பரிசுப்பொருள் - சிறுகதை
பாண்டவையாற்றை குறுக்காகக் கடந்த கமலாபுரம் பாலத்தில் வெயில் விரிந்து கிடந்தது . மோனிகா பயணப்பையுடன் கமலாபுரத்தில் இறங்கிய போது சாலையில் பரவலாக தேங்கியிருந்த மழைநீர் காலைச் சூரியன் பட்டு அவள் கண்களை கூசச் செய்தது. புறங்கையை கண்களுக்கு நேரே நீட்டிக் கொண்டு நின்று பேருந்தில் வந்ததால் ஏற்பட்ட உடற்சமநிலையின்மையை சரிபடுத்த முயன்றாள். கை மூட்டுகளிலும் விரல் பொருதுகளிலும் உடலிலும் மெல்லிய உலைச்சல் எடுக்க நின்றபடியே சோம்பல் முறித்தாள். ரொம்ப சாயக்கூடாது என்பது நினைவிற்கு வர அப்படியே நின்றுவிட்டாள். உடலில் ஒரு சமநிலையின்மை சில கணங்கள் நீடித்தது. இருந்தாலும் ஒரு விடுதலையை உணர முடிந்தது. வெறுமையுடன் புன்னகைத்துக் கொண்டாள். அவளெதிரே வந்து நின்ற சன்ஸ்கிரீன் ஒட்டப்பட்ட ஃபார்சூனர் காரில் முகத்தைப் பார்த்தாள். சிகையை பின்னுக்குத் தள்ளி விலகியிருந்த சிறிய ஸ்டிக்கர் பொட்டினை நெற்றி நடுவே அமைத்தபோது முகம் பொலிவுற்றது. அவள் முகம் திருப்தியைக்காட்ட அதற்கெனவே நின்றிருந்தது போல அந்த ஃபார்ச்சூனர் கடந்து சென்றது. ஓரக்கண் சற்று தூரத்தில் பழக்கப்பட்ட உடலசைவுகளை காட்டியது. சிவக்குமார் தான். ச...