நூல் ஒன்று - முதற்கனல்
நூல் ஒன்று - முதற்கனல் என் கொள்ளுப்பாட்டியின் வழியாக நம் மரபின் சில தொன்மங்களையாவது கேட்டு வளரும் பேறு பெற்றவன் நான். நுட்பமான கதை சொல்லலும் பல திசைகளில் விரிந்து எழும் கதை நகர்வும் கொண்ட வெண்முரசின் முதல் நாவலான முதற்கனல் முதல் முறை வாசிக்கும் போது எனக்குள் பெருந்திகைப்பை ஏற்படுத்தாமல் உள்ளே அனுமதித்ததற்கு என்னுடைய வாசிப்புத் திறனை மெச்சிக் கொள்ள முடியாது. மானசாதேவி என்ற நாகர் குலத்தலைவி தன் ஏழு வயது மகன் ஆஸ்திகனுக்கு சொல்லும் கதைகள் என்னை ஏற்று உள்ளிழுத்துக் கொண்டதற்கு சிறு வயதில் கொள்ளுப்பாட்டியின் இழுவையும் ஏளனமும் நிறைந்த குரலில் கேட்ட தொன்மங்களே காரணம். மானசாதேவிக்கும் ஜரத்காரு முனிவருக்கும் பிறந்த ஏழு வயதான ஆஸ்திகன் குருஷேத்திர போர் முடிந்து இரு தலைமுறைகள் கடந்த பின் அஸ்தினபுரி அரசனான ஜனமேஜயன் தீமைகளை அழிக்க எண்ணி நிகழ்த்தும் சர்ப்பசத்ர வேள்வியை தடை செய்யும் பொருட்டு எழுகிறான். காமமாகவும் அகங்காரமாகவும் மண்ணில் பெருகும் நாகங்கள் அழிக்கப்படுவதை வைதிகனாகவும்...