Wednesday 22 November 2017

உதிர்தல் - கதை

மிகச் சிறிதாக சுதா புன்னகைத்தாள். நிமிர்ந்து பார்க்கவில்லை எனினும் என்னால் உணர முடிந்தது.

நிமிர்ந்த போது அம்முகத்தில் இருந்த புன்னகை அழுத்தி துடைக்கப்பட்டிருந்தது.

"என்னடி" என்றேன். ஒன்றுமில்லை என தலையசைத்தாள்.

"சொல்ல வந்தத சொல்லு"

"அம்மா கூப்டிச்சி"

"என்னையா?"

"என்ன"

"போவேண்டியது தான"

"பயமாருக்கு"

"அடிக்கமாட்டா போ"

"அடிச்சான்னா"

"நீ என்னைய வந்து அடி"

"செரி"

தலையை நொடித்தபடி சுதா ஓடிவிட்டாள். எனக்கு கவனம் குவிவதற்கு சற்று நேரம் பிடித்தது. கொஞ்ச நேரத்தில் சுதா அழும் சத்தம் கேட்டது. பின்னால் ராகினியின் "ம்" என அதட்டும் குரல். சுதா அழுதபடியே ஓடிவந்து "உன்னாலதான் உன்னாலதான்" என என்னை அடிக்கத் தொடங்கினாள்.

"சும்மா தான உட்காந்துட்டு இருக்க. அவளுக்கு ப்ராஜெக்ட் ஒர்க் பண்ண ஹெல்ப் பண்ணா என்ன" என எரிச்சலுடன் கேட்டபடி அலுவலகம் புறப்பட்டுச் சென்றாள். நானும் புறப்பட வேண்டும் வேலையை ராஜினாமா செய்வதற்காக. அந்த எண்ணம் ஒரு குதூகலத்தை அளித்தது. அந்த குதூகலம் வேலையை விட்டு வெளியேறுவதால் மட்டுமல்ல என்று உணர்ந்த போது அது ராகினியை நினைத்துதான் எனப் புரிந்தது. மணமாகி ஐந்து வருடங்கள் ஆகியும் ஆறு மாதங்களுக்கு மேல் ஒரு வேலையிலும் தரித்திருக்க முடியாத என்னை அவள் ஒன்றுமே கேட்டதில்லை. என்னைப் பற்றி பிறரிடம் குறையோ பெருமையோ அவள் பட்டுக் கொண்டதில்லை. நான் அவளின் ரகசியம் என நம்பிக் கொள்வதில் ஒரு திருப்தி ஏற்படத்தான் செய்கிறது.

சுதாவை பள்ளியில் விட்டபின் அலுவலகம் செல்லவும் மனம் வரவில்லை. ராகினியின் அலுவலகத்திற்குச் சென்றேன்.

"எதுக்கு வந்த" என காலையில் முறைத்துச் சென்றதன் தொடர்ச்சியை முகத்தில் தேக்கியவாறு சட்டென கேட்டாள்.

"சும்மா பாக்கதான்"

"பணம் வேணுமா"

"இருந்தா கொடு"

"ஃபைவ் ஹண்ட்ரட் தான் இருக்கு. மேல வேணுன்னா விட்ரா பண்ணிக்க" என ஒரு ஏ.டி.எம் கார்டை நீட்டியபின் பாஸ்வேர்ட் "சுதாவோட பர்த் டேட் அண்ட் மன்த்" என்றாள்.

நான் குழம்புவதைக் கண்டதும் "ஞாபகம் இல்லல்ல" என வெறுப்புடன் சிரித்தாள்.

நான் சொன்னேன். ஆனால் அவள் புன்னகைக்கவில்லை. திரும்பிச் சென்றவளை கூப்பிடத் தோன்றியது. ஆனால் அலுவலகம் வந்துவிட்டேன்.

"வாங்க சார். இன்னிக்கும் லேட்டா" என்றபடியே என் மேலாளர் முன்னே வந்தார்.

"நான் ரிசைன் பண்றேன் முரளி" என்றேன்.

சட்டென முகம் மாறி "ஏண்டா" என்றவன் "காஃபி ஷாப் போவலாம் வா" என்றான்.

"வேண்டாம்"

"என்ன பிராப்ளம் உனக்கு"

"நத்திங்"

"செகண்ட் தாட்?"

"இல்ல"

அவன் தோள் கழுத்தை நெருங்கி வருமாறு உயர்த்தினான். நான் வெளியேறினேன்.

அலுவலகத்தை விட்டு வெளியேறியபோது மனம் வெறுமை அடைந்திருந்தது. மீண்டும் ராகினியின் அலுவலகத்தில் போய் அமர்ந்தேன். ஆனால் அவளை அழைக்கவில்லை. இரண்டு மணி நேரமாக தலையை தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கும் என்னை அந்த வரவேற்பாளினி சற்றே வித்தியாசமாக பார்த்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. மதிய நேரம் அவளும் எழுந்து சென்றுவிட அவ்விடம் முழு வெறுமையை அடைந்தபோது ராகினி என்னை நோக்கி விரைவாக வரும் காலடிகளைக் கேட்டேன். நான் நிமிர்ந்து அவள் முகத்தை பார்க்கும் முன்னே என்னை அறைந்தாள்.

