மூன்றரை மணிக்கு எழ வேண்டும் என்ற கவலையில் மூணு மணிக்கே விழிப்பு தட்டிவிட்டது. உலகின் பயங்கரமான மனிதர்களையும் பெருந்துயர் மிக்க மனிதர்களையும் என் கற்பனையில் நான் சந்திக்கும் தருணங்கள் இந்த அதிகாலைகள். ஒருவேளை இந்த தருணங்களை சுருக்கிக் கொண்டால் அந்த நாள் நலமுடன் நகருமென்பது ஒரு எண்ணம் மட்டுமே. இன்றும் மூன்று முதல் மூன்று நாற்பது வரை புரண்டு கொண்டே கிடந்தேன். வாட்ஸ்அப்பில் யாரிடம் இருந்தெல்லாம் செய்தி வந்திருக்கும் முகநூலில் யாரெல்லாம் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்திருப்பார்கள் மாமலர் தவிர்த்து ஜெ வெப்சைட்டில் என்னவெல்லாம் இடம்பெற்றிருக்கும் என இனிதாகத் தொடங்கி எதிர்காலத்தில் என்னவாகப் போகிறேன் தேய்ந்திருக்கிறோமா கூராகி இருக்கிறோமா எப்போது சாவோம் இப்போது ஏன் இருந்து தொலைய வேண்டும் என்பது வரை போதையான எண்ணங்கள் நீளும். "மணி மூணே முக்காலாச்சு எளுந்திரி" என அம்மா எழுப்பிய போது உண்மையில் மணி மூன்று நாற்பது தான். இதே அம்மா நான் அலுவலகம் கிளம்பும் போது ஏழே முக்காலை இரக்கமே இல்லாமல் "ஏள்ற தான ஆவுது. ஏன் பறக்கிற" என்று சொல்லும். வீடு கட்டி வரும் பிப்ரவரி அல்லது பெப்ருவரி...