காந்தி - தன்முழுமையின் செயல் வடிவம்
2012ஆம் ஆண்டு இளங்கலை பொறியியல் முடித்து என்ன வேலையும் கிடைக்காமல் என்ன செய்வதென்று தெரியாமல் கல்லூரியைவிட்டு வெளியேறி வீட்டில் கிடந்த சமயம் அண்ணன் ஆசிரியராக பணிபுரிந்து ஓஎம்டி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் சில மாதங்கள் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல் பாடம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பள்ளியில் இயற்பியல் பாடமெடுத்த ஆசிரியர் எதிர்பாராத விடுப்பில் சென்றிருந்ததாலும் மாணவர்களுக்கு உடனடியாக ஒரு ஆசிரியர் தேவைப்பட்டதாலும் இந்த தற்காலிக ஏற்பாடு. பொறியியல் படித்தவன் பள்ளி மாணவர்களுக்கு இயற்பியல் எடுப்பது ஒரு மெல்லிய ஏளனப்பார்வையையும் என் மீது படரவிட்டிருந்தது அப்போது. அடுத்த ஆண்டு நடைபெற இருந்த கேட் (Graduate Aptitude Test for Engineering என்பதன் சுருக்கம்) தேர்வுக்கு படித்துக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் பள்ளிக்கு சென்று வந்து கொண்டிருந்த நாட்கள் அவை. யாரும் ஏதேனும் சொல்லி விடுவார்களோ என்ற பதற்றம் எப்போதும் மனதில் இருந்தது. பாடமெடுத்தது போக மற்ற நேரங்களில் அந்த பள்ளியின் ஆசிரியர்கள் அறையில் யாருடனும் அதிகமாக பேச்சு கொடுக்காமல் ஏதேனும் புத்தகத்தை எடுத்து தலைகவிழ்ந்தபடிக்...