
யுகம் எதுவெனில் எனக்கென்ன?
சிரித்துக்  கொண்டே பிறக்கட்டும்  ஒரு குழந்தை
உங்கள்  நாகரிகங்களுக்கு நான் பணிகிறேன்


அவன் நிலைமை


கபடற்ற கருணையாளன்  நானல்ல
மிருகமென உணராத  மனிதனல்ல நான்
இருந்தும் என்ன நேர்கிறதெனக்கு?
எதற்கிந்த மெல்லுணர்வு?
இத்தனை  நாள் இறுமாந்திருந்தது இதைப் பெறத்தானா?
சில பார்வைகளில் கடந்திருக்கலாம்
சில வார்த்தைகளில்  மறந்திருக்கலாம்
உடலிணைதல் மட்டும்  உறவெனக் கொள்ள முடியவில்லை
பசி தீர்க்கவே உணவெனில் சுவையெதற்கு
முலையூட்டலே அன்னையெனில் அணைப்பெதற்கு
வென்று  செல்லவே உலகெனில்
சிரிப்பெதற்கு
தேடலே வாழ்வெனில் தெய்வம் எதற்கு
இதுதான்  நானெனில் அவள் எதற்கு
அவள் இல்லையெனில்  நானெதற்கு


எதிர்கொள்ளல்


இதுவா  அவள் இவனா அது
விழி திறக்கும்  முன்  அனணத்திருக்கும்
குளிரென இருந்தான்
பாலை மணல்வெளியில் ஊற்றெடுக்கும்
சுனையென நிகழ்ந்தாள்
இவளல்லவே அது
இதுவல்லவே அவன்
என்னுள்ளிருக்கும் ஒன்று நிறையாமல் அவன் நிரம்பப் போவதில்லை
நான்  உணரும்  ஒன்றை நுகராமல் அவள்
முழுமை  கொள்வதில்லை
இருமைகள் இணைந்து ஏதுமற்றுப்  போனது
அவனுள்  அவளாகவும் அவளுள் அவனாகவும்

அறிமுகம்

அன்புடன் தோழர்களுக்கு ,
                                                           மிகுந்த தயக்கத்திற்குப்  பிறகு என்னை எடையிடுவதற்காக  இந்த  வலைப்பூவினை  தொடங்கியிருக்கிறேன் . இது தாமதம்  என்பது  எனக்கு  நன்றாகவே  தெரியும் .  என்னுடைய  எழுத்துக்கள் சோதிக்கப்படாமல்  இருப்பது  இனியும்  எனக்கு நல்லதல்ல . விமர்சனத்தை தாண்டி என் எழுத்துக்கள்  உங்கள் மனதில் நிச்சயம் ஏதேனும்  ஒன்றை உருவாக்கும்  என்ற நம்பிக்கை  எனக்கிருக்கிறது. என் எழுத்து அறிவினைத் தாண்டி  மனதோடு உறவு கொள்ளும்  தன்மை கொண்டதாக  இருக்கும்  என்று நம்புகிறேன். தொடக்கமாக  நான் எழுதிய  சில சிறுகதைகளையும் கவிதைகளையும்  உங்கள் முன்  வைக்கிறேன்.  நீங்கள்  கொடுக்கும் பின்னூட்டங்களின்  அடிப்படையிலேயே  என்னுடைய  முயற்சிகளின் திசையை  நான்  நிர்ணயிக்க  முடியும்; என் எழுத்து  கருத்து சொல்வதாகவோ எதையும்  வலியுறுத்துவதவோ  இருக்காது. அவை  நம்முள்  இருக்கும் கேள்விகளையும்  கேவல்களையுமே  பிரதிபலிக்கும் . உங்கள் விமர்சனத்திற்கென  காத்திருக்கும்  சுரேஷ் .
                                                                                          நன்றி