புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024

ரண்டு மாதங்களுக்கு முன்பு பாவண்ணன் இப்படி ஒரு இலக்கியவிழா நடைபெறுவதாகச் சொல்லி என்னைக் கலந்து கொள்ள அழைத்தபோது நான் பல வருடங்களாக இந்த இலக்கியவிழா பெங்களூருவில் நடப்பதாகவே எண்ணி இருந்தேன்.‌ பேஸ்புக்கில் நடந்த 'என்னை அழைக்கவில்லை உன்னை அழைக்கவில்லை' சர்ச்சை வந்தபோது கூட இதற்கு முன் இப்படியொரு சர்ச்சை வந்ததிராதது எனக்கு உரைக்கவில்லை. அப்படி எனக்கு உரைக்காமல் போனதில் வியப்பென்றும் ஏதுமில்லை. அப்படி 'உள்ளாழ' சதி நடக்கும் அளவுக்கு எல்லாம் தமிழ் இலக்கியம் 'வொர்த்' இல்லை. 'வொர்த்' என்பதை இங்கு பொருளியல் மதிப்பு என்று புரிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். தமிழ்ப் புத்தகங்களுக்கு பெரிதாக சந்தை மதிப்பு இல்லாதபோது இவ்வாறு 'சதி' செய்துதான் தன்னுடைய படைப்புகளை முன்னிறுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஆகவே இலக்கிய சர்ச்சைகளில் சொல்லப்படும் சதிக் கோட்பாடுகளில் எனக்குப் பெரிதாக ஈடுபாடு இல்லை. ஆரம்பத்தில் ஒரு சுவாரஸ்யத்துக்காக இதையெல்லாம் தெரிந்து கொண்டேன். ஆனால் இன்று அந்த சுவாரஸ்யமும் போய்விட்டது. மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான முறையிடல்கள். கோபங்கள்.‌ 





வெள்ளிக்கிழமையே விழா தொடங்கிவிட்டாலும் சனிக்கிழமை காலையில்தான் என்னால் விழாவுக்குப் போக முடிந்தது. ஆறு நாட்கள் அலுவலகம் செல்ல நேர்வது எனக்கென்னவோ பெரிய வன்முறையாகத் தெரிகிறது. Casual leave எனப்படும் தற்செயல் விடுப்புகளும் என் துறையில் ரொம்பக் குறைவு என்பதால் சனிக்கிழமை ஒருநாள்தான் விடுப்பெடுக்க முடிந்தது. பெங்களூரு சிட்டி ரயில் சந்திப்பில் இறங்கி ஆட்டோ பிடித்துப் போய்விடுவோம் என்றுதான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால் காலை ஐந்து மணிக்கெல்லாம் ஸ்டேஷனுக்கு வெளியே எனக்காக காத்திருக்கும்  டிரைவர், அவருடைய அலைபேசி எண், காரின் எண் எல்லாவற்றையும் ஆதர்ஷினி அனுப்பி வைத்திருந்தார். ஆதர்ஷினி விழாவுக்கு வரும் எழுத்தாளர்களுக்கு பயணம் மற்றும் தங்குமிட ஒருங்கிணைப்பாளர். ரயில் சற்று முன்னதாகவே சென்று சேர்ந்தது. நான் வெளியே வந்தபோது மெல்லிய சாரல்மழை. எட்டு வருடங்களுக்கு முன் முதல்முறை விஷ்ணுபுரம் விழாவுக்காக கோவையில் சென்று இறங்கியபோதும் இப்படித்தான் மெல்லிய தூரலாக மழை பெய்தது. கற்பனாவாதமெல்லாம் இல்லை. சும்மா சொன்னேன். ஆதர்ஷினி St John's ஆடிட்டோரியத்தில் என்னை வரவேற்று அறையைச் சுட்டினார். சு.வேணுகோபால் அந்த அறையில் இருந்தார். நான் ஆறரை மணிக்கு கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று 'ஹாயாக' உள்ளே நுழைந்தால் அவர் மறுநாள் மாலை நடக்கவிருக்கும் கலந்துரையாடலுக்கு குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார். எனக்கு குற்றவுணர்வில் தூக்கம் வரவில்லை. அவரிடம் சற்று நேரம் நான் வாசித்துக் கொண்டிருந்த இப்போது உயிரோடிருக்கிறேன் நாவல் பற்றிச் சொன்னேன். இந்த நாவல்தான் இமையத்தின் சிறந்த நாவலாக எனக்குப்படுகிறது என்றேன். சு.வே நாவல் வாசிப்பு சார்ந்து தன்னுடைய அனுபவங்களைச் சொன்னார். ஏறத்தாழ ஒருமணி நேரம் பேசி இருப்போம். நல்லவேளையாக குளித்து விட்டுக் கிளம்பினோம். கொஞ்ச நேரத்தில் தண்ணீர் நின்று விட்டிருந்தது. ஒரு மணிநேரத்திற்குள் அதை சரிசெய்தும்விட்டார்கள். இந்த ஒரேயொரு சிறு பிசகு தவிர வேறெந்தக் குறையும் சொல்ல முடியாதபடி மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வு‌. இதற்கு முன் இத்தகைய முழுநாள் இலக்கிய விழாவென நான் கலந்து கொண்டது விஷ்ணுபுரம் விழாவில் மட்டும்தான். மேலும் அங்கு ஒரு சிலர் தவிர்த்து மற்றவர்கள் 'நம்மவர்'களாக இருப்பார்கள். அப்படி 'ஒரே இனமாக' இருப்பதால் நம் படைப்பாளிகள் தங்களை தனித்துவமாகக் காட்டிக் கொள்ள சற்று வேறு மாதிரி நடந்து கொள்கின்றனரோ என்று தோன்றும். ஆனால் பெங்களூருவில் அந்தச் சிக்கல் இல்லை. ஒருவேளை அது கன்னடர்களின் குணமாகக் கூட இருக்கலாம். இரண்டு நாட்களில் சொல்லிவிட முடியாது. இரண்டு நாட்களும் எல்லா இடங்களிலும் நட்பான சூழலே நிலவியது. அதேநேரம் ஒரு சில அரங்குகள் நீங்கலாக மற்ற அனைத்தும் தீவிரமாகவே இருந்தன.


