பதினோரு அறைகள் - சிறுகதை

சதீஷின் வீட்டுக்கு எதிரே இருந்த சேற்றுத்தடம் காலையில் இருந்தது போல இல்லை. அவனுடைய அப்பாவின் கார் ஷெட்டினுள் எனக்கு முகத்தைக் காட்டியபடி நின்று கொண்டிருந்தது. அந்தப் பழைய அம்பாசிடரின் முகம் ஒரு சாத்தானின் சிரிப்பு போல இருக்கும். அது என் மீது அளவுக்கதிகமாக வன்மம் கொண்டிருப்பதாக ஒருமுறை சதீஷிடம் சொன்னேன். மிகத்தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தவன் பேனாவின் நுனி காகிதத்தில் நிலைக்க என்னைப் பார்த்து புன்னகை செய்தான். ஒருவேளை அதுதான் அவனது முதல் புன்னகை. மறுநாள் "வீட்டுக்கு வா" என செய்தி அனுப்பியிருந்தான். மறுநாள் சென்ற போது அந்த கார் எனக்கு முதுகினைக் காட்டி நின்றிருந்தது.

"கொழந்த ஒளிஞ்சு நிக்கிறமாரி" என்றேன். அதற்கும் அவன் சிரித்தான். சதீஷ் வீட்டில் இருந்தால் அந்தக்கார் முதுகுகாட்டித் தான் நின்றிருக்கும். அன்று அவன் வீட்டில் தான் இருந்தான். அவன் அப்பாவும் இருந்தார். இனி கார் என்னை நோக்கி இப்படி சிரித்துக் கொண்டு மட்டும் தான் நிற்கும் என்ற எண்ணம் எனக்கு நிறைவளித்தது. வீட்டினுள் செல்ல மனம் தயங்கியது.

"வாடா ஏன் அங்கயே நிக்கிற" என்று சதீஷ் மாடியிலிருந்த ஜன்னல் வழியாக அழைத்தபோது நெஞ்சு திடுக்கிட்டது. அந்த கோணத்தில் என் முகம் எத்தனை சதவீதம் அவனுக்குத் தெரிந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். நான் வந்தது அந்த காரைப் பார்த்தது அதன்பிறகு என் முகம் வாடியது என அனைத்தையும் அவன் கவனித்திருப்பான் என ஒரு பக்கமும் அதற்கு சாத்தியங்களே இல்லை என மறுபக்கமும் சொல்லியது. கண்காணிக்கப்படுவது ஏன் என்னை இப்படி பதற வைக்கிறது என்று யோசித்தபடியே உள்ளே சென்றேன். யாருக்குத்தான் பதற்றம் எழாது என்ற எண்ணம் எளிமையடையச் செய்தது. ஒரு மூலை அது ஏன் நமக்கு நிகழ்வது எல்லோருக்கும் நிகழ்ந்தால் மனம் எளிமையடைந்து விடுகிறது என கேட்டுக் கொண்டிருந்தது.  என்னை அவன் அப்படி பார்த்து நின்றது அநாகரிகம் என மனம் முனங்கியது. சிறு நிகழ்வை ஊதிப் பெருக்குகிறேன் என மற்றொரு எண்ணமும் உடன் எழுந்தது. வழக்கம் போல உள் நுழைந்ததும் அவ்வீட்டின் நீல நிறச்சுவர்கள் ஒவ்வாமையை அளித்தன. அதோடு நிரந்தரமாக வீட்டில் தங்கியிருக்கும் ஒரு பகையுணர்வு. சதீஷ்  தவிர அவ்வீட்டிற்கு நான் வருவதை அம்மா உட்பட யாருமே விரும்பியதில்லை. முகத்தை ஒருமுறை கூட ஏறிட்டுப் பார்த்திராத அவன் தங்கை கூட தன் செயல்களின் ஒலியைக் கூட்டுவதன் வழியாக தன் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருப்பாள். ஒருவேளை சதீஷும் என்னை வெறுக்கிறானா என்ற சந்தேகம் குளிர்ந்து ஒடுங்கிய  படிக்கட்டுகளில் ஏறும்போது தோன்றியது. அவன் என்னை வீட்டுக்கு வரச்சொல்வதும் என்னிடம் பேசுவதும் கூட இவ்வீட்டினரிடம் திருப்தியின்மையை சுணக்கத்தை உருவாக்குகிறது என்பதானல் தானா என இன்னொரு கேள்வி எழுந்தது. அதை உறுதிபடுத்தும் சம்பவங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன. அவன் அப்பா இறைச்சிக் கடை மற்றும் காய்கறி மார்க்கெட்டுக்கான இடத்தை ஏலம் எடுத்தபோது ஆறு லட்சரூபாய் செலவு செய்தபின் அவரது நண்பரால் ஏமாற்றப்பட்டதை சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறான். தங்கை தேர்வில் தோற்றது அப்பாவுக்கு சருமப் பிரச்சினைகள் வந்தது என அவ்வீட்டின் அன்றாடம் எப்படி பாதிக்கப்பட்டாலும் அவன் மகிழ்ந்தான். என்னுடைய வருகையும் அவ்வன்றாடத்தை பாதிப்பதால் தான் சதீஷ் இவ்வளவு மகிழ்கிறானா என்ற எண்ணம் அவன் அறைக்கதவை தட்டும் போது எழுந்திருந்தது. மலர்ந்த அவன் முகம் அனைத்தையும் மறக்கடித்தது. எப்போதும் போலவும் அதுதான் முதன்முறை என்பது போல எண்ணச் செய்யும் அவனது இறுக்கமான அணைப்பில் என் எண்ணங்கள் கசங்கின. அக்கசங்கலை விரும்பாதவனாக அவனிடமிருந்து விடுவித்துக்கொண்ட போது என்னை ஏனோ பெண் போல உணர்ந்தேன். நீண்ட கேசத்துடன் என்னை விட உயரம் குறைவானவனாக மெலிந்த தேகமுடைய இவன் முன் முகம் முழுக்க முடி மண்டிய அழுத்தமான தோலுடைய நான் ஏன் இப்படி உணர்கிறேன் என எனக்குப் புரிபடுவதேயில்லை.

