Monday 3 September 2018

ஈர்ப்பு - சில எதிர்வினைகள்

ஈர்ப்பு கதை இணைப்பு

ஈர்ப்பு நெடுங்கதை, தற்கால நவீன வாழ்க்கையின் ஆண், பெண் உறவு நிலைகளின் உளவியல் ரீதியான சிக்கல்களை கூரிய அனுபவச் சித்தரிப்புகளுடன் எழுதப்பட்டிருக்கிறது. கதையின் நாயகன் நடுந்தர வயதை தொடும் வயதில் இருப்பவன். அவனின் வாழ்வில் பெண்கள் அவனை யாரும் பொருட்படுத்தவில்லை. அவனின் பித்தை அறிவை அவர்கள் சுமையாக நினைத்து விலகிவிடுகிறார்கள், ஒவ்வொரு அனுபங்களின் வழியே அவன் அதற்கான காரணங்களை அறிந்துகொள்கிறான். இரைக்காக காத்திருக்கும் மலைப்பாம்பாய் மாறுகிறான். பாய்ந்து குருதி குடிக்கக் காத்திருக்கும் விலங்கு. சிந்து கூரிய நுண்ணுணர்வால் உணர்ந்து அந்த மிருகத்தை தண்டிக்கிறாள்.

அறிவு ஜீவி காதலில் விழமுடியாது. அவன் அகங்காரம் பெண்மையின் காலடியில் வணங்குவதை ஏற்றுக்கொள்ளாது. வணங்காமல் பெருங்காதலை அளிக்க அறிவுஜீவிப் பெண்களும் விரும்புவதில்லை.  Suresh Pradheep

தண்டபாணி முருகேசன்

உங்களது மொழியிலோ, உங்களது பானியிலோ இதை
விமர்சிப்பது கடினம்! ஆனாலும் தமிழில் முழுக்க முழுக்க
புது பாணியிலான கதை இது என்பது, குறைந்த வாசிப்பு அனுபவம் உள்ள எனது அபிப்ராயம்.
சில ஆண்களையும், நிறைய பெண்களையும் உளவியல்
அடையாளத்தைத்தவிர வேறெந்த அடையாளமுமின்றி சித்தரித்திருப்பது
முற்றிலும் புதுமை.
ஆனாலும் பல இடங்களில் பெண்மனதின் பிரத்யேகமான அடையாளங்கள்
பொதுமைப்படுத்தப்பட்டிருப்பது விவாதத்திற்கு உரியது,
அதேசமயம்,நிறைய பெண்களிடத்தில் ஊறிக்கிடக்கக்கூடிய
பொதுவான ஆழ்மன ரகசியங்களை தோண்டித்துருவி விசிறி
அடித்திருக்கிறீர்கள்.
காமத்தை ஒளித்து ஆண் நிகழ்த்தும் காதல் நைச்சியங்கள் பெண்களை
விஞ்சியவை அதனால்தான் பெண் எப்போதும் அச்சத்துடனும்,
எச்சரிக்கையுடனும், நம்பிக்கையின்மையுடனும் நடந்து கொள்கிறாள்.
இந்த கதையின் நாயகனும், ஒரேஒரு பெண்ணின் நம்பிக்கையையேனும்
வஞ்சத்தால்கூட வென்றெடுக்க இயலாத நம்பிக்கை இல்லாதவனாக
இருக்கிறான்.
ஒரு கலைஞனைப்போல சதா மனித மனங்களை உற்றுநோக்கி அதன் கயமைகளை கண்டறிந்துவிடக்கூடிய , ஒரு பெண்ணிடத்தில் முட்டாள்தனமாக கூட காதலில்விழ இயலாத அவஸ்தை நிறைந்தவனாகத்தான் எனக்குப்படுகிறான்.
உங்கள் மொழியில் அவன் ஒரு பொசுங்கையாயிருப்பது
சூழலின் துரதிர்ஷ்டம்தான்.
எனது பார்வையில் இருக்கும் விலகலைக்கூட நீங்கள்தான் குறிப்பிட்டுச்
சொல்லமுடியும். மற்றபடி எவரும் குறைத்து மதிப்பிடமுடியாத அருமையான
முயற்சி.

நந்தி செல்லதுரை

புரிந்திட சற்று கடினத்தன்மை கொண்டிருந்தாலும், கதை என்ன சொல்ல வருகிறது என்னும் சமன்பாட்டை சுற்றியே சகலமும் கட்டமைக்கப்படுகிறது.
   மற்றவர்களிடமிருந்து தன்னை வித்தியாசப்படுத்தி காட்டணும் என்ற பெரும் முயற்சியில் இவ்விதம் புதிது புதிதான உத்திகளைக் கையாள்வது சவாலான விசயம்தான். இதில் உங்களுக்கு வெற்றி கிட்டவே செய்திருக்கிறது.
    * அறை எடுத்து தங்கியிருப்பவன்- வீட்டு கடனை அடைக்க முடியாதவன்
   * அப்பா,அம்மா, உறவினர் இல்லாதவன், நாற்பது வயதை நெருங்கியும் திருமணம் ஆகாதவன் ...... வயதான பெற்றோரைக் கொண்டவன்
   * பெண்களால் வெறுக்கப்படுகிறவன்...... துப்பிய எச்சிலை சூழும் எரும்புகளைப் போல பெண்களால் சூழப்பட்டவன்
    * தான் உண்டு தன் வேலை உண்டு என நினைப்பவன்........ மற்றவர்களுக்கு உதவி செய்பவன்
    * மிக பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டவன் ........ சுயநலவாதி
    * மோசமான நிகழ்வுகளால் நடத்தப் படுகிறவன் ......... பிறந்தநாள் கடந்து விட்டதையெண்ணி ஏங்குபவன்
   * சுயமைதுனம் செய்பவன் ....... நோயாளி
     இப்படி காட்டப்படும் இருவரும் ஒருவரே என்பது என்னுடைய அனுமானம். இது தவறாகவும் இருக்கலாம்.

    சிந்துவை புணர முற்படுகையில் அவன் தன் மேல் சட்டையை கழற்றி விட்டு அவளை முத்தமிடுகிறான். இந்த இடம் கதையில் முக்கியத்துவமானது என நினைக்கிறேன். அவளுக்கு ஏமாற்றமும் எரிச்சலும் உண்டாகும்படியாக அப்பொழுது என்ன நேர்ந்து விடுகிறது. வாசகனை குழப்பி தெளிவடைய வைக்கும் சூட்சமம் நிறைந்த முடிவிது.
  பாராட்டுகள்.... தோழா.

யேசுராஜ்


No comments:

Post a Comment