Monday, 16 January 2017

சில கவிதைகள் - 3

கடவுளர் புணரும் வெளி

எல்லோர் உடலிலும் ஏறியிருந்தது அது

குளிரில்லை என்பதால் வெப்பம் என்றோம் அதை

இன்மை இல்லை என்பதால் இருப்பு என்றோம் அதை

என் கனவுகள் போலன்றி

என் உடலையும் சேர்த்து யாருடலிலும் சட்டையில்லை

யார் கனவும் போலன்றி எல்லோரும் அறிந்திருந்தோம்

எங்கு தொடங்கியது அது என

அச்சிறுவன் சொன்னபோது நம்பவில்லை

நேரில் காட்ட முடியுமா என்றேன்

அல்லது என்றோம்

அழைத்துச் செல்கிறேன் என்றான்

அதிர்ந்த நெஞ்சை அமிழ்த்தி மறைத்து

விருப்பமில்லை என தலையசைத்து

அவனைத் தொடர்ந்தேன்

என் போன்றே  பிறரும் கனவுக்குள் ஒரு கயிற்றை கட்டி

மறுமுனையை பிடித்தபடி அவனுடன் இறங்கினர்

உண்மைதான்

கடவுளர் புணரும் களம் அது

அத்தனை கடவுளும் அங்கே

எண்ணத்தில் மட்டும் மின்னி மறைவது

பேரிருப்பென மூச்சடைக்க வைப்பது

சிற்றுரு கொண்டு சினந்து துள்ளுவது

எண்ண எண்ண

எண்ணெத்திற்கொன்றென

எழுந்து வந்து

பிணைந்து புணர்கிறது

எண்ணாதிருக்கையில்

எண்ணாதே என்பதே எண்ணமென்றாகி எழுகிறது

அஞ்சாதே என எண்ணுகையில்

உடலுக்குள் கை விரிக்கும் பேயென

விரிகிறது பயம்

அருவருக்காதே என்றால்

நத்தையென அத்தனை புலன்களும்

உள்ளொடுங்க சுருங்குகின்றன

திளைக்காதே எனும் போது

சிணுங்கல்

உச்சத்தின் ஒலி

பூ வியர்வை

பெருமூச்சு

மென் சிரிப்பு

முத்தம்

விலகாதே என்றால்

அடுத்த கணம் விலகுகிறது

நீ உருகித் தொழும்

வெறுத்து ஒதுக்கும்

விவாதித்து மறுக்கும்

அல்லது ஏற்கும்

விளையாடும்

காதலிக்கும்

கண்டுருகும்

கட்டுண்டிருக்கும்

ஒவ்வொரு கடவுளின்

உற்பத்தியையும் கண்டவன் நான்

முதிர்ந்து மெலிந்து இறந்த அத்தனை கடவுளுக்கும்

என் வணக்கங்கள்

வலுத்து புணர்ந்து பெருகும்

இன்றைய பெருங்கடவுளருக்கு

என் வாழ்த்து

எழப்போகும்

குட்டிக் கடவுளருக்கு

என் முத்தம்

------

உன்னை நோக்கி நீளும் கை

எல்லா உயிரிலும் எழுகிறது வேட்கை

மேன்மைக்கென

எந்நிலை அடைந்தும்

எவ்வளவு சுருங்கியும்

தரை தட்டித் தாழ்ந்தும்

தன்மானம் இழந்தும்

தவித்துத் துடித்து தாவி ஏற எழுகிறது உள்ளொன்று

நண்பனே தோழியே

உன் கைத்தொட நீளும் என் கரங்களை

எத்தனை நாள் நான் உள்ளிழுப்பது

உன்னை எலும்புகள் நெறிபட அணைக்க

அணைக்கப்பட எத்தனை காலம் காத்திருப்பது

குடித்து பல் இளித்தபடி செல்லும் என் தகப்பனே

உன் ஒயர் கூடை நுனியில் தெரியும் இனிப்பை உண்ணப் போகும்

குட்டிக்கு என் முத்தம்

தோழி உன் முழங்காலை அணைந்தபடி செல்லும்

உன் மூன்று தொடாத மைந்தனுக்கு

என் கிள்ளல்

ஒளிப்புள்ளிகள் மின்னும் விடியல் நதியென

நிமிர்வில் வெட்கம் மின்ன அலைபேசும் தோழியே

உனக்கென் அன்பு

சாகக்கிடக்கும் பொக்கைவாய் பிச்சைக்கார கிழவி

சாக்கடையில் உறங்கும் இளைஞன்

விரைந்தடி வைக்கும் சிறுவன்

திரும்பிச் சிரிக்கும் சிறுமி

முட்டாள் நண்பன்

முன்கோபம் மிகுந்த தோழி

திட்டும் அன்னை

அடிக்கும் அப்பா

திகைக்கும் தமையன்

நழுவும் தமக்கை

சலிக்கும் முதுகிழவி

உங்கள் ஒவ்வொருக்கும்

என் காதல்

