Thursday 24 May 2018

சாத்தான்

ஆழத்தில் கிடப்பவன்
கூரிய விழிகளால் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறான்
உங்கள் இயல்பின் மீது நான் கருணை கொள்ளும் போது
உங்கள் சிரிப்பினைக் கண்டு  எனக்குள் தாய்மை சுரக்கும் போது
உங்கள் அழகின்மையை அறிவின்மையை நான் பெருந்தன்மையோடு கடக்கும் போது
அவன் கூர்மை சிரிப்பாகிறது
எல்லாம் சரியாகும் என்று உங்கள் தலையை நான் தடவும் போது
தூய ஆடையுடன் உங்கள் அழுக்குடைய நான் தழுவும் போது
உங்கள் சிக்குப்பிடித்த குழந்தைகளை நான் குளிப்பாட்டும் போது
ஏன் ஏன் என்று எக்காளமிடுறான் அவன்
உங்கள் நாற்றங்களை நான் சகித்துக் கொள்ளும் போது
உங்கள் வன்முறையை நான் ஏற்றுக் கொள்ளும் போதாவது அவன் துணுக்குறுவான் என நான் நம்புகிறேன்
அப்போது அவன் மௌனம் மட்டுமே அடைகிறான்
உங்களால் நான் வெறுக்கப்படும் போது
அடிவயிறு அதிர எச்சிலின் துர்மணம் நிறைந்த உங்கள் வாயால் நீங்களென்னை வையும் போது
என்னை நீங்கள் கொல்ல வரும்போது
அவன் அதிர்ச்சியடைகிறான்
நீங்களென்னை கொன்றுவிட்ட பின்பே அவன் கண்மூடுகிறான்
அடுத்த சாத்தானுக்கான விந்துத்துளிகளை வரலாற்றுக் கருவறையில்  திணித்துவிட்ட திருப்தியுடன்

No comments:

Post a Comment