அம்மா வரும் காலடிகள் கேட்டன. அவள் உற்சாகத்தை அவள் வரும் ஒலியிலேயே கேட்க முடிந்தது. அவள் உற்சாகம் கொள்வது என்னை சுருங்கச் செய்தது. சதீஷ் மேல் அவளுக்கு இருக்கும் ஈடுபாடும் வாஞ்சையும் அலாதியானது. அவள் சதீஷ் அப்பாவை மணம்புரிந்து கொண்டு என்னையும் அப்பாவையும்  பிரிந்த போது எனக்கு ஆறு வயது. சதீஷ் அப்பா அன்று அப்பா வேலை செய்த குளிர்பானக் கிடங்கின் உரிமையாளர். மதியம் அப்பாவுக்கு உணவு கொண்டு வருபவளைப் பார்த்து ஆசைப்பட்டிருக்கிறார். அப்பாவுக்குத் தெரியாமல் கிடங்கிலேயே அவளுடன் உறவு கொண்டிருக்கிறார். அம்மாவுக்கே அப்போது இருபத்து மூன்று வயதுதான். சதீஷ் அப்பா அம்மாவைவிட மூன்று வயது இளையவர். குற்றவுணர்வு அவரை அழுத்தியிருக்கிறது. முதலில் அப்பாவுக்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுத்திருக்கிறார். வீட்டுக்கு வந்து என்னை மடியில் தூக்கி வைத்திருந்ததெல்லாம் கூட எனக்கு நினைவிருக்கிறது. அவருடலில் எப்போதும் பன்னீரின் நறுமணம் இருக்கும். அணைத்துக் கொள்ளும் போது சதீஷின் உடலிலும் அந்த நறுமணம் தெரிந்தாலும் நாசி அதையொரு எரிமணமாகவே நினைவில் வைத்திருக்கிறது. அவனது பிரியத்தில் வாஞ்சையில் ஏதோ முழுமையாக பொருத்திக் கொள்ள முடியாத ஒரு விலக்கம் இருந்து கொண்டிருந்தது. அவ்விலக்க உணர்வை விழுங்கியே ஒவ்வொரு முறையும்  சதீஷை நெருங்க  வேண்டியிருந்தது. அவன் முகமலர்ச்சியுடன் விடை கொடுத்தபிறகு அவ்விலக்கத்தை அப்பாவை மூர்க்கமாக புண்படுத்துவதன் மூலமாக ரம்யாவை அழைத்து தன்னிரக்கத்தில் திளைத்து சண்டையிட்டு அவளை அழ வைத்து நானும் அழுது அரற்றுவதன் மூலமோ உமிழ வேண்டியிருக்கும். அவ்வுச்சங்களின் முடிவில் படரும் வெறுமையான மனநிலையில் இனி சதீஷை சந்திக்கவே கூடாது என உறுதி கொள்ளவேன். ஆனால் நாட்கள் அன்றாடங்களால் கெட்டிப்படும் போது மீண்டும் அவனிடம் சென்று விடுவேன்.

