சீர்மை குறித்து கதிரேசன்
நதிக்கரை இலக்கிய வட்டத்தின் இம்மாதக் கூட்டம் இன்று(30.12.2018) திருவாரூர் மாவட மைய நூலகத்தில் நடைபெற்றது. இம்முறை இளம் எழுத்தாளராகிய அரவிந்தனின் சீர்மை நாவல் பேசுவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இச்சிறுநாவல் கென் வில்பர் என்ற அறிஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு வகையான Biograpahical fiction.
தன் வாழ்வின் முப்பது வயதுவரை மற்றவர்களைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் கென் வில்பருக்கு திடீரென மனதில் ஒரு மெல்லிய துக்கம் பரவுகிறது. மெல்ல அத்துக்கம் தேடலாகி மாறி அவரை அலைக்கழிக்கிறது. எதேச்சையாக தன் புத்தகவெளியீட்டில் சந்திக்கும் ஒருவரின் தூண்டுதல் மூலம் உலகில் நிகழ்ந்து வரும் ஒட்டுமொத்த அறிவுத் துறையையும் ஒன்றாக இணைக்க முடியுமா? என்ற மாபெரும் முயற்சியில் ஈடுபடத்தொடங்குகிறார்.
இதற்கிடையில் அவருக்கு நண்பர்கள் ஏற்பாட்டின் மூலம் த்ரேயா என்ற பெண்ணுடன் திருமணமாகிறது. மகிழ்ச்சியான அவர்களின் திருமண வாழ்க்கையில் பெரும் அதிர்ச்சியாய் சிறிது நாட்களுக்குள்ளாகவே த்ரேயாவிற்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அது அவர்களின் இருவரின் வாழ்க்கையையும் புரட்டிப் போடுகிறது. தொடர் சிகிச்கிச்சையால் அவதியுறும் த்ரேயா ஒரு கட்டத்தில் சிகிச்சை போதுமென்று வீட்டிற்கு வந்துவிடுகிறாள். கென்னுக்கும் அவளுக்கும் உள்ள உறவு ஒருகட்டத்தில் தீவிர வெறுப்பாக மாறுகிறது.
த்ரேயா தன் தனிமையை போக்க ஓவியம் வரைய ஆரம்பித்து அதில் மூழ்கிறாள் . கென் தன் கவலை மறக்க மதுவருந்தத் துவங்கியவன் கடைசியில் நண்பர்களுடன் சேர்ந்து தினமும் கஞ்சா அடித்து போதையில் மூழ்குகிறான் .ஒரு நாள் "அவ்வளவுதான்" என்று தன் கடைசி வார்த்தையை உதிர்த்து விட்டு த்ரேயா இறந்து விட கென் அவளை மறக்க மீண்டும் தீவிரமாக எழுதுகிறார். தன் கனவான theory of everything என்ற புத்தகத்தை எழுதி முடிக்கிறார் . புத்தகம் மிகவும் பிரபலத்தையும் இந்த நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளர் என்ற புகழை கென்னும் பெறுகின்றனர். ஒரு நாள் தற்செயலாக அவன் மனைவி வரைந்த ஓவியங்களைப் பார்க்கிறான். அதில் அவள் இறுதி நாட்களில் வரைந்த ஓவியங்கலின் உச்சபட்ச சீர்மை அவனை வியப்புறச் செய்கிறது. அதை நினைத்துக் கொண்டிருக்கும்போதே இறுதியில் போட்டோ காமிரவில் இருந்து வெளிப்படும் பர்பெக்ட் வெளிச்சத்தின் சீர்மையில் முடிகிறது நாவல்.
இன்று மருத்துவம், கலை, இலக்கியம், மருத்துவம் என அனைத்து அறிவுத்துறைகளும் ஒரு வகையான நுண்மைகளை நோக்கி போய்கொண்டிருக்கின்றன. இத்துறைகளில் ஈடுபடும் ஒருவர் தன் வாழ்வில் தான் மேற்கொள்ளும் ஒட்டுமொத்த அறிவுச் செயல்பாட்டிற்கும் அந்த ஒரு துறையிலிருந்தே தனக்கான விட கிடைக்கும் என்று நம்புகிறார். உதராணமாக மருத்துவத் துறை என்பது முன்பெல்லாம் பெரும்பாலும் மருத்துவர்கள் என்பவர்கள் பொதுவானவர்கள் ஆனால் இன்று ஒவ்வொரு உறுப்பிற்கும் ஒரு மருத்துவர் என்ற நுண்மையை நோக்கி சென்றுள்ளோம், அல்லோபதி மருத்துவம் படித்த ஒருவருக்கு மரபான மருத்துவம் மீது எந்த அறிவும், பயிற்சியும் தேவையில்லை, அவர் அனைத்து நோய்களுக்கும் தான் சார்ந்த மருத்துவ முறையே சிறந்தது என்று நம்புகிறார் . மற்ற மருத்துவத் துறையில் நடப்பது குறித்து அவனுக்கு தெரிவதற்கான அவசியமும் இல்லை, இங்கு தான் கென் வில்ல்பர், ஒரு அறிவுத்துறைக்கும் இன்னொரு அறிவுத்துறைக்குமான தொடும் புள்ளியை வைத்து அனைத்தையும் ஒட்டுமொத்தமாக ஒரு புள்ளியில் தொகுத்து ( ஒரு சீர்மையை) கொண்டுவர முடியுமாவென்பதே அவருடைய தியரி ஆப் எவ்ரிதிங்க் என்ற புத்தகம் அவர் வாழ்வின் ஏற்ற இறக்கத்தை தாண்டி முழுமை ( சீர்மை) அடையும் புள்ளியில் இந்நாவல் முடிகிறது.
