Saturday, 9 July 2016

பெருஞ்சுழி 22

நிகரெடை மட்டுமே  தராசு  முள்ளை நிறுத்தி  வைக்க முடியும். தெரிதர் உணர்ந்தார். ஒரு நாள்  சுனதன்  மீண்டு வருவான் என்று  அவர் நம்பவில்லை  உணர்ந்திருந்தார். மாவலியம் மெல்ல மெல்ல  தன் போக்கினை  மாற்றிக் கொண்டிருந்தது. மதீமத்திற்கு கரையமைக்கும் வேலைகள்  நிறைவடைந்திருந்தன. பதினோறாண்டுகள் கடந்திருந்தன சுனதன்   மாவலியம்  நீங்கி.
அவன் விண்ணடைந்தார் என்றனர் சிலர். இயற்கையில் கலந்தார் என்றனர் பலர். அவன் உருவாக்கியளித்த கட்டுக்கோப்பு மெல்லத் தளர்வதை தெரிதர் புரிந்து கொண்டார். சுனதனை ஆழமாகப் புரிந்தவர்கள்  சூழல் மாறுவதை உணர்ந்தனர். அவனை  அரசனென எண்ணியவர்கள் தங்கள்  இயலாமையை சுனதன்  மீதான  வசைகளாக மாற்றினர். அஞ்சி ஓடிய கோழை என்றனர். நிகர்நிலையற்ற மூடன் என்றனர். ஆண்மையற்றவன் என்றனர். அகங்காரம்  நிறைந்தவன் என்றனர். தெரிதர்  இவர்களுக்கிடையே அமர்ந்து மாவலியத்தை நோக்கி நின்றார்.
பிராந்தியங்களாக பிரித்து ஆளப்பட்டது மாவலியம். ஒவ்வொரு  பிராந்தியத்திலும் எளிதில்  அணுகக் கூடியவனாகவே தலைவன் இருந்தான். ஆனால்  நிலை இறுகுவதை தெரிதர் கண்டார். நிறைவின்மை நிரம்புவதை அவர் அகம் கண்டது. போதவில்லை. இவை போதவில்லை. எவருக்கும்  போதவில்லை. குற்றங்கள்  பெருகின. குறை தீர்க்க இறுதி வாய்ப்பும் அளிக்கப்பட்ட சமூகத்தில்  குற்றம்  நிகழ்வதை தெரிதரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
குடிகள்  தங்களை  பிரித்துக்  கொண்டன. பிரிவு நாளும்  வளர்ந்தது. மேன்மையான வரலாறு  கொண்டவர்களென ஒவ்வொருவரும்  கூச்சலிட்டனர். தண்டனைகள்  பெருகின. மாவலியர் தன்னை நோக்கி சிரிப்பதாக தெரிதர்  உணர்ந்தார். அரண்மனைக்  காவல் வீரர்களின்  எண்ணிக்கை  பெருகியது. மன்னரென யாரும்  அரியணை  அமராமலேயே ஆளப்பட்டது மாவலியம். இலக்கற்று பயணிக்கிறோமா என்ற  எண்ணம்  எழுந்ததுமே  கலந்தாலோசித்து தானே  முடி சூடுவதென தெரிதர்  முடிவெடுத்தார். அவ்வெண்ணம் எழுந்ததும்  இருபதாண்டுகள் பின்னோக்கி ஓடியது மனம். இல்லை. இது அவனளித்த இடம். என்னை தோற்கடித்து எனக்களித்திருக்கிறான் இவ்விடத்தை. நான்  ஏற்கலாமா? என்ற எண்ணம்  தெரிதருள் எழுந்த போதே
"அவசியமில்லை" என பதிலளித்தது சுனதனின்  குரல்.
ஒரு நொடி தெரிதர் அதிர்ந்தெழுந்தார். மறுகணம்  உணர்ந்தார்  அவன் அப்படியே வர முடியும்  என. தெரிதருக்கு எதிரே இருளில்  கிடந்த சிறு பீடத்தில் உடல் நிமிர்த்து அமர்ந்திருந்தார் சுனதர்.
நீள் மூச்சுடன்  "நீர்  பதினோறாண்டுக்கு முன் உணர்ந்ததை இப்போதே அறிகிறேன்  சுனதரே. மாவலியம் தன் தளைகளை அறுத்து வருகிறது. கனவுகளும்  லட்சியங்களும் மனிதனுக்கு வெறும்  கவசங்கள் மட்டுமே. பெருகியோடும் பெரு நதியின்  முன் அமர்ந்து துளித்துளியாக தன் குடுவையில்  நீரள்ளுகிறோம். குடுவை நிறைந்ததும் வாழ்வும்  நிறைந்ததாக அமைதி கொள்கிறோம். வாழ்வெனும் பெருநதி சலசலவென ஓடுகிறது  நம்மை நோக்கி சிரித்தபடியே" என்றார்  சலிப்புடன்.
"உளறுகிறேன்" என சிரித்தபடியே தலையிலடித்துக் கொண்டார்  தெரிதர்.
