தத்துவம் என்பதை வாழ்வைப் பற்றிய அல்லது நம்மைச்சூழ்ந்து நடக்கும் புற நிகழ்வுகள் குறித்த ஒரு முழுமை நோக்கை அளிக்கும் கோட்பாடு என வரையறுத்துக் கொள்ளலாம் அல்லவா. கலியுக முடிவில் பகவான் கல்கி அவதாரம் எடுப்பார் என்பதையோ பிரபஞ்சமே அவனின் பெருநடனம் என்பதையோ இறுதித் தீர்ப்பு நாளில் நீரும் நெருப்பும் நிலமும் தம்மிடமுள்ள உயிர்களை தீர்ப்புக்கு ஒப்படைக்கும் என்பதையோ பொதுவுடமைச் சமூகம் அமைந்துவிட்டால் மானுட இனம் இன்றைய துன்பங்களில் இருந்து விடுபட்டு விடும் என்பதையோ வசதிக்கு ஏற்றார்போல் ஒவ்வொருவரும் தங்களுக்கான முழுமை நோக்காக எடுத்துக் கொள்கின்றனர். மேலும் பல நுண்மையான நோக்குகள் கடந்த இருநூறு ஆண்டுகளில் திரண்டு வந்திருக்கின்றன. அப்படியெனில் இலக்கியம்? குறிப்பாக தத்துவத்தின் கலை வடிவம் என்றே வர்ணிக்கப்படும் நாவல் தனக்கென உருவாக்கிக் கொண்ட நோக்கு என்ன? யோசித்துப் பார்க்கையில் தத்துவத்தை மையமாகக் கொண்டு இலக்கியமும் அறிவியலும் இருவேறு திசைகளிலாக பிரிந்து பயணிப்பதைக் காண முடிகிறது. தத்துவத்தை ஏற்றுக் கொண்டு அதன் புறவய விதிகளை பயன்படுத்தி மேலும் மேலும் புதிய உச்சங்களை அறிவியல் தொடுகிறது. பயன்பாட்டுத் தளம...