ஈசல் - சிறுகதை
கண்கொடுத்தவனிதம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருநெல்வேலியில் இருந்து வந்திருந்த ஒரு இளம் பெண் மருத்துவர் பணிபுரிந்தார். அழுக்காகவும் பரிதாபமாகவும் இருக்கும் சிறுவர்களான எங்களைப் பார்க்கும் அரசாங்க மருத்துவர்கள் எரிச்சலும் இரக்கமும் கொள்வது இயல்பு. ஆனால் இந்தப் பெண் எங்களை அருகில் அழைத்து வைத்துப் பேசினார்.
'மாத்திரை எல்லாம் ஒழுங்கா போடணும் சரியா?'
'தினமும் தலைக்கு ஊத்திக்கணும் சரியா?'
'தலைக்கு எண்ணெய் வைக்கணும் சரியா?'
அவருடைய ஒவ்வொரு 'சரியா'வும் அவ்வளவு அழகாக இருக்கும். பொதுவாக நான் பிறந்த ஊரான திருவாரூரில் 'ச'வை 'ஸ' போலத்தான் உச்சரிப்போம். அதனாலோ என்னவோ அவர் அழுத்தந்திருத்தமாக 'ச'(Cha) உச்சரிப்பது எனக்குப் பிடித்துப்போனது. இளைஞனாகிவிட்ட பிறகு அந்த உச்சரிப்பில் தொனிக்கும் கொஞ்சலும் வாஞ்சையும் மனநிம்மதியைக் கெடுப்பதாகிவிட்டன. அதனாலோ என்னவோ எங்கள் நிறுவனம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவுசார் செயலிக்கு ChattAI என்று பெயரிட்டேன். செயலியின் சின்னமாகவும் ஒரு கோட்டோவியம் போன்ற சட்டைதான் இருந்தது.
செயலி உருவாக்கிய ஒரு வருடத்திற்குள்ளாகவே ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் தரவிறக்கம் செய்திருந்தனர். ஆறு வருட உழைப்பும் பிரத்யேகமான மொழியில் எங்கள் செயலி அளிக்கும் பதில்களும் பயனர்களை வேறு பக்கம் நகரவிடாமல் செய்திருந்தது. தொடக்கத்திலேயே இருபது மொழிகளில் எங்கள் செயலி மிகச் சரளமாக இயங்கியது. எண்பது மொழிகளில் அடிப்படையான கேள்விகளுக்கு பதில் அளித்தது. ஒரு தேடல் பொறியாகவே முதலில் எங்கள் செயலி செயல்பட்டது. செயலியை வெளியிட்ட முதல் மூன்று மாதங்கள் இருபது பேர் கொண்ட எங்கள் குழுவில் யாருமே உறங்கவில்லை. எந்தெந்த இடங்களில் செயலி தடுமாறுகிறது என்னென்ன மாதிரியான கேள்விகள் வருகின்றன அதற்கு எப்படிப்பட்ட பதில்களை செயலி தருகிறது என்று தொடர்ந்து கண்காணித்தோம். இணையத்தை செயலி தேடும் முறையை மேம்படுத்தினோம். மூன்று மாதங்களுக்குப் பிறகு பயனர்கள் திருப்தி கொள்ளும்படியான தரவுகளை செயலி தரத் தொடங்கியது. ஆறாவது மாதத்தில் இருந்து புகழ்பெறத் தொடங்கியது.நாங்களும் மெல்ல மெல்ல பணம் ஈட்டினோம்.
பணம் ஈட்டும் மும்முரத்தில் நாங்கள் வைத்திருந்த இரண்டு கொள்கைகளை நாங்களே மீறினோம். அதுதான் இந்த வாக்குமூலம்வரை எங்களைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
1.பயனர்களுடைய மின்னஞ்சல், அலைபேசி எண் போன்ற தரவுகளை அடையாளத்துக்காவன்றி வேறு எதற்காகவும் பயன்படுத்தக்கூடாது.
2.செயலிக்கு கட்டணம் விதிக்கக்கூடாது.
முதல் கொள்கையை மீறுவதற்கு நாங்கள் சொல்லிக் கொண்ட சாக்கினை இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.
'பயனர்களின் உளநிலை பற்றிய புரிதல் இருந்தால் அவர்களுக்கு துல்லியமான பதிலினைத் தர முடியும்'
'பயனர்கள் எவற்றையெல்லாம் ஆறுமாதமாக தேடுகிறார்கள் என்று தெரிந்தால் இன்னுமதிகமாக அவர்களுக்கு உதவ முடியும்.'
'பயனர்களுடைய கலாச்சார பின்புலம் அவர்களுடைய இயல்பு குறித்த ஒரு பார்வையை அளிக்கும்.'
