சாரு நிவேதிதாவை வாசித்தல் 2
எக்ஸைல் நாவலில் இடம்பெறும் சித்தரிப்பு. குணரத்தினம் என்றொருவரை எக்ஸைலின் கதை சொல்லியான உதயா ஃப்ரான்ஸில் சந்திக்கிறான். (சாருவின் பிற நாவல்களைப் போல ஏகப்பட்ட கிளைகளாகப் பிரிந்தாலும் இப்பெருநாவலிலும் கதை சொல்லி ஒருவன்தான்). குணரத்தினம் ஒரு இலங்கைத் தமிழர். இலங்கையில் பேராசிரியராக இருந்தவர். உதயாவிடம் நான்கு நாட்களாகப் பேசிக் கொண்டே இருக்கிறார். தகவல்கள் துல்லியமாக அவர் பேச்சில் வந்து விழுகின்றன. உதயாவிற்கு கழிப்பறை செல்லும் நேரம் தவிர பிற நேரங்களில் அந்தப் பேச்சிலிருந்து விடுதலையே கிடைப்பதில்லை. குணரத்தினம் ஒரு மார்க்ஸியரும்கூட. அவர் வீட்டில் தங்கி இருக்கும்போது மூன்றாம் நாள் இரவு உதயாவுக்கு ஒரு கனவு வருகிறது. அவன் எங்கோ கடத்திக் கொண்டு போகப்படுகிறான். தான் கொல்லப்படப் போகிறோம் என்பது அவனுக்கு உறுதியாகத் தெரிகிறது. அதோடு மூத்திரம் வேறு முட்டுகிறது. தன்னை விட்டுவிடும்படி கெஞ்சுகிறான். தான் செய்த எல்லாத் தவறுகளுக்கும் மன்னிப்பு கேட்கிறான். இனி எழுதவே போவதில்லை, உயிரோடு மட்டும் விடுங்கள் அதோடு மூத்திரம் பெய்யவும் அனுமதியுங்கள் என்று கெஞ்சுகிறான். அவனுடைய கால்சராய் நனைந்து போயிருக்கிறது...