Posts

Showing posts from 2022

2022ல் வாசித்த நூல்கள்

1.உச்சவழு - ஜெயமோகன் 2.வெண்கடல் - ஜெயமோகன் 3.குமரித்துறைவி - ஜெயமோகன் 4.பிரதமன் - ஜெயமோகன் 5.ஆனையில்லா - ஜெயமோகன் 6.ஐந்து நெருப்பு - ஜெயமோகன் 7.உண்மைகள் பொய்கள் கற்பனைகள் - அரிசங்கர் 8.பத்து லட்சம் காலடிகள் - ஜெயமோகன் 9.எழுகதிர் - ஜெயமோகன் 10.தங்கப்புத்தகம் - ஜெயமோகன் 11.ஆயிரம் ஊற்றுகள் - ஜெயமோகன் 12.முதுநாவல் - ஜெயமோகன் 13.தேவி - ஜெயமோகன் 14.வான்நெசவு - ஜெயமோகன் 15.மலை பூத்தபோது - ஜெயமோகன் 16.பொலிவதும் கலைவதும் - ஜெயமோகன் 17.இரு கலைஞர்கள் - ஜெயமோகன் 18.வாடிவாசல் - சி.சு.செல்லப்பா 19.ஷோஷா - ஐசக் பாஷவிஸ் சிங்கர்(தமிழில் - கோ.கமலக்கண்ணன்) 20.துயில் - எஸ்.ராமகிருஷ்ணன் 21.மண்டியிடுங்கள் தந்தையே - எஸ்.ராமகிருஷ்ணன் 22.நான் கண்ட மகாத்மா - தி.சு‌.அவினாசிலிங்கம் 23. வயலட் ஜன்னல் - உமா மகேஸ்வரி 24.எண்கோண மனிதன் - யுவன் சந்திரசேகர் 25.இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை - டி.தருமராஜ் 26. வேங்கைச்சவாரி - விவேக் ஷன்பேக் மொழிபெயர்ப்பு சிறுகதைகள்)  27.மிளகு - இரா.முருகன் 28.வ.உ.சியும் காந்தியும் -ஆ.இரா.வெங்கடாசலபதி 29.ஜின்னாவின் டைரி - கீரனூர் ஜாகிர்ராஜா 30.தலைப்பில்லாதவை - யுவன் சந்திரசேகர் 31...

சிறை

 வானை அடைத்துப் பறந்தது மாபெரும் காகம். காகத்தை நோக்கி நிமிர்ந்த என் எண்ணம் முழுவதும் அதனால் உறிஞ்சப்பட்டிருந்தது. அது காலமற்ற வெளியா வெளியற்ற காலமா என்பதை என் பிரக்ஞை உணரவில்லை. நான் உடலா மனமா எண்ணமா இருப்பா ஏதுமின்மையா என்பதையும் என்னால் அறிய முடியவில்லை. ஆனால் கடற்கரையில் பதிந்த காலடிச்சுவடென என் பிரக்ஞை எங்கிருந்து நகர்கிறதோ அங்கெல்லாம் தன் தடத்தை பதித்துக் கொண்டே வந்தது.‌ எல்லாமும் இற்றுப்போகும் ஒரு நிலைக்கென நான் எப்போதும் ஏக்கம் கொண்டிருக்கிறேன். அதுதான் அப்போதெனக்கு நிகழ்ந்து கொண்டிருந்ததா? பறக்கும் காகத்தின் சிறகு வழியே காற்றென வீசுகிறது ஒளி. எத்தனை வண்ணங்கள் அவ்வொளிக்கு. காக்கையின் சிறகுகள் எந்நிறத்தையும் உள்ளனுமதிக்காத கருமை என்று எண்ணியிருந்தது எவ்வளவு பெரிய தவறு! அது ஒவ்வொரு நிறத்தையும் ஒளிரச் செய்து கொண்டிருந்தது. நான் ஒளியை உண்டு கொண்டிருக்கிறேன். வண்ண வண்ண ஒளிகள். எவ்வளவு காலமெனத் தெரியவில்லை. என் உடலில் ஆடை இருந்ததா என் உடலே இருந்ததா என்றெல்லாம் என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நான் ஓரிடத்தில் இல்லை என்பது மட்டும் வெட்ட ஓங்கிய கொலைவாளென விரைத்திருக்கும் பளப...

