Friday 25 May 2018

பேயாய் உழலும் சிறுமனம் - ஒளிர்நிழல் குறித்து செந்தில் ஜெகன்நாதன்

ஒரு செயலும் செய்யாமல் கண்முன்னே கரைந்துகொண்டிருந்த ஒரு முழு நாளின் நுனியில் மனதைச் சமன் செய்ய நண்பனிடம் இருந்து வாங்கி வந்திருந்த 'ஒளிர்நிழல்' நாவலை வாசித்தேன்.

நாவலின் செறிவான மொழியும், அதனுடைய  மீபுனைவு எனப்படும் Meta-fiction வடிவம் மற்றும் சொல்லும் முறை என பல வகைகளில் இந்நாவல் நல்ல வாசிப்பனுபவத்தை தந்தது.

நாவலின் பல இடங்களில் தமிழ் இலக்கியத்தின் அடுத்தகட்ட படைப்பாளியாக சுரேஷ் ப்ரதீப் வெளிப்படுவார் என்பதையும் உணர முடிந்தது.

நாவல், மனித மனங்களின் பல்வேறு வண்ணங்கள் வெளிப்படும் தருணங்களை சொல்வதாக அமைந்திருக்கிறது. ஏனெனில் மனிதனின் முகம் என்பதும் குணம் என்பதும் மனிதனின் 'மனம்'தான் என்று நினைக்கிறேன். சக்தி, குணா, அருணா, ரகு, இன்னும் சில பாத்திரங்களின் மன தத்தளிப்புகள் மற்றும் எண்ண ஓட்டங்களின் மூலம் நாவல் விரிகிறது.

ஒருவனின் பேராசைக்கும், தொடர்ச்சியான கீழ்மை குணத்திற்கும் கிடைக்கக்கூடிய ஆகப்பெரும் தண்டனை என்னவாக இருக்க முடியும்? மரணமா? மரணத்திற்கு முன்பே கிடைக்கக்கூடிய அதைவிடவும் பெரும் தண்டனை ஒன்று உண்டு. அது அவனைச் சுற்றி உள்ளவர்களின் புறக்கணிப்பு. ஒருவனை புறக்கணிப்பதை விடவும் உயிரோடு இருக்கும்போது கிடைக்கும் தண்டனை வேறெதுவும் இருக்க இயலாது. அப்படியாக பெற்ற தாயும், உடன் பிறந்த சகோதரனுமே ஒருவனை புறக்கணித்து அவனை விட்டு விலகிச் செல்கிறார்கள் எனில் அவன் குணாதியசம் பற்றி யூகிக்க முடிகிறதா? சக்தி என்னும் கதாபாத்திரம் இந்நாவலில் அப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது. தாயும், சகோதரனுமே புறக்கணித்து ஒதுங்கிப் போகும்படி ஒருவன் ஏன் ஆனான்? என்பதை நாவல்  விவரிப்பதாக நாவலை  நினைவில் அசை போடும்போது எண்ணிக் கொண்டேன்.

குணா என்னும் அகத் தத்தளிப்பும், குழப்பமும், குற்றவுணர்வும் கொண்ட இன்னொரு கதாபாத்திரம் அது எதிர்கொள்ளும் அகச்சிக்கல்கள் சிறந்த தருணங்களாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

அருணா என்னும் பெண் கதாபாத்திரம் அதன் மன ஓட்டத்திலும், தன் குறைகளை நியாயப்படுத்த அது முகமூடி அணிந்து கொள்ளும் தருணங்களிலும் அதன் உள்ளம் வெளிப்படுத்துவதை மிகவும் தத்ரூப சித்தரிப்பாக தேர்ந்த சொற்காளால் விவரித்திருக்கிறார் சுரேஷ்.
குறிப்பாக அருணாவும், சக்தியும் உறவு கொள்ளப்போகும் தருணத்தில் இருவரின் மனதையும் சுரேஷ் எழுதியிருக்கும் பக்கங்கள், நாவலின் உச்சம் என்று சொல்லாம்!

பொதுவாக காமம் சார்ந்து எழுதுகிறவர்கள் அதனை ஒரு அதிர்ச்சி மதிப்பீடாக மட்டுமே வைத்து புனையும்போது வாசகனுக்கு சோர்வையே ஏற்படுத்தும் அப்படி இல்லாமல் காமத்தை அடைய முயலுதலில் மனதின் தவிப்புகளை இந்நாவல் எடுத்துரைப்பது சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.

மனிதர்கள் தங்களின் குற்றவுணர்விலிருந்து வெளிவரவும், எப்படியாவது அதன் கறையை கழுவிடவும்  கண்ணீர் சிந்திக் கொண்டே இருக்கிறார்கள், அதை வெறும் சாக்காக மட்டுமே வைத்துக் கொண்டு தொடர்ந்து அவர்கள் மனம் ஒருவித போதை கண்டதாக குற்றச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டேதான் இருக்கிறது. இதை நாவலின்  சில இடங்களில் சிலாகித்து உணர முடிந்தது.

உளவியல் சார்ந்த தருணங்களை வலுவான மொழிகொண்டு, நேர்த்தியான நடையில் சொல்வதன் மூலம் வாசகனுக்கு நல்ல உணர்வெழுச்சி ஏற்படுத்துவதாக இருக்கிறது சுரேஷ் பிரதீப்பின் எழுத்து. அது   தமிழ் இலக்கியத்துக்கு மேலும் பல அற்புதமான படைப்புகளை தரும் என்று நம்பிக்கையோடு அவரின் அடுத்தடுத்த படைப்புகளுக்காக காத்திருக்கிறேன்.

இந்தச் சிறந்த புத்தகத்தை நல்ல வாசிப்பனுபவத்தை விரும்பும் நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

- செந்தில் ஜெகன்னாதன்

  25-5-2018

No comments:

Post a Comment