நண்பனே நீ அறிவாயா

நீ வெடித்து சிரிக்கையில்

உன் கை பிடித்துலுக்கி

'என்னன்னு சொல்லு என்னன்னு சொல்லு' என நச்சரிக்கும்

அச்சிறுமி நானென

தோழி உனக்குத் தெரியுமா

உன் நாணச் சிவப்பில்

சினத்தின்  நிமிர்வில்

தனிமையின் கலக்கத்தில்

கனிவின் சிரிப்பில்

நீ கை தொட்டு பேச விழையும்

அச்சிறுவன் நானென

நண்பனே தோழியே

எதுவும் சாத்தியமல்ல என்றறிருந்தும்

எதற்கிப்படி எக்காளமிடுகிறது

இந்த மட நெஞ்சு

உங்கள் ஒவ்வொருவரையும்

கை சோர

கண்ணீர் வார

உடற்சூடழிய

உள்ளம் நெகிழ

அணைத்து மகிழ்வதே

வாழ்வின் லட்சியம் என ஒருவன் சொன்னால்

நிச்சயம் சிரிப்பீர்கள் தானே

சிரிக்கலாம்

எதிர்முனையில் இப்படி ஒருவன் இருக்கையில்

------

உனக்கான நான்

உனக்கான பீடம் மறுக்கப்படும் போது

உன் குரல் கேட்கப்படாமலாகும் போது

உன் செயல்கள் ஏளனிக்கப்படும் போது

உன் இருப்பு அவசியமற்றதாகும் போது

உன் கண்ணீரில் உப்புச் செறிவு குறையும் போது

நீ மௌனித்து தனித்தழும் போது

சொல்லென மாற்றாத வேதனையை உள் உணரும் போது

எழுந்து நின்று எதிர் கொண்டே ஆகவேண்டும் எனும்போது

நான் என்னை பிறப்பித்துக் கொள்கிறேன்

நான் நீயே

------

எஞ்சல்

குளக்கரை படிகளில் குளித்துச் சென்ற

உன் காலடித்தடம் உலரும் முன்னே

கண்டதிர்கிறது நெஞ்சு

உன் கூந்தல் உதிர்த்த

ஒவ்வொரு துளி முத்தும்

சென்று விழுந்ததிர்கிறது என் ஆழம்

நீயே உதிர்ந்து சென்றும்

எஞ்சியிருப்பது எது தோழி

மணம் விட்டுச் சென்ற மலர் போல

------

முத்தப் பெருவெளி

எவ்வதிர்வில் கண்டான் அவன் இச்சொல்லை

முத்தம்

இடைவெளியற்றது

இறுக்கமானது

மென்மையில் தொடங்கி

வன்மையாய் புணர்ந்து

மென்மையில் முடிகிறது

முத்தம்

நீர்கொடிகளுக்கிடையில்

நெளியும் நாகங்களென

மென்பஞ்சு சேக்கையில்

பிணையும் உடல்களென

மென்மைகளுக்கிடையில் நெளியும் வன்மை

முத்தம்

முதலும் முடிவுமானதாய்

முயங்கலில் முந்திச் செல்வதாய்

முத்தமன்றி வேறென்ன உண்டு இங்கு

மண்ணை முத்தமிடும் பாதம்

நஞ்சாய் முத்துகிறது நாகம்

மீனை முத்தித் தூக்குகிறது கொத்தி

பொட்டலை குனிந்து முத்துகிறது வெளி

முத்தம்

முத்தத்தில் காலமில்லை

ஆனால்

காலத்தை முத்தமிடுகிறது

கருணையெனும் முத்தம்

கருணையின் இதழ் சிவப்பை

பதறித் துடித்து அழித்து

பல் இளிக்கிறது காலம்

முத்தத்தின் குருதி

காலத்தில் உளர்வதேயில்லை

கருணையும் குருதியும் கலந்து துடிக்கிறது

முத்தம்

முத்தம்

ஒரு மீறல்

ஒரு பதற்றம்

ஒரு தவிப்பு

ஒரு அடக்கம்

ஒவ்வொன்றையும் தொட்டுத் தொட்டு முத்துகிறது

முத்தம் முத்தம் எனத் துடிக்கும்

சித்தம்

பார்த்தல் எனும் விழி முத்தம்

தீண்டல் எனும் விரல் முத்தம்

உணர்தல் எனும் உள முத்தம்

இதில் எவ்விடைவெளியில் நுழைகிறது

உன் இதழ் முத்தம்

முத்தங்கள் மோதும் வெளி

முத்தத்தில் உறையும் இறை

முத்தமேயென்றான நியதி

------

நுழை

கானலென கண்மயக்களித்து

அஞ்சி

தயங்கி

நெளிந்து

படர்ந்து

தழுவி

நதி நிறைத்தோடும்

வெள்ளம் போல்

உள்நிறைகின்றன

உன் சொற்கள்

------

No comments:

Post a Comment