மலர்ந்த முகம்  மாறாது அமர்ந்திருந்தார் சுனதர். சதுப்புக்  காட்டில் தூங்கிய போது தெரிதர்  கண்ட அதே குழந்தை  முகம். உடல்  முழுக்க  வேர் முண்டுகளென நரம்புகள்  உருண்டு திரண்டு புடைத்திருந்தன. விழிகளில்  ஒளி ஏறியிருந்தது. இறுக்கமும்  குழப்பமும்  அற்ற ஒரு வகை இனிய சோர்வு  அவன் முகத்தில்  தெரிவதாக  தெரிதர் எண்ணினார். முலை பறுகி உறங்கும்  சிறு மகவின் சோர்வு  அது என எண்ணினார். பின் என்ன எண்ணுகிறோம் என எண்ணி நிலை மீண்டார். அவரே தொடங்கட்டும்  என காத்திருந்தார்.
"மைந்தனை அடி தொடர முடியாமல்  அன்னை நுண்மை இழக்கும்  ஒரு நாள்  வரும்  தெரிதரே. மைந்தனும் ஒரு நுண்மையான  பிரிவை அன்னையிடம் ஒரு நாள்  உணர்வான். நான்  உணர்ந்தேன். என்னைக்  கிழித்து அவளிடம்  மீண்டேன். அவள் சொன்னவை உணர்ந்த போது கலங்கி நின்றேன்  தெரிதரே. முப்பக்கம் சமுத்திரத்தாலும் வடப்பக்கம் எவர்தொடாமேட்டினாலும் சூழப்பட்டுள்ளது  மாவலியத்தின்  நிலப்பரப்பு. தெற்கே மாவலியம் தீண்டாத  பல சிற்றரசுகளும் உள்ளன. எவர்தொடாமேட்டினை வழி மறிக்கும்  கொடும்பாலையால் மாவலியர்  நெருங்கவில்லை. அது போலவே தெற்கே உயர்ந்த பெருமலை ஒன்றிருக்கிறது. விகண்யம் என்றும்  விமண்யம் என்றும்  அம்மலையை அழைக்கின்றனர் அம்மக்கள். அவர்கள்  மொழி மாவலியத்தின்  மைய நில  மொழிக்கு வேறுபட்டதென்றாலும் தூரத்தில்  இருந்து  கேட்கையில்  இங்கு  பேசப்படும்  அனைத்து மொழிகளும் ஒரு மாதிரியே ஒலிக்கின்றன"
"மூத்தவரே  ஒரு யாசகம்  கேட்கவே உம்மிடம்  இப்போது  நான்  வந்திருக்கிறேன்" என திடீரென  கை விரித்தார் சுனதர். அதில்  பாசாங்கோ அதீத வருத்தமோ தெரியவில்லை. இனிப்பு உண்பவனை பார்த்து  "எனக்கு" என கபடின்றி சிரித்துக் கை நீட்டும்  குழந்தை போல கை விரித்திருந்தார் சுனதர். தெரிதரின் முகத்தில்  வலிச் சுழிப்புகள் எழுந்தன. யார் மீதும்   எதன் மீதும்  குவியாத ஆத்திரம்  தெரிதரை முட்டியது.
"எந்தையே" என பீடம்  விட்டு விழுந்து சுனதனின்  கால்களை பற்றிக் கொண்டார்.
"ஆணையிடுங்கள். இக்கணம்  தலையறுத்து  விழுந்து இறக்க வேண்டுமா நான்" என ஓலமிட்டார் தெரிதர்.
அவரை மெல்லத் தூக்கி பீடத்தில்  அமர்த்தினார் சுனதர். தெரிதர் சில கணங்கள்  சுனதரை நோக்கியமர்ந்திருந்தார்.
"பெருஞ்சுழி"
"என்ன?"
மீண்டும்  சுனதர்  "பெருஞ்சுழி" என்றார்.
"அன்னையின்  மனதை முழுதறிய முடியவில்லை  தெரிதரே.  ஆனால்  உணர்வும் அறிவும் ஒருங்கே பிணையும்  ஓரிடம்  உண்டு. அவ்விடம்  சொல்கிறது என்னிடம்  ஒரு அழிவிற்கு தயாராகு என்று. புல்லிற்கும் புழுவிற்கும் துயருண்டு என்றறிருந்தும் மனிதத் துயரை போக்குகிறேன் என என் ஆணவத்தை நிறைவு செய்ய நினைத்துத் தோற்றேன். ஒருவேளை இந்த சதுரங்கத்தில்  ஈடுபடாமல்  இருந்திருந்தால் இந்நேரம்  நான் உறுதியாய் அறிந்திருக்க முடியும். உயிர்ப்பித்த அவளுக்கு  ஒன்றில்லாமல் அழித்துத் துடைக்க உரிமையுண்டு. பார்ப்போம் ” என  முடித்தார் சுனதர்.
"பெருஞ்சுழி  என்றால்?"
"சமப்படுத்தும் நிகர்விசை" என சிரித்தார்  சுனதர்.

No comments:

Post a Comment