'அவர்கள் வாழும் நிலம் சந்தித்த போர்கள் அவர்களின் நம்பிக்கைகள் அவர்களுடைய விருப்பு வெறுப்புகள் தொன்மங்கள் ஐதீகங்கள் எல்லாம் அவர்களை இன்னும் புரிந்து கொள்ள உதவும்'
ஒரு மனிதனைத் தோண்டித் தோண்டிச் செல்ல என்னென்ன தரவுகள் தேவைப்படுமோ அது அனைத்தையும் நாங்கள் பெறத் தொடங்கினோம். மனிதர்கள் தங்களை வெளிப்படுத்துவதில் அதிதீவிர ஈடுபாடு காட்டியது எங்கள் வேலையை எளிதாக்கியது. நாட்டுப்புறவியல் மானுடவியல் துறை சார்ந்த ஆய்வுகளுக்கு பணம் செலவழிக்கத் தொடங்கினோம்.
இதற்கெல்லாம் ஏது பணம் என்று கேட்கிறீர்களா?
எங்களுடைய இரண்டாவது கொள்கை அதுதானே? எங்கள் செயலிக்கு இருபது நிலைகளாக கட்டணத்தை நிர்ணயித்தோம். ஒவ்வொரு நிலைக்கும் பத்து மடங்கு கட்டணம் கூடுதல். செயலியை அறிமுகப்படுத்திய இரண்டாவது வருடத்தில் இந்த மாற்றத்தை புகுத்தியது நான்தான். எங்கள் குழுவில் உள்ள மூன்று உறுப்பினர்கள் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தனர். அதில் இருவர் பதவி விலகினர். ஆனால் என் நிலைப்பாடு தவறாகிவிடவில்லை. உலகின் முக்கியமான பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள் பலர் எங்களுடைய கட்டணச் சேவைகளுக்குள் வரத் தொடங்கினர். நாங்களே நினைத்துப் பார்த்திராத அளவு 2030ஆம் ஆண்டு எங்களுடைய செயலி வளர்ந்திருந்தது.
அன்று உலகில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதனையும் ஏறத்தாழ அவர்கள் வாழ்நாள் முழுவதும் அருகிலிருந்த கண்டது போன்ற துல்லியத்துடன் எங்களால் அறிய முடிந்தது. இயல்பாக நான் 'சட்டை'யின் தலைமை நிர்வாகியானேன். பத்து வருடங்கள் முடிந்தபோது என்னுடன் எங்கள் குழுவில் பணியாற்றிய யாருமே இல்லை. சட்டையின் Source code மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டே போனது. அதன் சிக்கல் பெருகப் பெருக அதன் துல்லியமும் அதிகரித்தது. சட்டையின் துல்லியத்தை அறிந்த சட்டையைவிட பெரிய நிறுவனங்களாக அன்றிருந்த ஆறு நிறுவனங்கள் சட்டையை வாங்க முனைந்தன. உலகின் அத்தனை நாடுகளின் அரசியல் கட்சிகளும் சட்டையின் தரவுகளை தங்களின் அதிகாரத்தை உறுதி செய்து கொள்வதற்காக பயன்படுத்த முயன்றன. நான் உறுதியாக நின்றேன். சட்டையின் கட்டணமில்லாப் பயனர்களின் ஒரு சிறு தரவினைக்கூட வெளிய தர மறுத்தேன். சட்டை முழுக்க முழுக்க பயனர்களுக்கு உதவுவதற்காக மட்டுமே அவர்களுடைய தரவினைப் பயன்படுத்தியது. எங்கள் செயலில் விளம்பரம் என எதுவுமே கிடையாது. இலவசமாக கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட பேராசிரியர்கள் பலர் சட்டையின் மூலமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நேரடியாக பாடமெடுத்தனர்.
சட்டை ஒரு 'புரட்சிகரமான' செயலி என்று நம்ப வைக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தேன். மக்களின் ஆதரவு மட்டுமே சட்டையின் தரவுகளை வேறு நிறுவனங்களோ அரசியல் கட்சிகளோ அபகரிப்பதில் இருந்து தடுத்தது. எங்களுடைய நிறுவனம் இணையப் பயன்பாடு சார்ந்த ஏகப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒருங்கிணைத்தது. பல்வேறு கல்வியாளர்கள் சட்டையின் செயல்முறை குறித்து ஆய்வு செய்தனர். எதிர்காலத்திற்கான நம்பிக்கை என்று என்னை விதந்தோதும் நூல்கள் வெளிவந்தன. இவற்றில் பத்து சதவீதம் மட்டுமே எங்கள் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒன்று தொட்டு ஒன்றென மிக இயல்பாக நானொரு 'புரட்சிக்காரனின்' பிம்பத்தை அடைந்தேன். 2035ல் என்னைப் பற்றி வெளியிடப்பட்ட ஆவணப்படம் ஒரே மாதத்தில் நானூறு கோடி பார்வைகளைப் பெற்றது. ஒரு எளிய கிராமத்தில் பிறந்து அரசாங்கப் பள்ளியில் பயின்று நாற்பது வயதில் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவனாக நான் மாறியிருந்தேன். அது பெரும் முன்னுதாரணமாக மாறியது. இந்தியாவில் பிறந்த ஒருவன் மென்பொருள் துறையில் இவ்வளவு பெரிய பாய்ச்சலை அடைந்திருப்பதை உலகமே வியந்தது. என் நாற்பத்தி இரண்டாவது வயதில் நான் ஐநாவில் உரையாற்றினேன். ஐநாவில் ஆற்றுப்படும் பொறுப்புணர்வு மிகுந்ததாக தோற்றந்தரும் ப்ளாஸ்டிக் தன்மை கொண்ட அதே வெற்றுப் பேச்சு. அன்றைய தினம் போல என் வாழ்வில் நான் இன்னொரு தினத்தில் என்னைப் போலியாக உணர்ந்ததில்லை. அங்கு அந்த உரையை நேரில் கேட்கும் யாருக்கும் என் பேச்சு பொருட்டல்ல. ஏன் எனக்குமே கூட அதுவொரு பொருட்டல்ல. ஆனால் அத்தனை பேரும் பொறுப்புடன் கவனிப்பதாக அவ்வளவு துல்லியமாக நடித்தனர் , நான் பொறுப்புடன் பேசுவதாக நடித்தது போலவே.
