இலக்கிய முன்னோடிகள் என்னும் 'தேறாத கேஸ்கள்'



அழிசி பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் 'சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்', 'புதுமையும் பித்தமும் (ஆளுமை-படைப்பு-விவாதம்)' என்ற இரு நூல்களும் நவீனத் தமிழ் இலக்கிய வரலாறு, இலக்கிய விமர்சனம் என்ற இரு வகையிலும் முக்கியமான நூல்கள். இவ்விரு நூல்களின் ஆசிரியரும் க.நா.சுப்ரமண்யம்தான் என்றாலும் இந்த நூல்கள் க.நா.சுவால் வெளியிடப்படவில்லை. சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் நூலில் எழுத்து இதழில் 1959ஆம் ஆண்டும் அதைத் தொடர்ந்த சில ஆண்டுகளிலும் தமிழின் சிறந்த சிறுகதைகளை தொகுப்பது என்றால் தன்னுடைய எதிர்பார்ப்பு எத்தகையதாக இருக்கும் என்று க.நா.சு எழுதிய கட்டுரைகளும் அதற்கான எதிர்வினைகளும் க.நா.சுவால் முன்வைக்கப்பட்ட எட்டு சிறுகதைகளும்(மௌனி, புதுமைப்பித்தன்,கு.ப.ராஜகோபாலன்,ந.பிச்சமூர்த்தி ஆகியோரின் தலா இரண்டு சிறுகதைகள்) தொகுக்கப்பட்டிருக்கின்றன. புதுமையும் பித்தமும் என்ற நூலில் க.நா.சுவுக்கும் புதுமைப்பித்தனுக்கும் நடந்த விவாதங்கள்,க.நா.சு புதுமைப்பித்தன் பற்றி எழுதிய சில கட்டுரைகள் (புதுமையும் பித்தமும் என்ற மிக முக்கியமான கட்டுரை உட்பட) மற்றும் ஒரு கவிதை ஆகியவை தொகுக்கப்பட்டுள்ளன.( இவ்விரு நூல்களையும் முறையே பாலன் , பாலு என்ற இருவர் தொகுத்திருக்கின்றனர். இவ்விரு மர்ம நபர்களும் நண்பர் ஶ்ரீனிவாச கோபாலனின் புனைப்பெயர்கள் என்று கொள்வதில் தவறில்லை என நினைக்கிறேன்!) .


இலக்கிய விமர்சன மரபு வலுவிழந்திருக்கும் இன்றைய சூழலில் சங்கடமான விமர்சனங்களை மௌனமாக கடந்து செல்லும் 'நாகரிகம்(!?)' வலுப்பெற்றிருக்கும் இக்காலத்தில் க.நா.சுவின் இந்தக் கட்டுரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகப்படுகின்றன. க.நா.சு எந்த அளவுகோலின் அடிப்படையில் படைப்புகளை ஏற்கிறார் அல்லது நிராகரிக்கிறார் என்பது இக்கட்டுரைகளில் வெளிப்படவில்லைதான். ஆனால் அவருடைய கதை சார்ந்த 'நுண்ணுணர்வு' அவரைப் பெரும்பாலும் கைவிடவில்லை. இன்று யோசித்துப் பார்க்கும்போது நாம் நவீன இலக்கியத்தின் முன்னோடிகள் என்று உருவகிக்கும் வரிசை ஏறத்தாழ க.நா.சு என்ற ஒற்றை மனிதராலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லிவிடலாம். மணிக்கொடி காலம் தொடங்கி தொடர்ச்சியாக இலக்கியச் சூழலை அவதானித்துக் கொண்டே இருந்திருக்கிறார். அவர் தமிழில் வாசிக்கவும் எழுதவும் தொடங்குவது பதின்பருவம் கடந்தபிறகுதான். அதற்கு முன்னதாகவே ஐரோப்பிய இலக்கியத்தில் க.நா.சுவுக்கு ஆழமான பரிச்சயம் இருந்திருக்கிறது. அன்றைய சூழலில் 'கதைகள்' என்று முன்வைக்கப்பட்ட பெரும்பாலான எழுத்துக்களின் சாரமின்மையை மிகச் சரியாக எடுத்துக் காட்டுகிறார். அவ்வளவு கறாரான அளவுகோல் கொண்டிருப்பதாலேயே க‌.நா.சுவால் 1959வரை எழுதப்பட்ட ஒட்டுமொத்த சிறுகதைகளிலேயே ஒரு பதினைந்து கதைதான் 'தேறும்' என்று சொல்ல முடிகிறது. புதுமைப்பித்தன் எழுதிய எல்லாமும் பொக்கிஷம் என்று சொல்லப்படும் இந்தக் காலத்தில் கூட  புதுமைப்பித்தன் பற்றி க.நா.சுவின் 1959ஆம் வருட மதிப்பீடான 'பூரணம் பெறாத தனித்துவம்' என்பது பொருத்தமானதாக அமைகிறது (பின்னாட்களில் இந்நிலைப்பாட்டை க.நா.சுவே மாற்றிக் கொண்டார் என்பது வேறு கதை!) என்பதை வியக்காமல் இருக்க முடியவில்லை.





