Saturday, 2 July 2016

பெருஞ்சுழி 15

மாவலியரின்  அவை வழக்கத்திற்கு  மாறானது. அவைக்கு மாவலியர்  வரும் வழக்கம்  கிடையாது. நீள் வட்ட வடிவிலிருந்த  அவை மையத்தில்  மாவலியர்  பீடம் எந்நேரமும்  ஒழிந்தே இருக்கும். தலைமை  சேனாதிபதி  அனிந்தரும் முதலமைச்சர்  சமர்வரும் அவை நிகழ்வுகளுக்கு தலைமை கொள்வர். மன்னனின்  அரியணைக்கு பின் புறம்  கருநிற திரைச்சீலைகள் படபடத்துக் கொண்டே இருக்கும். அதில்  தெரியும்  புள்ளிகள்  மாவலியரின்  விழிகள். அதன் அசைவு அவரின்  சொல். அவர் இருப்பை உணராத ஓரசைவும் அவையில்  எழுந்ததில்லை. மாவலியர்  தங்கள்  ஒவ்வொருவரின்  வார்த்தையையும் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம்  எக்கணமும் அவையில்  இருந்து கொண்டே இருந்தது.
புகழ் மொழிகளை மாவலியர் விரும்புவதில்லை. நிதி அறிக்கைகளையும் குற்ற அறிக்கைகளையும் அரசாங்க கையிருப்பையும் அவை உரைப்போன் சொன்னான். பல்வேறு மூலைகளிலிருந்து எழுந்த குற்றங்கள்  குறித்தும்  தண்டனை குறித்தும்  அறிவிக்கத் தொடங்கிய போது அவை சோர்ந்து ஒளியெழுப்பத் தொடங்கியது. மிக நீண்ட பட்டியலாகவே அது இருக்கும். மாவலியர் நிலையாக அமர்ந்து  ஆட்சி செலுத்த தொடங்கிய போது இருந்த நீளத்தை விட பட்டியல் நீளம் வெகுவாகவே குறைந்துவிட்டது. இருந்தும்  ஆட்சிப் பரப்பின் எல்லா மூலைகளிலிருந்தும் தகவல் குவிவதால் பட்டியல்  நீண்டே இருந்தது. சமர்வரில் ஒரு மெல்லிய  நிலையழிவு நிகழ்ந்தது. குறிப்பிட்ட  ஒரு நிகழ்வை அறிவிப்போன் உரைத்த போது அந்த நிலையழிவு பெருகியது. மாவலியரின்  அறையிலிருந்து  உத்தரவு  ஏதும்  வராதது கண்டு சமர்வர்  மெல்லத் தளர்ந்தார். அவை நிகழ்வுகள்  முடிந்ததும் சம்பிரதாயமாக அவை முடிந்ததை அறிவிக்க மாவலியரிடம் சென்றார்  சமர்வர். அன்றைய நிகழ்வுகள்  முடிந்ததாலும் வலுப்போர்  களத்தில்  நடந்த சம்பவத்தை  மாவலியர் அறிந்து கொள்ளாததாலும் சமர்வரின்  நடையில்  ஒரு துள்ளல்  தெரிந்தது.
மாவலியரின்  அறையினுள்  நுழைந்தார்  சமர்வர் . எப்போதும்  போல்  அவர் கணிக்க முடியாத இடத்திலிருந்து மாவலியர் வெளிவருவார் என நினைத்திருந்தார். அந்த அறையின்  தூய்மையும் அமைதியும் முற்றொழுங்கும் அங்கு நுழையும்  யாரையும்  பதைக்க வைக்கும். அங்கிருக்கும்  பொருள்களின் ஒழுங்கையே மாவலியர் உடலும்  பிரதிபலிக்கும். பொருட்களின் நிச்சயத்தன்மையே அவை உயிரற்றவை என்பதற்கு சான்று. மாவலியரும்  அப்படியொரு பொருளாகவே பார்ப்பவருக்கு தென்படுவார். உயிரில் வெளிப்படும் அசைவுகள்  எதுவுமே அங்கு பெருங்குற்றம் என்ற உளநிலையை அந்த நிலைத்த அறை உருவாக்கும். இதழ் பிரியும் ஒலி கூட ஒழுங்கின்மை என ஒலிக்கும்  கூடம் அது.
