ஈசல் - எதிர்வினைகள் 2
ஈசல் சிறுகதை ஈசல் - எதிர்வினைகள் 1 ஈசல் என்றொரு சிறுகதை வாசித்தேன். கொஞ்சம் விஞ்ஞானம், கொஞ்சம் தத்துவம், கொஞ்சம் சமூகம், கொஞ்சம் மானுடம் எனச் செல்லும் பிரமாதமான எதிர்காலக் கதை. பல காலமாக சுரேஷ் ப்ரதீப்பின் பதிவுகளை வாசித்துக் கொண்டிருந்தாலும், அதன் வழி 2010க்குப் பின் எழுத வந்தோரில் எனக்குப் பிடித்தவராக இருந்தாலும், மனதளவில் அவருடன் ஒரு வித நெருக்கம் / மதிப்புக் கொண்டிருந்தாலும், நான் படிக்கும் அவரது முதல் புனைவாக்கம் இதுவே. அவர் தொழில்நுட்பம் அல்லாத துறையில் பணியில் இருக்கிறார். ஆனால் ஓர் AI செயலியின் சாத்தியங்களைப் புரிந்து கொண்டு அதன் எதிர்காலத்தைச் சிறப்பாகக் கற்பனை செய்திருக்கிறார் என்பதே என் வியப்பு. நிச்சயம் வாசியுங்கள். எழுத்தாளர் சரவண கார்த்திகேயன் (முகநூலில்) ஒரு 20 வருடங்களுக்கு முன்பாக ஆனந்த விகடனில் சரத்குமார் அவர்களின் ஒரு பேட்டி வெளியாகியிருந்தது. அவரிடம் இருந்த செங்கல் போன்ற செல்போனைப் பற்றியது அது. அதைப்பற்றி அவர் அவ்வளவு விதந்தோதிப் பேசியிருந்தார். அவருக்கு அழைப்பு வந்தாலும், அவரே அழைத்தாலும் பணம் கட்டவேண்டும். இவ்வளவு செலவேறியது தேவையா என்று க...