பெருஞ்சுழி 13
கம்பளிப் படுதாக்கள் விரிக்கப்பட்ட கூடாரத்தை நோக்கி சுனதன் நடந்தான். கூடாரத்திற்கு வெளியே வெற்றுடலுடன் சிலரைப் படுக்க வைத்து அரக்கினை உருக்கி மார்பிலும் தொடையிலும் முத்திரையிட்டனர். வண்டல் மணல் பரப்பப்பட்ட வலுப்போர் கொட்டடி பகலிலும் இருண்டிருந்தது. தீப்பந்தங்களின் சடசடப்பு உள் நுழைந்த போது சுனதனுக்கு ஒரு வித நடுக்கத்தை ஏற்படுத்தியது. பின்னிருந்து ஒரு கை அவனை தள்ள முயன்றது. தள்ளிவிடும் எண்ணத்தோடு அவன் மீது கொடுக்கப்பட்ட விசை அவனை அசைக்காதது கண்டு தள்ளியவன் விழி விரித்தான்.
"உன் பெயர்?" என அங்கு வந்த கொட்டடிப் பணியாள் கேட்டான்.
"சுனதன்"
போர்முறைகளை அறிவிப்பதற்கு மணி ஒலித்தது. கலைந்து நின்றவர்கள் ஒவ்வொருவராய் வந்தமர்ந்தனர். ஐம்பது பேராவது அங்கிருந்திருக்க வேண்டும். பெரும்பாலும் உடல் பருத்த சிறியவர்கள். அவர்கள் கண்களில் பயமும் நடுக்கமும் தெளிவாகவே தெரிந்தது. கொட்டடிப் பணியாள் அறிவிப்பினைத் தொடர்ந்தான்.
"உங்களுக்கு இரு வாய்ப்புகள் உள்ளன. எதிர் நிற்பவனை அரை நாழிகைக்குள் கொல்லுதல் அல்லது ஒரு நாழிகைக்குள் வீழ்த்துதல். அரை நாழிகையில் கொல்பவன் மாவலியரின் பிரதான சேனை ஒன்றில் வீரனாக சேர்க்கப்படுவான். ஒரு நாழிகையில் வீழ்த்துபவன் உப சேனை ஒன்றில் வீரனாகலாம். தோற்று உயிரோடிருப்பவன் மார்பிலும் தொடையிலும் முத்திரை பெற்று இறக்கும் வரை மாவலியத்தில் ஊதியம் இல்லா ஊழியம் புரிய வேண்டும். வென்றும் அங்கத்தில் குறைபாடு ஏதேனும் தெரிந்தால் அவன் அக்கணமே கொல்லப்படுவான்" என்றான். "இன்று இருபத்தைந்து பொருதல்கள் இக்களத்தில் நடக்கும். முதல் பொருதலுக்கு எழுபவன் எழலாம்" என்றான்.
மாவலியர் தன் தகப்பனைக் கொன்று ஆட்சியமைத்து இருபது ஆண்டுகளே ஆகியிருந்தன.இருபது மந்திரிகளும் அவர் மஞ்சம் நுழையும் பெண்ணும் அவரிடம் போர் பயிற்சி பெரும் புதல்வர்களும் மட்டுமே அவனைக் காண முடிந்தது.நெருங்க முடியாததை மேலும் அந்நியமாக்குவது அதன் மீது உருவாக்கப்படும் பயம். மாவலியர் எங்குமில்லை. அதனாலேயே எங்குமிருந்தார். அணுக முடியாததை விட அணுக்கமானது எது? இருப்பினை விட தொலைவும் அமைதியும் பெரும் பயத்தை உருவாக்கும். மாவலியரை திருப்தி செய்வது போரும் செல்வமுமே. மாவலியத்தின் மொத்த வலுவும் திருவும் தன்னை நோக்கி குவியச் செய்தார். அதன் ஒரு சிறு பகுதியே வலுப்போர் களம்.
“நீ என்னுடன் நிகர் நிற்கவேண்டும்” சுனதனை கை காட்டியவாறே பேருடல் கொண்ட ஒருவன் எழுந்தான்.
“சரி” என்று சிரித்தான் சுனதன்.
"தெரிதன்" என் பெயர் எனச் சொல்லி சுனதனை இறுக்கி அணைத்தான்.
“ஏனடா சிரிக்கிறாய்? அரை நாழிகையில் நம்மில் ஒருவன் நிச்சயம் இறப்போம். உன்னைக் கண்டதும் உன் உடல் வலுவை சோதிக்கவே அணைத்தேன். நீ எஞ்சப் போவதில்லை என்பது இப்போதே உறுதி” என்று “கலத் தலைவரே என் போரிணை இவனே” என்றான்.
“உன் பெயர்?” என்றான் கலத்தலைவன். “தெரிதன்” என்று மீண்டும் சொன்னவன் சுனதனை நோக்கினான்.
“என் பெயர் சுனதன்” என்ற வார்த்தையை சுனதன் முடிப்பதற்கு முன்னே அவன் பிடரியை பிடித்து முகம் மண்ணில் அழுந்த இழுத்து தேய்த்தான் தெரிதன். விரைந்தெழுந்தான் சுனதன். உயிர் விரும்பும் ஆதிவிசை இயக்க சுனதன் பெருங்கல் ஒன்றை தூக்கி நெருங்கிய தெரிதனை அக்கல்லுடன் கீழே தள்ளினான். சினம் கொண்டவனாய் தெரிதன் சுனதனை நோக்கி இரு கைகளையும் முறுக்கியவாறு ஓடிவந்தான். “என்னை மன்னித்துவிடு தெரிதா” என்று தெரிதனின் மொத்த உடலையும் அவன் இடுப்பின் வழியே வலக்கையில் வாங்கி தலை மண்ணில் அறையுமாறு நிலத்தில் குத்தினான். உடலில் தோன்றிய விதிர்ப்புடன் தெரிதன் நினைவிழந்தான். மீசையை நீவியவாறே கலத்தலைவன் “கொல் அவனை” என்றான். “இவரை நான் எப்படிக் கொல்ல வேண்டும் கலத் தலைவரே?” என்று புரியாமல் கேட்டான் சுனதன்.
விளங்கா விழிகளுடன் அவனைப் பார்த்த கலத்தலைவன் “மூடனே! வீழ்த்திய உனக்கு கொல்லத் தெரியாதா? கொல் அவனை” என்றான்.
“ஆணை” என்று சுனதன் தெரிதனின் கை பிடித்தபடி உதட்டை குவித்து ஒலியெழுப்பினான். நிரத்துவன் கொட்டடிக்குள் சீறி நுழைந்தான். கலத்தலைவன் காட்சியினை உணருமுன்னே தெரிதனை புரவியின் மேல் வீசி தானும் பாய்ந்தேறினான் சுனதன். நிரத்துவனை வில்லும் ஈட்டியும் கொண்டதொரு குறும்படை துரத்த தொடங்கியது. சுனதன் தன் பாதையை முடிவு செய்தான். மாவலியரை மண் கொண்டு வரும் பாதையது.
Comments
Post a Comment