இலக்கிய 'மோஸ்தர்' என்பதற்கும் க.நா.சு எதிரானவராகவே இருந்திருக்கிறார். கல்கி போன்றோரை வெறும் 'பத்திரிக்கை கதைக்காரர்கள்' என்று நிராகரிக்கும் க.நா.சு மணிக்கொடி ஆசிரியர்களில் ஒருவரான பி.எஸ்.ராமையாவையும் நிராகரிக்கவே செய்கிறார். மணிக்கொடியில் எழுதப்படுவதெல்லாம் பொன்னாக இருக்க வேண்டும் என்ற முன்முடிவு எதுவும் க.நா.சுவிடம் இல்லை.‌ சிறந்த தமிழ்ச் சிறுகதைகளுக்கான க‌.நா.சுவின் எதிர்பார்ப்பு பெரும்பாலும் வடிவம் சார்ந்ததாகவே இருக்கிறது. சிறுகதையின் வடிவம் சார்ந்த தெளிவான புரிதல் உருவாகி இருக்காது காலத்தில் க.நா‌.சு மீண்டும் மீண்டும் கதைக்கும் சிறுகதைக்குமான வேறுபாட்டைச் சொல்லி சிறுகதையின் வடிவ இலக்கணங்களுக்குள் பொருந்திப் போகும் கதைகளையும் சிறுகதையின் வடிவ சாத்தியங்களைத் தாண்டிச் செல்லும் கதைகளையுமே சிறந்த கதைகள் என்று வரையறுக்கிறார். புதுமைப்பித்தன் கதைகளின் மீதான க.நா.சுவின் அங்கலாய்ப்பு இந்த வடிவம் சார்ந்ததாகவே இருக்கிறது. புதுமைப்பித்தன் இக்கதைகளை இன்னும் மேம்படுத்தி இருக்கலாமே என்றுதான் அக்கறைப்படுகிறார். புதுமைப்பித்தன் தன் கதைகளை திரும்ப வாசிப்பதே கிடையாது என்பதை பலமுறை இந்நூல்களில் சொல்லி இருக்கிறார்.





புதுமையும் பித்தமும் நூலில் தீவிரமான விமர்சன உளப்பாங்கு கொண்ட சமகால எழுத்தாளர்கள் இருவருக்கு இடையேயான உறவின் நெருக்கத்தையும் விலகலையும் காண்கிறோம். மணிக்கொடியில் சிற்பியின் நகரம் கதையை படித்துவிட்டு புதுமைப்பித்தனை க.நா.சு சந்திக்கச் செல்கிறார். முதல் சந்திப்பிலேயே 'இதுவும் நம்மைப்போலத் தேறாத கேஸ்' என்று சிரித்துக் கொண்டே புதுமைப்பித்தன் க.நா.சுவை நெருங்கிவிடுக. 'புதுமைப்பித்தன் என்ற ஒரு மேதை' என்கிற கட்டுரையில் க.நா.சு இப்படி எழுதுகிறார். 


/திருவனந்தபுரத்திலிருந்து நண்பர் ரகுநாதன் - சொ.வியின் கடைசி நாட்களில் அவருடன் கூட இருந்து உதவியவர் அவர்தான் - 'மருந்துச் செலவுக்கும் கூட சிரமப்படுகிறது. பண உதவி தேவை' என்று எனக்கு ஒரு கார்டு எழுதி,அதை அடித்திவிட்டு 'இன்று புதுமைப்பித்தன் காலமானார்' என்று 1948ல் எனக்கு எழுதினார்/