சரிவு

'அவன எதுக்கு உள்ளாற இழுத்து உடணும்' என்று சொன்னபடியே அம்மா என் கையைப் பற்றினாள். வாஞ்சை கூடிய பிடி. நான் அப்படியே நின்றுவிட நினைத்தேன்.  ஆனால் கண்ணாடியில் முகம் பார்த்தபடி சட்டை போட்டுக் கொண்டிருந்த அப்பா 'விடுடி அவன' என்றார். அம்மா பிடியை விடாமல் கண்ணாடிக்குள்ளிருந்த அப்பாவின் முகத்தைப் பார்த்தாள். கோபம் ஏறிய அப்பாவின் முகம் அம்மாவைப் பார்த்தது. அம்மா கையை விட்டுவிட்டாள்.‌ எனக்கு ஏமாற்றமாக இருந்தது. முன்பு போல‌ இல்லாமல் அப்பாவுடன் வெளியே செல்லும் விருப்பம் எனக்கு குறைந்து கொண்டே வந்தது. எதிர்விகிதத்தில் அவருக்கு என்னை உடனழைத்துக் கொண்டு செல்லும் விருப்பம் கூடிக்கூடி வந்தது. 'எவனோ ரெண்டாம் பங்காளி மூணாம் பங்காளி கல்யாணம் எழவுக்கெல்லாம் கூட்டிட்டு போனிய...இப்ப கோர்ட் ஸ்டேஷன்னு கூட்டிப்போய் அவனக் கெடுக்கணுமாக்கும்' என்று வாதம் புரியும் தொனியில் துணிகளை மடித்து வைத்துக் கொண்டே அம்மா கேட்டாள். அவளால் சீராக மடிக்கப்பட்டிருந்த மயில்கழுத்து நிறப் புடவையை பிரித்து அதன் மென்மையில் கையோட்டிக் கொண்டிருந்தேன். 'ஆம்பளன்னா ஊர்ல என்ன நடக்குதுன்னெல்லாம் தெரியணும்டி... சும்ம...

வெஸ்டிபியூல் - கதை

  டபுள் பஸ்ஸின் நடுவில் நானும் பார்த்திபனும் போய் நின்று கொண்டோம். பேருந்தின் இரண்டு பகுதிகளையும் இணைக்கும் கருப்புநிற ரப்பர் அசைவது எனக்குப் பிடித்திருந்தது. பார்த்திபனைப் பார்த்து சிரித்தேன். பேருந்தின் இணைப்பை சைகையால் சுட்டி  'வெஸ்டிபியூல்' என்றான். 'என்னது?' பார்த்திபனுடைய ஆங்கில உச்சரிப்பு அவ்வளவு சுத்தமானது என்பதாலேயே பெரும்பாலும் அவன் பயன்படுத்தும் வார்த்தைகளை திரும்ப கேட்டுக் கொள்வேன். எனக்காக நிறுத்தி மறுபடியும் 'வெஸ்டிபியூல்' என்றான். நான் கேட்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிந்து கொண்டவனாக 'இது பழைய வேர்ட் டா. மாளிகையின் உள்பகுதிக்கும் நுழைவுக்கும் இடைப்பட்ட இடம்.'  இரண்டாம் பகுதியை ஆங்கிலத்தில் சொன்னான். இரண்டு அறைகளும் விசாலமான கூடமும் கொண்ட வீடுகளையே மாளிகை என்று அன்று நினைத்துக் கொண்டிருந்த - இன்று அப்படி நினைக்க முடியவில்லை. ஏனெனில் இருபது வருடங்களுக்கு வங்கிக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து நானே அப்படி ஒரு 'மாளிகை'யை கட்டிவிட்டேன் - எனக்கு அவன் சொல்வதை புரிந்து கொள்ள முடியவில்லை.  மேலும் விளக்கினான். ஆனால் அந்த விளக்கம் சற்...

