அறிதல் தொடங்கும் கணம்
என் அறிதல் தொடங்கும் கணத்தில் உருமாறுகிறது உலகு எனக்கென்று விடிகிறது இவ்விரவு என்னோடு நடக்கிறது இந்நிலவு ஏதேதோ சொல்கிறது இக்கனவு என் அறிதல் தொடங்கையில் முடிகிறது இச்சோர்வு இருப்பது இல்லாமலாக மட்டுமே இல்லாமலிருக்கையில் இருப்பு தேடியா அலைகிறேன் எவ்வளவு அள்ளியும் எஞ்சுகிறது ஒரு துளி எத்தனை சொல்லியும் மிஞ்சுகிறது ஒருசொல் எஞ்சுவதும் மிஞ்சுவதும் எனதென்று எடுக்கையில் அள்ளியதும் சொல்லியதும் அண்மிக்கையில் எதை எடுப்பேன் எதை தடுப்பேன் சொல்லிவிட முடிவதில்லை சொல்லாமல் விடவும் முடிவதில்லை அறிதலின் ஆழ் அழுத்தத்தில் மூழ்கையில் உணர்வாய் ஆழத்தின் வாசத்தையும் அறிதலின் ஆனந்தத்தையும் அதுவரை உன் கனவை என் உறக்கத்தில் கண்டுகொள் அல்லது கொள்ளாதே