சதீஷ் அப்பாவை மணம் புரிந்து கொள்ள அம்மா முடிவெடுத்த தினம் ஒரு கோட்டோவியமாக நினைவில் நிற்கிறது. ஐந்தடி மண் சுவருடன் ஆற்றோரம் நின்றிருந்த வீட்டில் ஒரு கூடமும் அதை ஒரு சிறிய சுவரால் தடுத்த சமையலுக்கான இடமும் இருந்தன. நடுவீட்டில் உயரமான மண்ணெண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருக்க அப்பா தட்டில் ரசத்தை சோற்றுடன் பிசைந்து கொண்டிருந்தார். அம்மா சுவரில் சாய்ந்தவளாய் பனையோலை விசிறியை அசைத்துக் கொண்டிருந்தாள். அப்பாவுக்கு தொண்டைக்குழி துடித்தது. அவ்வுணர்வை என்னால் அப்போது புரிந்து கொள்ள முடிந்தது. எனக்குப் பிடிக்காத ஆட்டுக்கறி குழம்பு வைத்து சதீஷின் அப்பா வீட்டுக்கு வரும் போதெல்லாம் அவர் அருகில் அமரவைத்து அம்மா உண்ணக் கொடுப்பாள். எனக்கு ஆட்டுக்கறி அரவே பிடிக்காது என அவள் அறிவாள். காலையில் அப்பா ஆட்டுக்கறி வாங்கி வரும் போதே "மா ம்மா ம்மா இன்னிக்கு வேணாம்மா " என அவள் தோளைச் சுரண்டி அழத்தொடங்கி விடுவேன். அன்றும் அழுதேன். நான் அப்படி அழுவதை பொருட்படுத்தாதவளாக தாழ்ந்த தொனியில் "போய் வெளையாடு. ஒரு மணிக்கு சார் சாப்பிட வருவாரு வந்துரணும்" என்றாள். ஒடுங்கிப் போய் வெளியேறினேன்.

மதியம் சதீஷின் அப்பா வீட்டில் வந்து அமர்ந்திருந்தார். நான் உள்ளே நுழைந்ததும் அப்பா அவருக்கு தடுக்கினை எடுத்துப் போட்டார். அம்மா இலையை விரித்தபின் என்னை பார்த்து சிரித்து "சாரோட உக்காந்து சாப்புடு தம்பி" என்றாள். அவள் முகம் சற்று குழைந்திருக்க வீட்டில் விருந்தினரும் இருந்த தைரியத்தில் "எனக்கு வேண்டாம்மா" என்றேன். சிரித்தபடியே கைப்பிடித்து என்னை அழைத்துக் கொண்டு  சமைக்கும் இடத்துக்கு  வந்து அமரச்செய்தாள். அமர்ந்ததும் மூன்றடி தடுப்புச் சுவருக்கு அந்தப்பக்கம் உட்கார்ந்து உண்டுகொண்டிருக்கும் சதீஷ் அப்பாவை பார்த்தபடி என்னை அறைந்தாள் சத்தமே எழாமல். ஆனால் கடுமையாக வலித்தது.  சிறுவன் என்பதாலும் அமர்ந்திருந்ததாலும் பிறர் பார்க்கும் வாய்ப்பும் இல்லை. அழத்தொடங்கிய என்னை இடக்கையின் நடுவிரலை அவள் வாயில் வைத்து விழிதூக்கி மிரட்டி அடக்கினாள். செருமலாக மூச்சுவிட்டு நான் அடங்கியதும் மற்றொரு கன்னத்தில் அறைந்தாள். மீண்டும் அடங்கியதும் மீண்டும் அறைந்தாள். இப்படி பதினோரு முறை அறைந்தாள். ஒவ்வாத செயலொன்று முதலில் இயற்றப்படும் போது மனம் தன் மொத்த நியாய சக்தியையும் திரட்டி அதை எதிர்க்கிறது. பெருஞ்சோகம் என்றொரு நிலையை அடைந்து பேருருவம் கொள்கிறது. ஒவ்வாததால் விழைந்த துயரை செரித்து கனிவு கொள்கிறது. அதுவே மீண்டும் நிகழ்கையில் மீண்டும் மீண்டும் நிகழ்கையில்....

