பெருஞ்சுழி 13
கம்பளிப் படுதாக்கள் விரிக்கப்பட்ட கூடாரத்தை நோக்கி சுனதன் நடந்தான். கூடாரத்திற்கு வெளியே வெற்றுடலுடன் சிலரைப் படுக்க வைத்து அரக்கினை உருக்கி மார்பிலும் தொடையிலும் முத்திரையிட்டனர். வண்டல் மணல் பரப்பப்பட்ட வலுப்போர் கொட்டடி பகலிலும் இருண்டிருந்தது. தீப்பந்தங்களின் சடசடப்பு உள் நுழைந்த போது சுனதனுக்கு ஒரு வித நடுக்கத்தை ஏற்படுத்தியது. பின்னிருந்து ஒரு கை அவனை தள்ள முயன்றது. தள்ளிவிடும் எண்ணத்தோடு அவன் மீது கொடுக்கப்பட்ட விசை அவனை அசைக்காதது கண்டு தள்ளியவன் விழி விரித்தான். "உன் பெயர்?" என அங்கு வந்த கொட்டடிப் பணியாள் கேட்டான். "சுனதன்" போர்முறைகளை அறிவிப்பதற்கு மணி ஒலித்தது. கலைந்து நின்றவர்கள் ஒவ்வொருவராய் வந்தமர்ந்தனர். ஐம்பது பேராவது அங்கிருந்திருக்க வேண்டும். பெரும்பாலும் உடல் பருத்த சிறியவர்கள். அவர்கள் கண்களில் பயமும் நடுக்கமும் தெளிவாகவே தெரிந்தது. கொட்டடிப் பணியாள் அறிவிப்பினைத் தொடர்ந்தான். "உங்களுக்கு இரு வாய்ப்புகள் உள்ளன. எதிர் நிற்பவனை அரை நாழிகைக்குள் கொல்லுதல் அல்...