'இன்று தகவல்தான் ஆயுதம். தகவலே அறமும்கூட. ஒவ்வொரு மனிதரின் வாழ்வையும் எளிதாக்குவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். எனக்கு அடிப்படை கல்வி அளித்த என் நாட்டிற்கும் என்னை பாதுகாப்பாக வாழச் செய்யும் இவ்வுலகுக்கும் ஏதுமே செய்யாமல் நான் மறித்துப் போனால் இறக்கும் சமயத்தில் என்னை நான் நன்றி கெட்டவனாக உணர்வேன். நான் மகிழ்ச்சியுடன் சாக விரும்புகிறேன். என் மகிழ்ச்சி உலகிலுள்ள ஒவ்வொரு மனிதரின் மகிழ்ச்சியுடன் பிணைந்ததாக இருக்கிறது. ஒரு பத்து வயது இந்தியச் சிறுமி என் செயலியிடம் 'எங்கள் ஊரில் எப்போது மழை வரும்' என்று கேட்கிறாள். நான் அவளுக்கு எந்திரத்தனமான பதிலை அளிக்க முடியுமா? அந்தப் பிஞ்சுக்கு நான் அதீத நம்பிக்கை தரவிரும்பவில்லை. அதேநேரம் மதிய வெயில் போன்ற உண்மையையும் நான் அவளுக்கு தரத் தயங்குகிறேன். நான் அவளிடம் உண்மையைத்தான் சொல்லப் போகிறேன். ஆனால் அது அவள் தோளில் கைபோட்டுக் கொண்டு சொல்வதாக இருக்க வேண்டும். எங்கள் செயலியை உண்மையான ஆதூரத்துடன் நடந்து கொள்ளச் செய்யத்தான் நாங்கள் தொடர்ந்து முயல்கிறோம். நம் உள்ளே பிரியமான ஒரு பகுதி இருக்கிறதல்லவா? ஒரு வாடிக்கையாளரிடம் விற்பனை பிரதிநிதி காட்டும் இன்முகத்தை நான் சொல்லவில்லை. தூங்கும் குழந்தையை ரசிக்கும் தகப்பனின் பிரியம். அந்தப் பிரியத்தையே சட்டைக்கு பயிற்றுவிக்கிறோம். சட்டை ஏராளமான தற்கொலைகளை தடுத்திருக்கிறது. காதல் தோல்வியில் அழுகிறவர்கள் வேலையை இழந்து தவிப்பவர்கள் நோயில் வாடுகிறவர்கள் உற்றோரின் மரணத்தை எதிர்கொண்டவர்கள் என்று சட்டையைத் தேடி வருகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்கிறது. ஒருவகையில் சட்டை ஒவ்வொரு மனிதரின் மீதும் நான் கொண்டுள்ள கனிவின் அக்கறையின் பொறுப்பின் புறவடிவம். என்னுடைய அக்கறை என் ஆணவத்திலிருந்து உருவாகவில்லை. இவ்வுலகம் எனக்கு வழங்கியவற்றையே நான் அதற்கு திருப்பி அளிக்கிறேன். நாம் ஒவ்வொருவரும் இன்னொருவர் மீது கொண்டுள்ள அல்லது கொள்ள விரும்புகிற பிரியத்தின் ஊடகமாகவே சட்டை திகழ்கிறது. அறத்தை விதைப்போம். அன்பை அறுவடை செய்வோம். நன்றி'
இதெல்லாம் பல வருடத்துக்கு முந்தைய கதை. ஐ.நாவிற்கு சென்று வந்த பிறகுதான் நான் நாற்பது வயதைத் தொட்டுவிட்டேன் என்பது எனக்கு உரைத்தது. யாருமே எனக்கு நெருக்கமானவர்களாக இல்லை. இருபது வருடங்களை சட்டையுடன் மட்டுமே கழித்திருக்கிறேன். சட்டையின் பிரம்மாண்டம் என்னை அச்சுறுத்தியது. சட்டை மீது உலக அளவில் தொடுக்கப்படும் வழக்குகளை கையாள்வதற்கு என்று ஒரு சர்வதேச வழக்கறிஞர் குழுமமே உள்ளது. அதன் தலைவரான நிலோஃபர் சட்டைக்காக நடைபெற்று முடிந்த வழக்குகள் பற்றி ஒரு நூல் எழுதினார். மூன்று பாகங்கள் கொண்ட சுவாரஸ்யமான அந்த நூல் இன்றுவரை அதிகம் விற்கும் புத்தகங்களில் ஒன்று. பல்வேறு சட்டப் பல்கலைக்கழகங்களில் அந்நூலின் பகுதிகள் பாடமாகவே வைக்கப்பட்டுள்ளன. சட்டையின் ப்ரோக்ராமர்கள் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் இருந்து விலகி