ஸ்ரீராம ஜெயம்
தி.ஜானகிராமனின் சிறுகதைகள்(முழுத்தொகுப்பு) வாசித்து வருகிறேன். சரளமாக வாசித்துச் செல்லக்கூடிய கதைகள். நவீனத்துவத்தின் இறுக்கம் கவிந்துவிடாத நேரடியான கூறல் கொண்ட கதைகள். பெரும்பாலான கதைகளில் பசி முக்கிய பங்கு வகிக்கிறது. பாயாசம்,பரதேசி வந்தான்,கோயம்புத்தூர் பவபூதி,பஞ்சத்து ஆண்டி,குளிர், சிலிர்ப்பு என பல கதைகளில் வறுமையின் கையறு நிலை அப்பட்டமாக வெளிப்படுகிறது. மற்றொரு வகையான கதைகளில் காமத்தின் அலைகழிப்புகள் பேசு பொருளாகி இருக்கின்றன. பெரும்பாலும் வாலிப்பான உடல் கொண்ட இளம் விதவைகள் மீதான பச்சாதாபம் இக்கதைகளில் வெளிப்படுகிறது.சண்பகப்பூ, பசி ஆறிற்று, தூரப்பிரயாணம்,தவம்,ஆரத்தி போன்றவை இவ்வகை கதைகள். ஆனால் தி.ஜாவின் ஆகிருதி முதல் வகைக் கதைகளிலேயே பூரணமாக வெளிப்படுவதாகத் தோன்றுகிறது. எளியோரின் பசி கண்டு துயர் கண்டு இரங்கும் அவர்களின் கையறு நிலையை கனிவுடன் எடுத்துச் சொல்லும் முதல் வகைக் கதைகளே அவர் எழுதியவற்றில் முக்கியமானவை என்று நினைக்கிறேன். பெரும்பாலும் கதைகள் நேரடியாகவே சொல்லப்பட்டிருந்தாலும் ஸ்ரீராமஜெயம் என்ற கதை அதன் மௌனத்தால் தொடர்புறுத்தும் தன்மையால் அபாரமான கலைப்பெறுமானம் ப...