நான் ஒரு விஷயத்தை அவதானித்தேன். கன்னடர்களுக்கு ஒரு Home field advantage' இருப்பதால் அவர்களால் இயல்பாக செறிவாக பேச முடிகிறது. எழுத்து தாண்டியும் தங்களுடைய கலைஞர்களை மிகப்பெருமிதத்துடன் முன் வைக்கின்றனர். ஹிந்துஸ்தானி பாடகர் வெங்கடேஷ் குமார், யக்ஷகான கலைஞர் சிவானந்த ஹெகடே ஆகியோரை போற்றியதையும் கொண்டாடியதையும் அங்கு பார்க்க முடிந்தது. நம்மூரில் சினிமா இசைக்கலைஞர்கள் தாண்டி பொதுச் சமூகம் யாரையாவது பொருட்படுத்தும் என்று எனக்குத் தோன்றவில்லை.


அடுத்ததாக மலையாள எழுத்தாளர்கள் இது மாதிரி ஏகப்பட்ட விழாக்களை பார்த்திருப்பதால் ஒரு மாதிரி 'அசால்ட்டாக' கையாளுகின்றனர். ஆனால் அது விழாவில் ஒரு எதிர்மறை பிம்பத்தை மலையாள இலக்கியவாதிகள் மீது உருவாக்கியதாகத் தோன்றியது.


தமிழைப் பொறுத்தவரை பெருமாள் முருகன் வழக்கம்போல அரசியல் சரிநிலையோடு பேசினார். மற்ற அனைவருமே என்ன பேச வேண்டும் எவ்வளவு பேச வேண்டும் என்ற தெளிவுடனேயே வந்திருந்தனர். ஜெயமோகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டு சுசித்ரா அவரை எடுத்த ஆங்கில நேர்காணல் வழியாக தமிழுக்கு ஒரு முத்தாய்ப்பு அமைந்தது. இருவருமே இத்தகைய நிகழ்வுகளில் உரையாடியதன் வழியாக மிகச் சரளமாக கலந்துரையாடினர். எந்த அளவுக்கு என்றால் ஒரு கட்டத்தில் சுசித்ராவும் ஜெவும் தமிழில்தான் பேசிக் கொண்டிருக்கின்றனர் என்று தோன்றுமளவு அவ்வளவு சரளமான அதேநேரம் செறிவான உரையாடலாக அமைந்தது.