ஆனால்  அன்று  மாவலியர் தன் பீடத்தில்  உடல் நிமிர்த்தி அமர்ந்து ஏடுகளை புறட்டிக் கொண்டிருந்தார்.
சமர்வர்  உள் நுழைந்ததும்  "மலையிலிருந்து  இருந்து கதைகளாய்  வந்து கொண்டிருந்தவன் மண் நிகழ்ந்து விட்டான்  அல்லவா?" என்றார்.
சமர்வர்  ஒரு நொடி அதிர்ந்தார். மறு நொடி தளர்ந்தார். மாவலியருக்கு மேல் தன்னால்  அரசு சூழ்கையில் ஈடுபடவே முடியாதென உணர்ந்து அவருள் ஒரு சீற்றம்  எழுந்தது.
"ஆம் அரசே திரன்யம் என்றொரு கடலோர சிற்றூரிலிருந்து தப்பியிருக்கிறான். அவன் தன் பெயரை சுனதன்  என பதிந்திருக்கிறான். சுனதன்  குறித்த கதைகளை கேட்ட ஒரு  இளைஞனாக  அவன் இருக்க வேண்டும். ஏதோ வீரச் செயல் புரிவதாக நினைத்து அப்படி செய்திருப்பான். சதுப்புக்  காட்டினைத் தாண்டி அவன் சென்றிருக்க முடியாது  அரசே. அவன் ஏதும்  செய்வதற்கு முன் தடுத்து விடலாம்." அவ்வார்த்தைகளில் தொனித்த அதீத நம்பிக்கையே சொல்கிறவர் அவற்றை நம்பவில்லை  என உரைத்தது.
"அவன் ஏற்கனவே  செய்துவிட்டான் சமர்வரே. நீர் நன்கறிவீர் மாவலியம் அதன் அரண்மனையின் பெரும் மௌனம் உருவாக்கும் பேரச்சத்தால் ஆளப்படுகிறது என்று. மௌனம் உருவாகவே அனைத்தும் அசைவின்றி அடங்க வேண்டும். அது நீங்க ஒன்று அசைந்தாலே போதும். அவ்வசைவினை அவன் நிகழ்த்திவிட்டான்." என்றார். அவர் குரலில்  ஒரு குதூகலம்  தெரிவது தன் உள மயக்கா என அஞ்சினார் சமர்வர்.
"பேரெதிர்ப்புகளை சந்தித்தே பழகியதால் உங்களால்  சிறிதாக  எதையும்  கற்பனிக்க முடியவில்லை." என்றார்.
"அவன் புரவி இருவரை சுமந்து விரைந்திருக்கிறது. அவன் சில அடிகளில்  வீழ்த்திய தெரிதன்  என்பவன் பழுதற்ற வீரனாய் இருந்திருக்கிறான். மாவலியத்தின்  பேரமைச்சர் சுனதனின்  கதை கேட்ட துடுக்கு நிறைந்த  இளைஞன் என அவனை ஊகிக்கிறார். இதுவே போதும்  சமர்வரே நான்  சந்திக்கப் போகும்  ஆகப்பெரும் எதிர்ப்பினை அவனே நிகழ்த்த முடியும் எனச் சொல்ல. நம் திட்டங்கள் விரியட்டும் அமைச்சரே. மாவலியம் பயத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. இறைவனையும் அஞ்சாத ஒருவனால் நாம் எதிர்க்கப்படுகிறோம். நீர் நிறைந்த பெருமடை மாவலியம். முதல் உடைப்பை அவன் நிகழ்த்திவிட்டான்." என்று தனக்குள்  சொல்லியவாறு மாவலியர் உள்ளறைக்குச் சென்றார். அவர் நடையில் ஒரு சிறு மாறுபாட்டினை உணர்வதாக சமர்வர் நினைத்தார். ஆம் மௌனம்  கலைய ஓரசைவு போதும்.

No comments:

Post a Comment