பச்சை நரம்பு - முனைகொள்ளும் சிக்கல்கள்
சிறுகதை என்ற வடிவம் குறித்த புரிதலை தொடர்ச்சியாக சிறுகதைகளை வாசிப்பதன் வழியே அடைய முடியும் என நினைக்கிறேன். வாழ்வின் ஒரு குறிப்பிட்டத் தருணத்தை ஒளியேற்றி நிறுத்த சிறுகதை வடிவம் ஏற்புடையது. நாவல் இதற்கு எதிரான வடிவம். ஒரு நாவலை வாசித்து முடிக்கும் போது நம்முள் தங்குவதும் நாம் சிந்திப்பதும் பெரும்பாலும் ஆசிரியனால் முடிவு செய்யப்படுவது கிடையாது. ஒரு வகையில் நாவல் "நோக்கமற்றது". விவாதத்தன்மை உடையாது. எல்லா சாத்தியங்களையும் திறந்து நோக்கிவிட முடியுமா என்ற கேள்வியுடன் நிதானமாக பயணத்தை மேற்கொள்வது. இக்காரணங்களால் நாவல் வாசிப்பு சிந்திப்பதற்கான இடைவெளிகளை தானாகவே உருவாக்கி வழங்கும். ஆனால் சிறுகதை நேரெதிர் தன்மையான வாசிப்பைக் கோருகிறது. முதல் வரியிலிருந்தே உச்சவிசையுடன் இலக்கு நோக்கி பாய்வது போன்ற ஒரு வாசிப்பை சிறுகதைகளுக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது. அவ்வகையான வாசிப்பு அளிக்கும் போது அந்த வேகத்திற்கு ஈடுகொடுத்து அழைத்துச் செல்லும் மொழியும் கூர்மையான சித்தரிப்புகளும் நீட்டி முழக்காமல் "சிதறல்கள்" அற்று உணர்வுகளை கடத்த வேண்டியது ஒரு சிறுகதையின் கட்டாயம் ஆகிறது. வடிவப...