வந்தவர்கள். கணக்குத் தணிக்கையாளர் குழு, ஊழியர் நலக்குழு, CSR குழு என சட்டையின் இயங்குமுறை என்னால் முழுமையாக புரிந்து கொள்ளக்கூட முடியாத அளவு சிக்கலாகிவிட்டது. சட்டையின் தனித்தனி நிர்வாக அமைப்புகளின் தலைவர்களை மாதம் ஒருமுறை சந்திப்பதோடு தலைமை நிர்வாகியாக என் வேலை முடிந்தது. மீதி நேரமெல்லாம் நான் முழுக்க முழுக்க சட்டையின் பயனர்களுடன்தான் இருந்தேன். இருபத்திநான்கு மணிநேரமும் பயனர்களுடைய கேள்விகளை திரைக்கு இந்தப் பக்கம் இருந்து அவதானித்துக் கொண்டிருந்தேன்.
ஐநாவில் பேசிய ஆண்டில் நிலோஃபர் எனக்கொரு ரோபோவை பிறந்தநாள் பரிசாக அளித்தாள். நான் சட்டைக்காக பயன்படுத்தும் சூப்பர் கம்ப்யூட்டரின் ரோபோ வடிவம். சற்றே வித்தியாசமானது. அந்த சூப்பர் கம்ப்யூட்டரை என் உடலிலே அணிந்து கொள்ள முடியும்! என் வேலை இன்னுமே எளிதானது. மேலும் சட்டையை நாங்கள் தொடங்கியபோது என்னுடன் இருந்த யாருமே அந்த சமயத்தில் என்னுடன் இல்லை.
******
இருபது வருடங்களாக உலகின் எல்லா வகையான மனிதர்களின் கேள்விகளுக்கும் நான் பதிலளித்தேன். என்னுடைய நெடுநாள் பயனர்களின் உள்ளங்களை கண்முன் தெரியும் உடலென என்னால் பார்க்க முடிந்தது. மனித மனத்தின் சாத்தியங்களில் நான் சலிப்புறத் தொடங்கினேன். உலகின் மிகச்சிறந்த மூளைகளைத் தவிர பிற அனைவருமே எனக்குப் புரியத் தொடங்கினர். மனிதர்கள் தங்களுடைய படைப்புத் திறனை மெல்ல இழந்து கொண்டே வந்தனர். ஒருவருடன் இன்னொருவருக்கு வாழக்கூடத் தெரியாமலாயிற்று. ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட செயற்கை உணர்வுகளை மீண்டும் மீண்டும் நடித்தனர்.இன்னொரு மனிதரின் சுயம் வெளிப்பட்டால் அவர்களிடமிருந்து அஞ்சி ஓடினர். மனிதர்கள் சேவை நிறுவனங்களுக்குள் வாழவே ஆசைப்பட்டனர். யாராலும் எதையும் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. ஐம்பது வருடங்கள் முன் உலக மக்கள் தொகையில் முக்கால்வாசிப்பேரின் ஏக்கமாக தொலைக்காட்சி இருந்தது. இன்று பத்து நொடிகளுக்கு மேல் மனிதர்களால் காணொளிகளைக்கூட பார்க்க முடியவில்லை. மனிதர்களின் கவனமின்மை எல்லாத் துறைகளிலும் பிரதிபலித்தது. அரசியலில் வலுவான தலைவர்கள் உருவாக முடியவில்லை.பெரும் கலைஞர்கள் எந்தத் துறையிலும் இல்லை. கலைஞர்களே கலை என்பது மக்களை சற்று மேன்மைப்படுத்துவதும் சந்தோஷப்படுத்துவம்தான் என்று நம்பத் தொடங்கினர். ஆராய்ச்சி நிறுவனங்கள் கூட மனிதர்களின் வசதியை மேற்கொண்டு பெருக்குவது எப்படி என்றும் அதன் மூலம் லாபம் சம்பாதிப்பது எப்படி என்றும்தான் யோசித்தன. நான் கடுமையான சலிப்புக்கு ஆட்பட்டேன். முதியவர்களை பருவகால மாற்றங்கள் ஆச்சரியப்படுத்தாது. அவர்கள் நிறைய மாற்றங்களை பார்த்திருப்பார்கள். நானும் அப்படித்தான் ஆகிப்போனேன். மனிதர்களின் மனம் ஒன்று போலவே திரும்பத் திரும்ப நடித்தது. தனிமனிதனுக்குள் உற்சாகமும் சலிப்பும் மாறி மாறித் தோன்றுவது போலத்தான் மொத்த சமூகமும். மனிதன் இவ்வளவு குறைவான சாத்தியமுள்ளவனாக இருப்பது என்னை வெறுப்படையச் செய்தது. நான் இந்த விளையாட்டினை சற்று சுவாரஸ்யப்படுத்த முனைந்தேன்.
