தேனுலகு
மழையே இல்லாமல் போயிருந்தது. கடல்கள் வற்றியதால் சேறு கொழகொழவென எங்கும் நிறைந்து கடந்தது. இறந்த மீன்களை உண்டு பசி தீர்த்துக் கொள்ள விரும்பிய பெரிய நாரைகள் வற்றிய கடலில் நீளமான கால்களை வைத்து தரையிரங்கின. களி மண் கால்களை அப்பிப் பிடித்தது. எழுந்து பறந்த போது அப்பிய சேறு உதிரத் தொடங்கியது. ஒரே இடம் நோக்கியே சென்றதால் எல்லா நாரைகளின் கால் சேறும் ஒரே இடத்திலேயே சேகரமாகியது. சேகரமாகிய சேறு முதலில் குன்று போல் குவிந்து பின் சரியத் தொடங்கியது. சரிந்து சரிந்து வலுவான அடித்தளம் அமைந்த பின் சேறு உயரத் தொடங்கியது. உயர்ந்த சேறு மலையென நிமிர்ந்தது. மீன்களும் நாரைகளும் கடற்சதுப்பில் இறந்து கிடந்தன. ஒரேயொரு நாரை மட்டும் உலகில் எஞ்சிய கடைசி மஞ்சள் மூங்கிலின் ஒற்றை அரிசியுடன் சேற்று மலையை கடக்கும் உத்வேகத்துடன் பறந்தது. முதலில் எழுந்த கரிய அலையொன்று அப்படியே உயர்ந்தபடியே நின்று விட்டதாகவே அது நினைத்தது. உயர்ந்து ஸ்தம்பித்து நின்ற அலையை தன் அலகால் குத்தி அந்தப் பக்கம் செல்ல நினைத்த போதுதான் அது பெருமலையெனத் தெரிந்தது. சேற்று மலையை குடைந்தபடியே சென்றது. ஆயிரம் அடிகள் குடைந்தும் அம்மலையின் மையத்தைக் கூட நெருங்க முடியவில்லை அதனால். எழுந்து பறந்து உச்சியை கடந்து விட வேண்டுமென்ற உத்வேகம் அப்போது தான் அதற்கு எழுந்தது. அந்த உத்வேகம் எழுந்த கணத்தில் மலையின் மையத்தில் மின்னிய ஒரேயொரு நெல்மணியைக் கண்டது. அதனை அங்கிருந்து மீட்கவே தான் வந்ததாக அது புரிந்து கொண்டது. மஞ்சள் மூங்கிலின் ஒற்றை அரிசியுடன் அது பறந்தது. பத்தாண்டுகள் பறந்த பின்னும் அது கலைப்படையவில்லை. மலை உச்சியை அடைந்து அந்த மஞ்சள் அரிசியை மலை உச்சியில் போட்ட போது தான் இறந்து விடப் போவதை அந்த நாரை உணர்ந்தது. உலகை எழுந்து பார்த்தது. எண்பது சதவீத உலகம் சதுப்பாகக் கிடந்தது. உலர்ந்த சதுப்புகள் வெடித்துக் கொண்டிருந்தன. எஞ்சிய பகுதிகள் முழுதும் கட்டிடங்கள் இடிந்து கிடந்தன. பெரிய மண்டபத்தில் ஏறுக்கு மாறாக படுத்துத் தூங்கும் பெரிய குழந்தைகள் போல அந்த கட்டிடங்கள் கிடந்தன. நாரை பெருமூச்செறிந்த படி இறந்தது.
அந்த ஒற்றை அரிசி அதன் உடலுக்குள் புகுந்தது. அந்த நாரையின் குருதியை நீரெனக் கொண்டு வளர்ந்தது அந்த அரிசி. குருதியில் நனைந்ததால் அது சிகப்பு மூங்கில் ஆனது. கடினமான தண்ணீரை குடித்து வளர்ந்ததால் அதன் உடல் கடினம் கண்டிருந்தது. எழுந்தது சிகப்பு மூங்கில். விண் நோக்கி சிந்திய ஒரு துளி குருதியென கொடுவாளென விண்ணை முட்ட எண்ணும் கருவறை விட்டெழுந்த கையென அது நீண்டது. அதன் வேர்கள் சேற்று மலையில் ஆழ இறங்கின. நாரைகள் கவ்வியிருந்த சேற்று மலையில் மூழ்கிய மீன்களை உணவெனக் கொண்டு மூங்கில் எழுந்தபடியே இருந்தது. தன்னில் முதல் மலர் வைத்த போது சிவந்த மூங்கில் சிலிர்த்தது. அதன் கணுக்கள் சிலிர்த்தன. அதன் உடல் விரைத்தது. வலுவும் கனிவும் தன்னுள் ஏறியபடியே இருப்பதை அந்த மூங்கில் அறிந்தது. வலுவை கனிவால் கழித்தது. எஞ்சிய கனிவே இனிக்கும் கண்ணீர் துளியென அதன் காண முடியா உச்சி நுனியில் தங்கியது. அக்கண்ணீருக்கென அதைத் தேடி வந்தது ஒரு தேனீ. தேனீ உண்ட கண்ணீர் தேனானது.
