இலக்கிய முன்னோடிகள் என்னும் 'தேறாத கேஸ்கள்'
அழிசி பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் 'சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்', 'புதுமையும் பித்தமும் (ஆளுமை-படைப்பு-விவாதம்)' என்ற இரு நூல்களும் நவீனத் தமிழ் இலக்கிய வரலாறு, இலக்கிய விமர்சனம் என்ற இரு வகையிலும் முக்கியமான நூல்கள். இவ்விரு நூல்களின் ஆசிரியரும் க.நா.சுப்ரமண்யம்தான் என்றாலும் இந்த நூல்கள் க.நா.சுவால் வெளியிடப்படவில்லை. சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் நூலில் எழுத்து இதழில் 1959ஆம் ஆண்டும் அதைத் தொடர்ந்த சில ஆண்டுகளிலும் தமிழின் சிறந்த சிறுகதைகளை தொகுப்பது என்றால் தன்னுடைய எதிர்பார்ப்பு எத்தகையதாக இருக்கும் என்று க.நா.சு எழுதிய கட்டுரைகளும் அதற்கான எதிர்வினைகளும் க.நா.சுவால் முன்வைக்கப்பட்ட எட்டு சிறுகதைகளும்(மௌனி, புதுமைப்பித்தன்,கு.ப.ராஜகோபாலன்,ந.பிச்சமூர்த்தி ஆகியோரின் தலா இரண்டு சிறுகதைகள்) தொகுக்கப்பட்டிருக்கின்றன. புதுமையும் பித்தமும் என்ற நூலில் க.நா.சுவுக்கும் புதுமைப்பித்தனுக்கும் நடந்த விவாதங்கள்,க.நா.சு புதுமைப்பித்தன் பற்றி எழுதிய சில கட்டுரைகள் (புதுமையும் பித்தமும் என்ற மிக முக்கியமான கட்டுரை உட்பட) மற்றும் ஒரு கவிதை ஆகியவை தொகுக்கப்பட்டுள்ளன.( இவ்விரு ந...