சிறை
வானை அடைத்துப் பறந்தது மாபெரும் காகம். காகத்தை நோக்கி நிமிர்ந்த என் எண்ணம் முழுவதும் அதனால் உறிஞ்சப்பட்டிருந்தது. அது காலமற்ற வெளியா வெளியற்ற காலமா என்பதை என் பிரக்ஞை உணரவில்லை. நான் உடலா மனமா எண்ணமா இருப்பா ஏதுமின்மையா என்பதையும் என்னால் அறிய முடியவில்லை. ஆனால் கடற்கரையில் பதிந்த காலடிச்சுவடென என் பிரக்ஞை எங்கிருந்து நகர்கிறதோ அங்கெல்லாம் தன் தடத்தை பதித்துக் கொண்டே வந்தது. எல்லாமும் இற்றுப்போகும் ஒரு நிலைக்கென நான் எப்போதும் ஏக்கம் கொண்டிருக்கிறேன். அதுதான் அப்போதெனக்கு நிகழ்ந்து கொண்டிருந்ததா? பறக்கும் காகத்தின் சிறகு வழியே காற்றென வீசுகிறது ஒளி. எத்தனை வண்ணங்கள் அவ்வொளிக்கு. காக்கையின் சிறகுகள் எந்நிறத்தையும் உள்ளனுமதிக்காத கருமை என்று எண்ணியிருந்தது எவ்வளவு பெரிய தவறு! அது ஒவ்வொரு நிறத்தையும் ஒளிரச் செய்து கொண்டிருந்தது. நான் ஒளியை உண்டு கொண்டிருக்கிறேன். வண்ண வண்ண ஒளிகள். எவ்வளவு காலமெனத் தெரியவில்லை. என் உடலில் ஆடை இருந்ததா என் உடலே இருந்ததா என்றெல்லாம் என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நான் ஓரிடத்தில் இல்லை என்பது மட்டும் வெட்ட ஓங்கிய கொலைவாளென விரைத்திருக்கும் பளப...