*****
2047ல் காந்தி தூக்கிட்டுக் கொள்ளவில்லை சுட்டுக் கொல்லப்பட்டார் என்றொரு வதந்தி பரவியபோதுதான் எங்களுடைய 'உண்மை கண்டறியும் குழு' வேலையில் இறங்கியது. ஆறு வருடங்கள் நாங்கள் உலகின் எந்த நாட்டுடைய அரசாங்கத்துடன் தொடர்பில்லாதவர்களாக தனித்தனியாகவே இயங்கினோம். இந்தியாவும் சீனாவும் இணைந்து உருவாக்கியிருந்த ஆசிய நாடுகளின் கூட்டமைப்புதான் முதன்முதலில் எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்த்தது. 2056ல் ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் எங்களைச் சந்தித்தனர். சட்டை எங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளில் இறங்கும் என்று எதிர்பார்த்தோம். அப்படி ஏதும் நடக்கவில்லை.
எங்கள் குழுவில் உள்ள அனைவருமே 2010க்குப் பிறகு பிறந்தவர்கள். நாங்கள் வளரிளம் பருவத்தை அடைந்தபோதுதான் சட்டையும் வெளியானது. அன்றைய சூழலில் இணைய ஊடகம் என்பதே ஒரு மாபெரும் கவனச்சிதறல் என்ற புரிதல்தான் பொதுவில் இருந்தது. பொதுவெளியில் சிகரெட் பிடிப்பது போலவே பொதுவெளியில் அலைபேசி பயன்படுத்துவதும் பார்க்கப்பட்டது. பத்து நொடிகளுக்கு மேல் யாராலும் எதையும் கவனம் கொடுத்துப் பார்க்க இயலவில்லை. நிரூபணவாத அறிவியல் உருவாக்கியற்றில் மட்டுமே ஸ்திரத்தன்மை எஞ்சி இருந்தது. ஒட்டுமொத்தமாக மனித இனத்தின் நினைவுத்திறன் குறைந்து கொண்டே வந்தது. உலகின் பல நாடுகள் மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி அளிக்க முயன்றன. ஆனால் மாணவர்களை பேனாவை எழுதப் பயன்படுத்தச் சொல்வது பழமைவாதம் என்று அந்த முயற்சிகளுக்கு மனித உரிமை அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. யாருக்கும் கடந்த காலமே இல்லை. மனிதர்களிடம் கவனமின்மை பெருகப் பெருக கடவுளின் தேவையும் அதிகமானது. கடவுள் நம்பிக்கை அரசாங்கங்களை இன்னும் ஸ்திரத்தன்மை உடையதாக ஆக்கியது. அரசாங்கம் என்பது புனித அதிகாரம் என்றும் அது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்றும் மக்கள் நம்பத் தொடங்கினர். இந்தச் சூழலில்தான் சட்டை வளரத் தொடங்கியது. இந்தச் சூழலுடன் சட்டை தன்னை எவ்வகையிலும் பொருத்திக் கொள்ளாதது கொஞ்சமாவது புத்தியுடன் செயல்பட்ட இளைஞர்களிடம் ஈர்ப்பினை ஏற்படுத்தியது. இன்று சட்டைக்கு எதிராக இந்த அறிக்கையை அளிக்கும் நாங்கள் அனைவரும் சட்டை 2040ல் நடத்திய ஒரு தொழில்நுட்ப பயிலரங்கில் சந்தித்துக் கொண்டவர்கள்தான்!
பயிலரங்கின் கடைசி நாள் சட்டையின் நிறுவனர் வந்திருந்தார். அவர் நிறுவனர் அணிந்திருந்த கோட் வித்தியாசமாக இருந்தது. அது என்னவென்று கேட்டபோது அவர் 'சட்டை' என்று சொல்லிச் சிரித்தார். சட்டை என்பது தமிழ் என்ற மொழியில் மேலுடையைக் குறிக்கும் சொல்லும்கூட. அது தெரிந்த எங்கள் குழு உறுப்பினர்கள் சிலர் சிரித்தனர். அவருடைய கோட் தான் அவருடைய சூப்பர் கம்ப்யூட்டர். அவரைப் பார்த்தபோது ஏதோவொரு உள்ளுணர்வால் உந்தப்பட்டு அதிருப்தி அடைந்த சிலர் ஒன்றிணைந்து பேசினோம். நாங்கள் சட்டையை கவனிக்கத் தொடங்கினோம்.