தெலுங்குதான் சுவாரஸ்யமான மொழியாக அமைந்தது. தெலுங்கு எழுத்துலகினரிடம் ஒரு ஆவேசம் தெரிகிறது. ஆரம்பத்தில் எனக்கு அது சற்று விசித்திரமாகவே இருந்தது. சின்னவீரபத்ருடு ஒரு நேரடியான கேள்விக்கு சொன்ன பதில் ஏராளமான தரவுகளைக் கொண்டு தன் மொழியை 'பாதுகாக்க' முனைவது போல எனக்குத் தோன்றியது. தென்னிந்திய மொழிகளில் நவீன இலக்கியத்தில் பெரும் சாதனைகள் நிகழாத மொழி தெலுங்கு. அதை அவர்களும் உணரவே செய்கிறார்கள். அதனாலேயே எழுதுதல் மொழிபெயர்த்தல் தங்கள் படைப்புகளை மற்ற தென்னிந்திய மொழிகளில் கொண்டு போய் சேர்த்தல் என்றொரு வேகத்துடன் இருக்கின்றனர். இந்த வேகமும் ஆவேசமும் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் இந்த 'உணர்ச்சி அலையில்' இருந்து ஒரு பெரும்படைப்பாளி எழுந்துவர முடியாது. ஆகவே தெலுங்கு இலக்கியவாதிகள் தங்களை இன்னும் சற்று சுயபரிசோதனை செய்து கொள்ளலாம் என்று எண்ணினேன்.


நான்,காளி பிரஸாத், கயல், ரம்யா ஆகியோர் ஞாயிறு மாலை மூன்று மணிக்கு மொழிபெயர்ப்புகள் பற்றிப் பேசினோம். காளி மட்டுறுத்துனராக இருந்தார். அன்றைய தமிழ்ச்சூழல் மொழிப்பெருமிதம் பற்றிய இன்று கேட்டாலும் மொழிப்பெருமிதம் தாண்டி மொழி பற்றி வேறு அக்கறை இல்லாதவர்களுக்கு குத்துவது போல இருக்கும் புதுமைப்பித்தனின் மேற்கோள் ஒன்றிலிருந்து காளி அரங்கினை துவக்கினார். தொடக்ககால மொழிபெயர்ப்புகள் பற்றி நானும் மொழிபெயர்ப்புகள் வழியாக தமிழ்ச்சூழலில் பெறப்பட்டது குறித்து ரம்யாவும் மொழிபெயர்ப்பதில் உள்ள நுட்பங்கள் சவால்கள் குறித்து கயலும் பேசினோம். 