கனிவின் கண்ணீரை உண்ட அந்த தேனீ தன்னுள்ளும் அக்கனிவை உணர்ந்தது. கனிவை உணர்ந்ததும் தானொரு பெண்ணென அது அறிந்தது. அவ்வெண்ணமே இன்னொரு தேனீ என்றானது. புதுத் தேனீயைக் கண்டதும் கட்டளையிடவும் கருணை காட்டவும் ஒரே நேரத்தில் தான் விரும்புவதை அத்தேனீ அறிந்ததும் அது தன்னை ராணி என அழைத்துக் கொண்டது. கருணையும் கடுமையும் கொண்ட ராணி தன் கனிவினைக் கூட்டக் கூட்ட பெருகியது தேனீக்கூட்டம். சிவந்த மூங்கிலின் உச்சியில் தீக்குச்சியின் வெடிமருந்தென அமர்ந்திருந்தது தேன் கூடு. விழுந்த விதைகள் மீண்டும் மூங்கிலென எழுந்தன. ஒவ்வொரு மூங்கிலின் உச்சியிலும் ஒரு தேன் கூடு உருவானது. உச்சியின் கனம் பெருக அத்தனை கூடுகளும் தரை நோக்கித் தாழ்ந்தன. வரிசையாக நின்ற அத்தனை மூங்கில்களின் தலையும் தாழ்ந்து முட்டியது. தலை கீழாக கவிழ்த்து வைத்த மலையென மலைநுனி மண்ணைப் பார்த்தும் மலையடிவாரம் விண்ணைப் பார்த்தும் எழுந்து நின்றது தேன்மலை. சேற்று மலையின் நுனியைத் தொடாமல் நின்றிருந்தது தேன்மலை. இரண்டு உதடுகள் கூர்ந்து முத்தமிட நெருங்கி நின்றது போல அவ்விரு மலைகளும் நின்றன. கொடு கொடு என சேற்று மலையும் பொறு பொறு என தேன் மலையும் நின்று தவித்தன. கனிவும் களியும் பெருகிய ஒரு நொடியில் தேன்மலை திறந்து கொண்டது.
மணி மகுடம் வைத்தது போல கெட்டித்துப் போன ஒரு பெரிய தேன் துளி தேன் மலையின் வாயிலிருந்து சேற்று மலையில் விழுந்தது. இரு மலைகளும் இணைந்து ஈன்ற மகவு போல அந்த பெருந்தேன் அங்கிருந்தது. அதன் மென்மையான பின்பக்கத்தை சேற்று மலை தாங்கி நிற்க சிரிக்கும் உச்சியை தேன் மலை பார்த்து நின்றது. அம்முகத்தை நோக்கி நோக்கி கனிந்த படியே இருந்தது தேன்மலை. அதன் மேல் முத்தங்களென தேன் பொழியத் தொடங்கியது. கருநிறத்தில் அசைந்து உருமிக் கொண்டிருந்த மலை நுனியில் இருந்து பொன்னிறத் தேன் சேற்று மலையில் வழியத் தொடங்கியது. பொன்னறமாக மின்னத் தொடங்கியது சேற்று மலை. தேனீக்களின் அசையும் தேன் மலைக்கும் பொன் மலைக்கும் நடுவே பாதுகாப்பாக இருந்தது முதற்துளி தேன்.
மலை விட்டிறங்கியது தேன். வெளியில் காய்ந்து வெடித்துப் போயிருந்த கடலடியில் உட்புகுந்தது தேன். கடலடி இனிக்கத் தொடங்கியது. பொன் மலையில் மற்றொரு பகுதி மற்ற மலைகளுக்கு வழியத் தொடங்கி கிளையெனப் பிரிந்தது. தேன்பட்டுத் தளிர்த்தன மரங்கள். தேன் உண்டு வளர்ந்தன பூச்சிகள். காடு தளிர்த்து எஞ்சிய தேன் எல்லா பக்கமும் பிரிந்து மலை அருவியில் ஒன்றிணைந்தது. தேனருவியில் இருந்து பிரிந்தன தேனாறுகள். பொற்தரையென தெரியும் ஆற்றில் அருகே நெருங்கினால் மட்டுமே அசைவு தெரிந்தது. தேனாறுகள் தேன் கடலில் கலந்தன. பின் என்றோ ஒரு நாள் இனித்தே நின்ற உலகின் மணத்தை உணர்ந்து கடவுள் கண்ணீர் சிந்தினார்.
அவரின் முட்டாள் தனமான செயலினால் மண்ணில் மலை பொழிந்தது. மழையைத் தாளாத தேன் கூசியது. மண்ணுக்கடியில் மறைய விழைந்தது. வெடிப்புகளினூடாக மண்ணுக்குள் புகுந்து கொண்டது. தேனின் கோபம் குறையவே இல்லை. தன்னை மேலும் மேலும் அழுத்தி புவியின் மையத்தில் அடங்கா வெப்பத்துடன் காத்திருக்கிறது செந்தேன். தேனூறிய மலைகளும் தேனை உள்ளடக்கி காத்திருக்கின்றன. எரிமலையென வெடிக்க காத்திருக்கிறது தேன். தேனே உலகின் அடித்தளம். தேனே உயிர்களின் முதல் உணவு. தேனே தெய்வத்தின் முதல் எதிரி. தேனே கனிவு. தேனே கண்ணீர்.
Comments
Post a Comment