ஒரு செவ்வியலாக்க படைப்பின் தன்மையென்பது அது புழங்கும் துறையில் உள்ள ஒட்டு மொத்த அம்சத்தையும் அக்குறிப்பிட்ட படைப்பிற்குள்கொண்டு வந்து விடுவது.அடுத்து வரும் படைப்புகளுக்கு ஒரு முதன்மையாக இருப்பது. அந்த வகையில் சீர்மை நம் இலக்கிய பரப்பில் ஒரு செவ்வியல் படைப்பு என்றார் சுரேஷ் பிரதீப்.
மேலும் நாவலில் த்ரேயா புற்று நோயால் அவதியுற்று இறக்கும் தருவாயில் அவளுக்கு கென் மேல் தோன்றும் உச்சபட்ச வெறுப்பு .உலகில் எய்தி நிறைவடையும் வாழ்வைவிட அறுபட்டு முடியும் வாழ்வே அதிகம். அவ்வாழ்வின் மீதுள்ள உச்சபட்ச ஈடுபாடும் விருப்பமும் எதிர்ப்பார்ப்புகள் நடக்காமல் போகும் போது வரும் எரிச்சலையும் சில முதியோர்களின் மரணத்தருவாயில் பார்த்திருக்கிறேன். இலக்கியத்திலும் இது விரிவாக்கப் பேசப்பட்டிருக்கிறது உதாரணம் (ஜெயமோனின் ரப்பர் நாவலில் வரும் பொன்னுபெருவட்டர்). தாரசங்கர் பானர்ஜியின் ஆரோக்யநிகேதனம் நாவல் இந்த புள்ளியைத் தான் இந்திய மனமும் மேற்கத்திய மனமும் மரணத்தைக் குறித்து எப்படிப்பட்ட பார்வையைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பிரத்யோத், ஜீவன் மாஸாய் இருவரின் இரு தரப்பாக நின்று சித்தரிக்கிறது.
மேலும் உண்மை சம்பவங்கள் அல்லது வரலாற்றில் நடக்கும் இடைவெளியைக் புனைவை கொண்டு நிரப்பப்படும் போது வரும் சவால்கள் அதன் எல்லைகள் குறித்து பேசப்பட்டது, குறிப்பாக, சமீபத்தில் வந்த சரவண கார்த்திகேயனின் ஆப்பிளுக்கு முன் நாவல், பிரபஞ்சன் எழுதிய வானம் வசப்படு, மானுடம் வெல்லும் ஆகிய நாவல்கள், ஜெயமோகனின் மெல்லிய நூல் சிறுகதை ஆகியன குறித்தும் விவாதிக்கப்பட்டது.
வரலாற்று ஆய்வுகளும், தரவுகளும் மட்டுமல்லாமல் யூகங்களும், கற்பனைகளும், சேர்ந்தே விடுபடுகின்றன, வரலாற்றில் தரவுகளின் விடுபடல் அல்லது ஒருவரின் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட பகுதி நம் தர்க்கத்திற்கு அடங்காமல், அதைப்பற்றிய தெளிவான வரையறை ஏதும் இல்லாமல் இருக்கும் போது அதை புனைவாக எழுதிப்பார்க்கலாம். ஆனால் அது சர்ச்சைக்குரிய விஷயமாக, பொதுமனப்பான்மையிலிருந்து இல்லாமல் , அப்படைப்பை எழுதும் படைப்பாளிக்கு நெருக்கமாக இருக்கவேண்டும். அவ்வகையில் எழுதப்பட்ட படைப்புகளில் ஒரு உச்சம் சீர்மை நாவல். சுரேஷ் பிரதீப் இவ்வாறு இந்திய பழங்குடிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து, அவர்களைப் பற்றி நூல்கள் எழுதிய இனவரையிலார் வெரியர் எல்வினைப் பற்றி ஒரு சிறுகதை எழுதுவதாகச் சொன்னார்.
இவ்வகை படைப்புகளின் குறைபாடு அல்லது எல்லை என்பது, ஆசிரியன் வரலாற்றில் விடுபட்ட இடத்தை மட்டுமே தன கற்பனை கொண்டு நிரப்ப முடியும், அவனின் தனிப்பட்ட கொள்கைகள் அபிப்ராயங்களுக்கு இடமில்லை, தரவுகளை சரியாக சொல்லும் போது மட்டுமே அது உண்மைத் தன்மையை ஒரளவிற்கு நெருங்கி செல்கிறது கிறது. அவ்வகையில் சீர்மை தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறிய மிகச்சிறந்த படைப்பு.
Comments
Post a Comment