இது மாதிரி விழாக்களில் நான் ஏறத்தாழ 'வேடிக்கை' பார்க்கும் மனநிலையில் தான் இருப்பேன். இந்த இரண்டு நாட்களும் அப்படித்தான். தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமோ என்று சந்தேகம் கொள்ளும் அளவு அவ்வளவு நண்பர்கள். சதீஷ்குமார், சங்கர் கிருஷ்ணா,ஏ.வி.மணிகண்டன்,ஸ்வேதா என்று பெங்களூருவில் வசிக்கும் நிறைய நண்பர்களைச் சந்திக்க முடிந்தது. அவர்களுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தேன். மனோஜ் பாலசுப்ரமணியனை பார்ப்பவர்கள் எல்லாம் யாத்ரா நீலா என்றே நினைவில் வைத்திருக்கின்றனர். ஒருவேளை நான்தான் மனோஜ் என்று தவறாக கூப்பிடுகிறேனோ என்று சந்தேகமாக இருந்தது. ஒரு இடைவெளியில் ஜெயமோகனிடம் ஆட்டோ ஃபிக்ஷன் பற்றிக் கேட்டேன். மிக விரிவாக அவர் சொன்ன பதிலில் நான் அடுத்து எழுத நினைத்திருக்கும் நாவலுக்கு அவசியமான விஷயங்கள் இருந்தன. பொதுவாக தமிழ் எழுத்துலகு என்று நாம் நம்பும் புனைவிலக்கியத்துக்கு வெளியே விரிந்து கிடக்கும் தமிழ் ஆய்வுத்துறை பற்றிச் சொன்னார். இருபது வருடங்கள் முப்பது வருடங்கள் ஆய்வு செய்துவிட்டு அங்கீகாரமின்றி மடிந்து போகும் முக்கியமான ஆய்வாளர்கள் பற்றிச் சொன்னார். குடவாயில் பாலசுப்ரமணியனின் பெரும்பாலான நூல்களை சமீபத்தில் வாசித்ததால் ஜெயமோகன் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. புனைவிலக்கியம் முக்கியம்தான். வேறெந்த துறையையும்விட புனைவிலக்கியத்தின் வழியாகத்தான் நம்மை நம்மால் சரியாக அடையாளம் காண முடியும். ஆனால் புனைவிலக்கியவாதி ஆழமான விரிவான வாசிப்பு நிறைந்தவனாக இருந்தால் மட்டுமே நம்முடைய சிக்கல்களையே நம்மால் சரியாக எடுத்துரைக்க முடியும் என்று புரிந்து கொண்டேன். மற்றபடி அர்ப்பணிப்பு மிக மிக அவசியம். அர்ப்பணிப்புடன் தொடர்ந்து இயங்குவதே போதும் என்று தோன்றுகிறது. இதுமாதிரி மேடை அமையும் சுய பிரஸ்தாபம் பண்ணாமல் இலக்கியம் பற்றிய நம்முடைய புரிதலையும் நம்முடைய முன்னோடிகள் குறித்தும் பேசினால் போதும் என நினைத்தேன்.


அபிலாஷ் சந்திரன் வந்திருந்தார். அவரிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தேன். வழக்கம்போல சுனில், காளி,கார்த்திக், ரம்யா,சதீஷ் இவர்களுடனேயே சுற்றிக் கொண்டிருந்தேன். அரங்கில் அணிந்து கொள்ள பிரியா எனக்கொரு புதுச்சட்டையும் பேண்ட்டும் எடுத்துக் கொடுத்திருந்தாள். மதியம் மாற்றிக் கொள்ளலாம் என்று டிஷர்ட்டுன் இருந்தேன். இறுதி நேரத்தில் மாற்ற முடியாமல் டிஷர்ட்டுன் கலந்து கொள்ளும்படி ஆனது. அனேகமாக தமிழ் படைப்பாளிகளில் நான் மட்டுமே டிஷர்ட் அணிந்து புக் பிரம்மாவின் முதல் கலந்துரையாடலில் கலந்து கொண்டதாக வரலாறு எழுதட்டும்!


மாலையில் யக்ஷகானம் முடிந்தபோது ஒரு மாதிரி மனம் கனத்துவிட்டது. இரண்டு நாட்கள் கடந்ததே தெரியவில்லை. புறப்படப் பத்தாகிவிட்டது. ஆதர்ஷினியிடம் நிகழ்வு சார்ந்து சில பரிந்துரைகளை முன்வைத்தேன். அடுத்த ஆண்டில் கவனத்தில் கொள்வதாகச் சொன்னார். 


இத்தகைய விழாக்கள் அளிக்கும் மனநிலையை எனக்கு அவசியமானதாக இருக்கிறது. இங்கு முன் வைக்கப்படும் தீவிரமான கருத்துக்கள் எல்லாம் அவ்வளவு முக்கியமில்லை. இவ்வளவு எழுத்தாளர்களையும் வாசகர்களையும் பார்ப்பதும் பேசுவதும் தவறவிடக்கூடாத அனுபவம். இதுபோன்ற இலக்கிய விழாக்களுக்கு இனி அடிக்கடி போகவேண்டும் - அதாவது அலுத்துப்போகும்வரை. புத்தக கண்காட்சிகள் மிகச் சீக்கிரமாகவே அலுத்துவிட்டன - என்று எண்ணி இருக்கிறேன்.


இந்நிகழ்வு குறித்து இந்தக் கட்டுரையில் இவ்வளவு சொல்வது போதும் என நினைக்கிறேன். இன்னும் சிலவற்றைச் சொல்ல வேண்டும். அவற்றை வாய்ப்பிருக்கும்போது தனியே எழுதுகிறேன்.

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1