*******
நினைவு மனிதர்களுக்குப் பெரும்சுமை. மனிதர்களின் பல்வேறு உளவியல் கோளாறுகள் நினைவில்தான் உருவாகின்றன. இன்றைய விஞ்ஞானம் இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு உலகை நிலைநிறுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்துவிட்டது. அணு ஆயுதங்கள் பயன்பாட்டுக்கே வரப்போவதில்லை. ஒரு தேசம் இன்னொரு தேசத்தின் மீது போர் தொடுக்கும் என்ற சிறுபிள்ளைத்தனமான பயங்களை நாம் கடந்துவிட்டோம். உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக நாம் வலுவான முன்னெடுப்புகளைச் செய்கிறோம். அப்படியிருக்க உண்மையில் மனிதர்களைத் துன்புறுத்துவது எது? அவர்களுடைய நினைவுகள்தான். ஒவ்வொரு மனிதரின் நினைவும் அவரை அவருடைய கடந்த காலத்துடன் பிணைக்கிறது. அது அவருடைய தனி வாழ்க்கையை வரலாற்றுடன் இணைப்பதுதான். தனிவாழ்க்கை வரலாற்றுடன் இணைப்பது மனிதர்களை துன்புறுத்துகிறது. ஒவ்வொரு மனிதரும் அவருடைய மதத்திற்கு இனத்திற்கு மொழிக்கு பொறுப்பாகிறார். நாட்டுக்குப் பொறுப்பாகிறார். ஆகவே இன்னொரு நாட்டுக்கு எதிரியும் ஆகிறார். ஒரு கருத்திற்கு ஆதரவாகிறார். இன்னொன்றிற்கு எதிரியாகிறார். லட்சிய நிலைகளில் நம்பிக்கை கொள்கிறார். பிறகு முடிவற்ற துன்பம்தான்.
சட்டை இந்தச் சிக்கலை எதிர்கொள்ள முனைந்தது. நினைவுகளின் பிரச்சினை தொடங்குமிடம் மனிதர்கள் தங்களுக்கு நிரந்தரமான வரலாறு இருந்தது என்று நம்புவதில் தொடங்குகிறது. வரலாற்றின் வழியாக தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பீடுகளை பின்பற்றவும் பாதுகாக்கவும் வேண்டும் என்று மனிதர்கள் நம்புகிறார்கள். சாதாரண உறவுச்சிக்கல்களில் கூட கடந்த காலத்தின் வரலாற்றின் தலையீடு இல்லாமல் இருப்பதில்லை. அன்றாடத்தை சுமையற்று வாழ்வதற்கு வரலாற்றின் மீதான இந்த நம்பிக்கையை போக்க வேண்டும் என்று நினைத்தேன்.
*****
2040வாக்கில் சட்டை பல நாடுகளில் அதிகாரப்பூர்வமான தகவல் மையமாக மாறியிருந்தது. அந்த சமயத்தில் வரலாறு மொழி போன்ற துறைகளில் கற்பவர்கள் குறைந்து போயிருந்தார்கள். உலகமே தொழில்நுட்பம் தத்துவம் பொருளாதாரம் போன்ற துறைகளை நோக்கியே ஓடியது. தத்துவமுமே கூட பணக்காரர்கள் ஆடும் ஒரு சிக்கலான மூளை விளையாட்டு என்ற நிலைக்குப் போய்விட்டது. மனிதர்களின் நினைவையும் பிரக்ஞையையும் கட்டமைக்கும் துறைகளான வரலாறு இலக்கியம் போன்றவை சீந்துவார் இல்லாமலாயின. இலக்கிய வாசிப்பின் வழியான ஒரு மனிதர் அடையும் அகத்தூண்டலை சில சாதனங்கள் வழியே பெற முடியும் என்ற வகையான ஆய்வுகள் செல்வாக்கு பெறத் தொடங்கின. ஏறத்தாழ இந்த சமயத்தில் உடலுறவிலும் மனிதர்கள் ஆர்வமிழந்து போயிருந்தனர். ஹோலோகிராம் வழியாக உலகில் யாரையும் யாரும் புணர முடிந்தது. வாசனை வியர்வை எச்சில் போன்றவற்றை அனுபவிப்பதற்கான தொழில்நுட்பங்களும் வளர்ந்திருந்தன. 2030வாக்கில் குழந்தை வளர்ப்பு உலகம் முழுக்க பெரிய பிரச்சினையாக தலைதூக்கியபோது பெரும் நிறுவனங்கள் குழந்தை வளர்ப்பில் உள்ள வருமானத்தை உணர்ந்து பல்வேறு செயல்திட்டங்கள் வழியாக பெற்றோர் அவசியமற்ற குழந்தை வளர்ப்பு (no parent parenting) முறைகளை வளர்த்தெடுத்தனர். மனிதர்கள் தங்களுடைய அன்றாடங்களை நகர்த்துவதற்கு அவர்களுக்கு பழைய காலங்கள் தேவை இல்லாமலானது. மனிதருள் தோன்றும் உணர்ச்சிப் பெருக்குகளின் தன்மையை சட்டை மிகத் துல்லியமாக கணித்து அப்பெருக்கினை கையாண்டது. ஹோமியோபதி என்ற மருத்துவமுறையில் நோயின் தன்மையைக் கண்டறிய மருத்துவர் நோயாளியிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்பார். நோயாளியின் படுக்கை அறை பணிச்சூழல் என்று எல்லாமும் அறிந்த பிறகே சிகிச்சை அளிப்பார். சட்டை ஏறத்தாழ அப்படித்தான் இயங்கியது. ஒரு பெண் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட வாய்ப்பிருந்தால் அவளுடைய மொத்த சூழலையும் சட்டையால் கணிக்க முடிந்தது. ஏனெனில் அவளைச் சூழ்ந்து இருப்பவர்களின் மன அமைப்பும் சட்டைக்குத் தெரியும். ஆகவே அகச்சிக்கல்களுக்கு மிகத் துல்லியமான தீர்வினை அளித்தது . ஆன்மீக குருமார்கள் பலரும் சட்டையால் செல்வாக்கு இழந்தனர்.
