ஈசல் - சிறுகதை
கண்கொடுத்தவனிதம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருநெல்வேலியில் இருந்து வந்திருந்த ஒரு இளம் பெண் மருத்துவர் பணிபுரிந்தார். அழுக்காகவும் பரிதாபமாகவும் இருக்கும் சிறுவர்களான எங்களைப் பார்க்கும் அரசாங்க மருத்துவர்கள் எரிச்சலும் இரக்கமும் கொள்வது இயல்பு. ஆனால் இந்தப் பெண் எங்களை அருகில் அழைத்து வைத்துப் பேசினார். 'மாத்திரை எல்லாம் ஒழுங்கா போடணும் சரியா?' 'தினமும் தலைக்கு ஊத்திக்கணும் சரியா?' 'தலைக்கு எண்ணெய் வைக்கணும் சரியா?' அவருடைய ஒவ்வொரு 'சரியா'வும் அவ்வளவு அழகாக இருக்கும். பொதுவாக நான் பிறந்த ஊரான திருவாரூரில் 'ச'வை 'ஸ' போலத்தான் உச்சரிப்போம். அதனாலோ என்னவோ அவர் அழுத்தந்திருத்தமாக 'ச'(Cha) உச்சரிப்பது எனக்குப் பிடித்துப்போனது. இளைஞனாகிவிட்ட பிறகு அந்த உச்சரிப்பில் தொனிக்கும் கொஞ்சலும் வாஞ்சையும் மனநிம்மதியைக் கெடுப்பதாகிவிட்டன. அதனாலோ என்னவோ எங்கள் நிறுவனம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவுசார் செயலிக்கு ChattAI என்று பெயரிட்டேன். செயலியின் சின்னமாகவும் ஒரு கோட்டோவியம் போன்ற சட்டைதான் இருந்தது. செயலி உருவாக்கிய ஒரு வருடத்திற்குள்ளாகவே ஒர...