எல்லாச் சாலைகளும் தப்படிச்சான் மூலையை நோக்கி - சிவக்குமார் முத்தய்யாவின் குரவை நாவலை முன்வைத்து
நேரடியான களத் தரவுகள் ஒரு நாவலின் வெற்றியில் எவ்வளவு தூரம் பங்கு வகிக்க முடியும் என்ற கேள்வியுடன் குரவை நாவலை அணுகுவது சரியாக இருக்கும். தமிழில் இதற்கு முன்பு நேரடியான கள ஆய்வுகள் அல்லது தரவுகளை அடிப்படையாகக் கொண்டு சில நாவல்கள் வெளியாகி இருக்கின்றன. ராஜம் கிருஷ்ணனின் பெரும்பாலான ஆக்கங்கள் இந்த வகைமையில் வரக்கூடியவை. ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி ,சதீஷ் வாசுதேவனின் கத்தலே, இரா.முத்துநாகுவின் சுளுந்தீ போன்ற ஆக்கங்கள் தரவுகளை மையமாகக் கொண்டு தமிழில் இதற்கு முன்பு வெளியான ஆக்கங்கள். இத்தகைய படைப்புகளால் சமூகத்தில் உடனடியாக ஒரு பேச்சினை உருவாக்க முடிகிறது என்பது உண்மைதான். விளிம்பு நிலை மக்களின் பாடுகள் பேசுபொருளாகும்போது அக்குரலுக்கு சமூகம் செவிசாய்க்க வேண்டிய ஒரு அறரீதியான கட்டாயத்தை இப்படைப்புகள் உருவாக்குகின்றன. அதில் தவறென்று கொள்ள ஏதுமில்லை. ஆனால் ஒரு படைப்பு சமகாலத்தின் அநீதியால் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை மட்டும் பதிவு செய்தால் போதுமா? இத்தகைய படைப்புகளை அந்த அநீதி இழைக்கப்பட்ட மக்கள் என்னவாகப் பார்க்கின்றனர்? என்ற வகையிலான கேள்விகளை எழுப்பிக் கொண்டு இப்படைப்புகளை அணுகுவது ஒரு ...