தன்னுடைய சக 'தேறாக கேஸ்' தன்னை விட்டு சீக்கிரம் போய்விட்டதான கவலையும் தான் நீண்ட நாட்கள் வாழ்வது குறித்த சலிப்பும் க.நா.சுவிடம் வெளிப்படுகிறது. இந்த கவலைக்கும் சலிப்புக்கும் அடியில் புறக்கணிப்பு மிகுந்த தமிழ்ச்சூழல் மீதான கசப்பும் வெளிப்படுகிறது. 'புதுமையும் பித்தமும்' ஐந்திணை பதிப்பகத்தின் வாயிலாக வெளியான புதுமைப்பித்தன் சிறுகதைகள் (இதுவொரு முழுத் தொகுப்புக்கான முயற்சி) நூலுக்கு க.நா.சு 1987ல் எழுதிய கட்டுரை. வேகம் குறைந்து சமநிலை கூடியிருக்கும் மொழியில் புதுமைப்பித்தன் படைப்புகள் பற்றி மட்டும் பேசிச் செல்லாமல் அவருடன் தான் பகிர்ந்து கொண்ட ஏராளமான நினைவுகளை இக்கட்டுரையில் சுவாரஸ்யமாக க.நா.சு விவரிக்கிறார். தன்னுடைய சொற்ப ஆயுள்காலத்தில் ஏறத்தாழ பதினைந்து வருடங்கள் புதுமைப்பித்தன் இலக்கியத்திற்கு பங்காற்றியிருக்கிறார். க.நா.சு இந்த பதினைந்து ஆண்டுகளில் பத்தாண்டுகள் புதுமைப்பித்தனின் நண்பராக இருந்திருக்கிறார். வெறும் பதினைந்து ஆண்டுகளில் புதுமைப்பித்தனின் அக்கறையற்ற விரிந்திருந்த எல்லைகளைப் பார்த்தால் மலைப்பு ஏற்படுகிறது. ஒரு‌ அக்மார்க் 'தேறாத கேஸ்' மட்டுமே இப்படி வெறிகொண்டு செயல்பட்டிருக்க மேடியும். க.நா.சு புதுமைப்பித்தனை சந்திக்கும்போது இருவருமே முப்பது தொடாத இளைஞர்கள்.(புதுமைப்பித்தன் க.நா.சுவுக்கு மூத்தவர்).  சுந்தர ராமசாமி தோட்டியின் மகனை மொழிபெயர்த்தபோது இருபது வயது.‌எம்.வி.வெங்கட்ராம் எழுதத் தொடங்கியபோது பதினாறு வயது என்கிறார்கள். ராஜமய்யர்,கு.ப.ரா,பாரதி எல்லோருமே சொற்ப வயதில் இறந்தவர்கள். இன்றைய ஆயுள் கால நீட்சியை ஒப்பிட்டால் ஐம்பத்து மூன்று வயதில் மறைந்த அ.மாதவையாவும் சொற்ப வயதில்தான் மறைந்திருக்கிறார். இந்த நூலில் என்னை அதிகம் தொந்தரவு செய்த விஷயம் முன்னோடிகளின் இந்த வயதுதான். இன்றைய சூழல் ஒரு வகையில் சோர்வளிப்பதாக உள்ளது. ரொம்ப நாள் உயிரோடு இருப்போம் என்கிற சொகுசு ஒட்டுமொத்த இலக்கிய உலகத்தையும் மந்தத்தன்மை கொண்டதாக மாற்றிவிட்டதாக தோன்றுகிறது.


க.நா.சுவுக்கும் புதுமைப்பித்தனுக்கும் நடந்த விவாதங்கள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. ஒரு கதையை 'தழுவி' எழுதுவது அவ்வளவு தவறாக எடுத்துக் கொள்ளப்படாத காலத்தில் க.நா.சுவும் புதுமைப்பித்தனும் தழுவல் குறித்து கொண்டிருந்த பார்வைகள் பல விஷயங்களை புரிய வைக்கின்றன. க.நா.சு போரும் அமைதியும் படித்த உற்சாகத்தில் ஏறத்தாழ இலக்கிய தூய்மைவாதியின் உன்மத்தத்துடன் ஒரு கட்டுரை எழுதுகிறார். அதற்கு மறுப்பாக

'இந்தக் கோபம் இலக்கிய சேவையா?' என்று புதுமைப்பித்தன் எழுதி இருக்கும் கட்டுரை மிக மிக முக்கியமானது. அதீதமான 'இலக்கியப்பற்று' சமூகத்தை ஒரு கலைஞன் அவதானிப்பதில் நிதானக்கேட்டினை ஏற்படுத்துவதை மிகத் தெளிவாக சுட்டிக் காட்டி இருக்கிறார். எப்போது நிதானமாக இருக்கும் க.நா.சு போரும் அமைதியும் கட்டுரையில் உணர்ச்சிவசப்படுவதும் உணர்ச்சிவசத்துடனேயே எழுதும் புதுமைப்பித்தன் நிதானமாக அக்கட்டுரைக்கு மறுப்பு எழுதி இருப்பதும் சுவாரஸ்யமான முரண்கள்!


இவ்விரு நூல்களும் இலக்கிய வரலாற்று நோக்கில் எழுதப்படவில்லை. ஆனால் அன்றைய சூழல் குறித்த ஒரு தெளிவினை அளித்துவிடுகின்றன. மேலும் சமகால இலக்கியவாதிகள் (வாசகர் எழுத்தாளர் இருவருமே) கற்பதற்கு இந்த விவாதங்களில் நிறைய இருப்பதாகவும் தோன்றுகிறது. ஒரு நல்ல 'தேறாத கேஸாக' மாற இந்நூல் வாசகரை ஊக்குவிக்கும் என்பது இதன் சிறப்பு!



Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024