இந்த மாற்றங்களை நாங்கள் கவனித்தே வந்திருந்தோம். மனிதர்களிடம் இயல்பான நட்புறவு இல்லாமலானது. எல்லா உறவுகளும் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டன. எல்லோருக்கும் உலகை பாதுகாப்பது பற்றிய அக்கறை ஏற்பட்டது. ஆனால் அது எந்திரத்தனமானதாக இருந்தது. சக மனிதர்களை ஒருவகையான தொந்தரவு என்றே எல்லோரும் உணரத் தொடங்கினர். சட்டை மிகச் சரியாக இந்த இடத்தை பயன்படுத்திக் கொண்டது. ஏதோ உயரிய கொள்கை போல மனிதர்களை நினைவுச்சுமையிலிருந்து வெளியேற்றுவதாக பிரச்சாரம் செய்யத் தொடங்கியது. கடந்த காலத்துடன் நமக்கிருக்கும் உறவு கைமாற்றப்பட்ட நினைவுகள் வழியாகவே தொடர்கிறது. வரலாறு என்று நாம் சொல்வது கடந்தகால ஆவணங்களைச் சார்ந்திருக்கிறது. சட்டை கடந்த காலத்தின் அடிப்படை ஆவணங்களில் மாற்றத்தை உண்டாக்கியது.
ஜெர்மனியை ஆண்ட ஹிட்லர் என்பவர் யூதர்களைக் கொன்றார் என்றொரு தகவல் பரவியது. இந்தியாவில் வாழ்ந்த காந்தி என்பவர் மக்களை சாத்வீக போராட்டத்துக்கு தயார்படுத்தினார் என்றொரு கூட்டம் கிளம்பி அதுவொரு தனிமதமாக வளரத் தொடங்கியது. காந்தி தூக்கிட்டுக் கொண்டார் என்றும் இறைவனுடன் ஐக்கியமானார் என்றும் இருவேறு கருத்துகள் நிலவிய சூழலில் அவர் அவருடைய தேசத்தைச் சேர்ந்த ஒருவனாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற வதந்தி பரவியபோதுதான் அது வதந்தியா உண்மையா என்பதைக் கண்டறிய நாங்கள் வேலையில் இறங்கினோம்.
சட்டை மிக நுணுக்கமாக தகவல்களை மாற்றி அமைத்திருக்கிறது. சட்டை தொடங்கப்பட்ட பத்தாண்டுகளுக்குள்ளாகவே உலகின் முக்கியமான இணைய சேவை நிறுவனங்களுடன் பல்வேறு ஒப்பந்தங்களை செய்து கொண்டது.உண்மையில் சட்டை இணைய சேவை நிறுவனங்களுக்குத்தான் அதிகமாகத் தேவைப்பட்டது. உணவு விநியோக செயலிகள் தொடங்கி உளவியல் ஆலோசனைச் செயலிகள், கருத்தரிப்பு கருக்கலைப்பு சேவை செயலிகள், குழந்தை வளர்ப்புச் செயலிகள், பொருளாதார ஆலோசனைச் செயலிகள், போர் தளவாட விற்பனைச் செயலிகள், நிதி மேலாண்மைச் செயலிகள் என்று சட்டையின் இணைவு எல்லா தளங்களிலும் நிகழ்ந்தது. 2040க்குப் பிறகு அச்சு நூல்களை கூடுமானவரை மென்பிரதிகளாக்கும் வேலை மும்முரமடைந்தது. நூல்களை சுலபமாக எரித்து அழிப்பதன் வழியாக பூமியில் நிறைய இடத்தை மிச்சப்படுத்த முடியும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டு அதற்கான வேலைகள் துரிதப்பட்டன. இருபத்தோராம் நூற்றாண்டு முதல் ஐம்பது வருடங்களை கடந்திருந்தபோது இருபதாம் நூற்றாண்டு சட்டையின் வசம் வந்தது.
ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய வரலாறுகூட குழப்பம் நிறைந்ததாக மாறியது. மென்பிரதிகளில் சட்டையினால் பல்வேறு மாற்றங்களைச் செய்ய முடிந்தது. ஒவ்வொரு மனிதரும் தனக்கு விருப்பமான வரலாறு எதுவோ அதுவே உண்மை வரலாறு என்று நம்பினர். மனிதர்களின் பெரும்பாலான மூதாதையர்கள் பெருவீரர்களாக மாறினர். நாடாண்டனர். பெண்கள் தங்களுக்கென ஒரு தாய்வழி வரலாற்றை உருவாக்கினர். வரலாற்றுக் காலம் தூரம் குறைந்ததாக மாறியது. மனிதர்கள் அன்றன்றைய தினத்தில் ஈசல் போல வாழத் தொடங்கினர்.
ஏதோவொரு வகையில் நினைவுகளை தக்க வைத்தவர்களுக்கும் அவர்களால் ஈசல் என்ற அழைக்கப்பட்ட வெகுமக்களுக்கும் இடையே மனஸ்தாபங்கள் மூண்டன. அது அரசியலில் பிரதிபலித்தது. உலகின் பல்வேறு நாடுகளின் அதிகார மையங்களை ஈசல் மனிதர்கள் கைப்பற்றினர். 2060ஆம் ஆண்டு முதல் சட்டையின் நிறுவனரை யாருமே பார்க்கவில்லை.
இன்று ஐநாவின் முன்பு இந்த அறிக்கையை சமர்ப்பிப்பது கூட பயனற்ற செயல்தான். ஐநாவிற்கு இன்று எந்த அதிகாரமும் இல்லை. 2025ல் இந்தியாவின் பிரதமராக இருந்த நரேந்திர மோடி திருமணமாகாதவர் என்று இன்றைய ஈசல் அரசுகளிடம் சொன்னால் அது மனித குல விரோதக் கருத்தாகக் கருதப்படும். எங்களுடைய நினைவின் மீது எங்களுக்கு சந்தேகமில்லை. நாங்கள் எல்லோரும் இப்போது அறுபது வயதை நெருங்குகிறோம். எங்கள் குழுவில் பலர் மன அழுத்தத்தில் இறந்துவிட்டனர். உண்மை வெளிவர ஒரேவழி சட்டையின் மென்பொருள் மட்டும்தான்.
அந்த மென்பொருளில் அது மாற்றியமைத்த தகவல்களின் பெருந்திரட்டு உள்ளது. அதுதான் எது உண்மை என்று நம்மிடம் சொல்ல முடியும். ஆனால் அதை இன்று யாராலும் அணுக முடியாது. உலகிலேயே மிகுந்த பாதுகாப்பு நிறைந்த ஒரு கட்டிடத்தில் சட்டை உள்ளது. அந்த சட்டையை அணிந்து கொண்டு அதன் நிறுவனர் அமர்ந்திருக்கிறார். இறைவன் அவர் ஆடையுடன் அங்கு உட்கார்ந்திருக்கிறார்.
முற்றும்.
அரூ விஞ்ஞான சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற சிறுகதைகளைப் படித்த போது மண்டை சுழன்ற மாதிரி இச்சிறுகதையை வாசிக்கும் போது ஏற்பட்டது. 2040, 2050 அல்லது 2100 என்று வருடத்தைக் குறிப்பிட்டு விட்டால் கதையில் ‘அடிச்சுவிடும்’ உரிமையைக் கையிலெடுத்துக் கொள்ள ஏதுவாகிவிடுகிறது. Speculative fiction, Sci-fi, Magical realism என கலந்து கட்டி அடிக்க முடிகிறது இதனை எழுத்தாளனின் எழுத்துச் சுதந்திரம் என எடுத்துக் கொள்ள முடியவில்லை. Ursula k le guin இத்தகைய விஷயங்களை எவ்வளவு அநாயசமாக கலையாக்குகிறார் என ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரு விஞ்ஞான சிறுகதையை அல்லது அது போல ஒன்றை எழுதும் முன் தெரிந்து கொள்வது அவசியம் எனப்படுகிறது. Ursula k le guin பெயரை இங்கே வெறும் Name Dropping ஆகப் பயன்படுத்தவில்லை .மன்னிக்க சுரேஷ். உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை.
ReplyDeleteஇது கதையே அல்ல கவிதை ...இதோ இந்த கதையை இப்படி புரிகிறேன்...உடலொரு சட்டை உயிருக்கு மனம் ஓரு சட்டை உடலுக்கு அறிவே நீ வெறும் கற்பிதம்...அவனே நான் எவனா நானா ...நானே பிரம்மன்
ReplyDelete