மழைக்குப்பின் புறப்படும் ரயில் வண்டி (நெடுங்கதைகள்) - எஸ்.செந்தில்குமார்
எழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் தேனியைச் சேர்ந்தவர். இரண்டாயிரத்துக்குப் பிறகான தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர். நான் வாசிக்கும் அவரது முதல் நூல் இது. திருவாரூரில் பேசும் புதிய சக்தி என்ற மாத இதழின் ஆசிரியராக இருக்கிறார். நானும் திருவாரூர்காரனே எனினும் அவரது ஆக்கங்களை வாசிக்காததால் சென்று சந்திக்கவில்லை. திருவாரூரில் நடைபெறும் சிறிய அளவிலான புத்தக கண்காட்சியில் இந்த நூலினை வாங்கினேன். நெடுங்கதைகள் என்ற வகையிலான வடிவத்தில் நான் வாசிக்கும் முதல் நூல் இதுதான். குறுநாவல்கள் நிறைய வாசித்திருந்தாலும் குறுநாவலுக்கும் நெடுங்கதை என்ற வடிவத்துக்குமான வேறுபாட்டினை இந்த நூலினை வாசித்தபோது நன்றாகவே உணர முடிந்தது. இக்கதைகளை நூலில் இருக்கும் கால வரிசையில் எழுதப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் வடிவ நேர்த்தி ஒவ்வொரு படைப்பிலும் ஏறுவரிசையில் கைகூடி வந்திருக்கிறது. அதேநேரம் ஒவ்வொரு கதைகளும் நிலம் சார்ந்து தேனி போடி பகுதிகளில் நிகழ்ந்தாலும் வேறுவேறு வகையான வாழ்க்கைகளை உணர்வுகளை கையாள்வது இந்த நூலின் முக்கியமான பலம். முதல் கதையான நெடுஞ்சாலை ஆகாயத்தின் நிறம் சாலையோரம் உணவகம் நடத்தும் ஒரு பெண்ண...