சங்கீதா ஸ்ரீராமின் பசுமைப்புரட்சியின் கதை
சூழியல் தீவிரவாதிகள் என்ற பதத்தை முதன்முறையாக கேட்டபோது நான் அடைந்த அதிர்ச்சி மிக ஆழமானது. சூழியல் குறித்த எந்தவொரு பேச்சினை தொடங்கும்போது நவீனத்துவ மனநிலை கொண்டவர்கள் ஊடேபுகுந்து 'இதெல்லாம் பகற்கனவு', 'மக்கள் நலன்தான் முக்கியம்', 'நாட்டின் வளர்ச்சி தடுக்கப்பட்டுவிடும்' என்ற வாதத்தை முன்வைப்பார்கள். இவர்களுடைய பேச்சில் ஒரு 'நியாயம்' இருப்பதான தோற்றம்கூட ஏற்படும். பசுமைப்புரட்சியின் ஆதரவாளர்களும் இதுபோன்ற வாதங்களை முன்வைக்கிறவர்கள்தான். அதாவது பசுமைப்புரட்சி இங்கு செயல்படுத்தப்படாமல் போயிருந்தால் இந்தியாவில் உணவுப்பஞ்சம் தலைவிரித்து ஆடியிருக்கும் என்பது இவர்கள் தரப்பு. சங்கீதா ஸ்ரீராம் இவர்களுக்கு பதில் சொல்லும் விதமாகத்தான் தன்னுடைய 'பசுமைப்புரட்சியின் கதையை' சொல்லத் தொடங்குகிறார். ஆனால் அக்கதை நவீன வேளாண்மை×பாரம்பரிய வேளாண்மை, வன்முறைப் பொருளாதாரம்× சமாதானப்பொருளாதாரம், சர்வாதிகாரத் தொழில்நுட்பம்×ஜனநாயகத் தொழில்நுட்பம், துண்டுபட்ட அறிதல்×முழுமையான அறிதல் என்று பல தளங்களைத் தொட்டு விரிகிறது. தரவுகள் அடிப்படையில் நிதானமான மொழியில் எழுதப்பட்டுள்ள இ...