"கெளம்பு" என்றாள்.

நான் தயங்க "நான் ஹாஃப் டே லீவ் சொல்லிட்டேன்" என்றாள்.

வீட்டிற்கு வந்ததும் கைப்பையை சோஃபாவில் வீசிவிட்டு உதட்டில் அழுகையைத் தேக்கியபடி தலையை கைகளால் தாங்கியபடி அமர்ந்துவிட்டாள்.

நான் "அம்மு" என அவள் கைகளைத் தொட்டேன்.தட்டிவிட்டாள். நான் அவளெதிரே தலை குனிந்து அமர்ந்திருந்தேன். அவிழ்ந்த கூந்தலை முடிந்து கொண்டு எழுந்து என்னருகே வந்து இரண்டு முழுக்கைகளாலும் சவரம் செய்யப்படாத கன்னங்களை அணைத்து அவளை நோக்கி என் முகத்தை தூக்கி "என்னம்மா ப்ராப்ளம் உனக்கு" என்றாள்.

என் முகம் கோமாளியைப் போல அவன் கைகளால் நடுவில் சப்பையாகப் போயிருந்தது. அதோடு கன்னங்களை அழுந்தப் பற்றியிருந்தாள். நான் இடவலமாக அவள் கைகளுக்குள் இருந்த என் தலையை அசைத்தேன். கைகளைத் தளர்த்தி நெற்றியில் முத்தமிட்டாள். நான் முகத்தில் எந்த உணர்வு மாற்றத்தையும் காட்டவில்லை போல. கனிவுடன் இருந்த அவள் முகத்தில் மீண்டும் கோபமும் சலிப்பும் படரத் தொடங்கியது. அவள் ஆர்வமில்லாமல் என்னருகே அமர்ந்தாள். நான் அவளது இடக்கையை எடுத்து என் கைகளுக்குள் வைத்துக் கொண்டேன். அதை அவள் கவனிக்காதது போல அலைபேசியை கிளறிக் கொண்டிருந்தது எனக்கு ஏனோ ஒரு உரிமையுணர்வை அளித்தது.

மீண்டும் "அம்மு" என்றேன்.

"டேய் எதுன்னா சொல்றதுன்னா சொல்லு. இல்லன்னா சும்மாரு. சும்மா அம்மு நொம்முங்காத எரிச்சலா இருக்கு" என்றாள்.

"சரி" என்று அவள் கையை விட்டுவிட்டேன்.

"டயர்டா இருக்கியா" என்றேன் சில நிமிட மௌனத்திற்குப் பிறகு.

"ம்?" என கேள்வியுடன் என்னைப் பார்த்தாள்.

பிறகு "ஆம்" என தலையசைத்தாள். அதன்பிறகு நான் ஒன்றும் கேட்கவில்லை. கொஞ்ச நேரத்தில் அலைபேசியில் ஏதோ வேகமாக எழுதியபடியே என் மேல் சாய்ந்தாள். கொஞ்ச நேரத்தில் தோளில் சாய்ந்தவாறே உறங்கிப் போனாள். சோஃபாவில் தலையணையை எடுத்து வைத்துவிட்டு அவள் கைப்பையில் வீட்டை உள்ளிருந்து திறப்பதற்கான மற்றொரு சாவி இருப்பதை உறுதி செய்து கொண்டு சுதாவை அழைப்பதெற்கென பள்ளிக்குச் சென்றேன்.

"அம்மா வரலயா"

"வீட்ல இருக்கா"

"நீ ஏன் வந்த?"

"அம்மா தூங்குறா"

"நீ எதுக்கு வந்த"

"வரக்கூடாதா"

"காலையில அடிச்சா அம்மா சாய்ங்காலம் ஐஸ்க்ரீம் வாங்கித் தரும்"

"ஃபோன் பண்ணி கேப்பமா?"

"தூங்குறான்னு சொன்னியே"

அவளுக்கு இரண்டு எனக்கு இரண்டாக நான்கு ஐஸ்க்ரீம்கள் தின்ற பிறகு "அப்பா இன்னிக்கு என்னோட டீரீட்" என அவள் புத்தகப் பையிலிருந்து ஒரு இருநூறு ரூபாய் நோட்டை எடுத்தாள்.

நான் சற்று துணுக்குற்று "அம்மா கொடுத்துச்சா" என்றேன்.

"ஆமா. இத கேட்டதுக்குதான் என்னைய அடிச்சது"

"நீ ஏன்டி அம்மாட்ட இதெல்லாம் கேக்குற"

"எப்படியும் நீதான் என்ன அழைக்க வருவேன்னு காலைலேயே தோணுச்சு"

அவள் வயதுக்கு அந்த தோணல் எல்லாம் அதிகமெனப்பட்டது.

வீடு பூட்டியிருந்தது. ஆனால் அவள் வீட்டில் இல்லை. இன்றுவரை தேடிக்கொண்டுதான் இருக்கிறோம். ராகினி வீட்டுக்குத் திரும்பவேயில்லை. அதன்பிறகு கிடைத்த வேலையை நான் விடவேயில்லை.

No comments:

Post a Comment