சுகஜீவனம் - குறுங்கதை

Image
இன்னும் நாற்பத்தைந்து வயதுகூட ஆகவில்லை தான் அடிபட்டிருப்பதோ காலில்தான் பொதுப்படுக்கை இல்லாத புண்ணியத்தால் மருத்துவமனையில் உள்ளே தாழ்ப்பாள் போட்டுக்கொள்ளும் தனி அறையில்தான் படுக்க வைக்கப்பட்டிருக்கிறார் என்றாலும் இந்த நிலையில் அவர் உடலுறவுக்கு அழைப்பது கமலாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சி மட்டுந்தான். வெறுப்போ அருவருப்போ இல்லை. எப்படி இருக்கும்! பத்து நாட்களாக அடிவயிற்றில் கைபோட்டுத் தடவுகிறவரை தட்டிவிட்டுக் கொண்டுதானே இருந்தாள். காலையில் அந்த முகத்திலிருக்கும் முறைப்பு சிறு குழந்தையை ஞாபகப்படுத்தும். அந்த சமயத்தில் மனமிளகக்கூடச் செய்வாள். ஆனால் இரவில் அவருக்கு முன்னே பதினான்கு வயது மகனும் பன்னிரண்டு வயது மகளும் பக்கத்து அறையில் தூங்குவது நினைவுக்கு வந்துவிடும். ரோஷினி கூட புரிந்து கொண்டுவிடுவாள். ஆனால் பிரதாப்பை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது. அவன் தன்னையும் அவரையும் அப்படி கற்பனை செய்வதைக்கூட அவளால் கற்பனை செய்ய இயலவில்லை. அவளுக்கு மட்டும் விருப்பமில்லையா என்ன! பிள்ளைகள் விடுமுறைக்கு சொந்தக்காரர்கள் வீடுகளுக்குச் செல்லும்போது ஐந்தாறு முறைகூட கூடியிருக்கிறார்கள். ஆனால் உடலில் அசத...

வினோதம்

தாழப்பறந்த காகம் தன் கையிலிருந்த குச்சி ஐஸை பிடுங்கிச் சென்றதை நம்பவே முடியாமல் நின்றிருந்தான். எப்போதும் ஒன்றுக்கு மூன்றுமுறை எண்ணி சீடை கொடுக்கும் ரோட்டு ஆத்தா அன்று 'வெச்சுக்கய்யா' என்று ஒரு காரச்சீடை அதிகமாகக் கொடுத்தது. எல்லா திங்கட்கிழமையிலும் நீண்ட நேரமாக நிற்க வைத்து பேசியறுக்கும் தலைமையாசிரியர் அன்று ஏனோ சீக்கிரமாக தன் உரையை முடித்துக் கொண்டார். சிரிப்பு களையாமல் பாடமெடுக்கும் மைதிலி டீச்சர் சிடுசிடுப்போடு வந்து போனார். பதினோறு மணிக்கு அடித்த 'இன்ரோல் பெல்' பதினொன்னேகாலை கடந்தும் மீண்டும் அடிக்கப்படாமல் இருந்தது. கணக்குப் பாடமெடுக்கும் சிவசங்கரன் அன்று வகுப்பில் நடனமாடிக் காட்டினார்‌. அமீர்ஜான் சார் அவர் மகளையும் அவன் படிக்கும் நான்காம் வகுப்பில் சேர்க்க அழைத்து வந்திருந்தார். மதிய உணவில் அன்று இரண்டு முட்டைகள் வழங்கப்பட்டன. அதன்பிறகான வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு மேஜிக் நிகழ்ச்சிகள் நடந்தன. டியூப்லைட்டை ஒருத்தர் கடித்துத் தின்றார். குச்சியை ஒருத்தர் பூங்கொத்தாக்கினார். அதிலிருந்து ஒரு புறாவை பறக்க வைத்தார். சீராக வெட்டப்பட்ட தலை ஒன்று மேசையில் அமர்ந்து பேசியத...