பதினோரு அறைகளுக்குப் பின் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே சாப்பாட்டின் முன் வந்து அமர்ந்தேன். என் கன்னம் பழுத்திருந்தது அப்பாவுக்கும் சதீஷ் அப்பாவுக்கும் தெரிந்தே இருந்தது. இருவருமே எதுவும் கேட்கவில்லை. அப்போது சோற்றியள்ளி வாயில் அதக்கிய போதிருந்த மனநிலையில் அப்பா அந்த இரவில் இருந்தார். அம்மா விசிறிக்கொண்டபடியே அமர்ந்திருந்தாள்.

சோற்றினை தட்டில் போட்டுவிட்டு அம்மாவை நிமிர்ந்து பார்த்து "இவன என்ன பண்றதுன்னு யோசிச்சியா?" என்றார்.

"நீயே வச்சி வளத்துக்க" என்றபடி அம்மா எழுந்து சென்றாள். அப்போது அம்மா என்னைப் பார்க்கவில்லை. சில நாட்கள் கழித்து சதீஷ் அப்பாவுடன் இருசக்கர வாகனத்தில் ஏறிச்சென்ற போதும் என்னை அவள் பார்க்கவில்லை. நாட்கள் நகர்ந்தபோதுதான் அம்மா கடைசியாக என்னை எப்போது பார்த்தாள் என்ற யோசனை வரத்தொடங்கியது. தொலைத்துவிட்டதன் பிரக்ஞையே இல்லாமல் இருந்து விட்டு அவசியமாய் தேவைப்படும் சமயத்தில் தேவைப்படும் பொருள் தொலைந்து வெகுநாளாகிவிட்டது என்ற எண்ணம் தரும் பயத்தையும் நடுக்கத்தையும் அம்மா என்னைக் கடைசியாக எப்போது பார்த்தாள் எனத்தேடுவதில் அடைந்தேன். ஒரு சிறுநீர் கழிப்பிற்கான குறுகுறுப்பு போல மெல்ல நாசியில் நுழையும் செவ்வெறும்பு போல ஒரு மெல்லிய விரிசல் போல அவ்வெண்ணம் எழத்தொடங்கும். கழுவில் அமர்த்தி வைக்கப்பட்டவன் போல நெளிவேன். அவ்வினா விடையற்றது என்பதாலேயே சுயவதையின் இன்பம் தேவைப்படும் ஒவ்வொரு முறையும் அங்கு சென்று நிற்பேன். ஆனால் அவ்வின்பத்தைக்கூட அடைய முடியாத ஒரு திருப்தியின்மையுடன் மீண்டு வருவேன். சதீஷுடன் ஒருமுறை நானும் அப்பாவும் இருந்த குடிசைக்கு அம்மா வந்திருந்தாள். அப்போது அவனுக்கு ஒரு வயது. அப்போதும் அவள் என்னைப் பார்க்கவில்லை. சதீஷ் என்னருகே வருவதற்காக அவள் இடுப்பில் இருந்து பாய்ந்தான் அப்போது.

சதீஷ் அம்மாவின் காலடியோசை கேட்டதும் ஒரு மெல்லிய ஒளியைப் பெற்று அதை என்னிடம் மறைத்துக் கொண்டு அவள் வருகைக்கென எரிச்சல் கொள்வது போல முகத்தை மாற்றிக் கொண்டான். தீயில் நீட்டப்பட்ட புழுபோல எனக்குள் என்னவோ நெளியத்தொடங்கியது. அவன் என்னிடமிருந்து எதை மறைக்க நினைக்கிறான்? அம்மா என்னை எதிர்பார்க்காத விழிகளுடன் அறையில் நுழைந்தாள். விழிகளில் அவனுக்கான கரிசனம் தேங்கியிருந்தது. என் விழிகளை சந்தித்ததும் அவள் விழிகள் பதறின. அக்கரிசனம் கடுமையான கரிப்புடன் என் மீது இறங்கியது. அதைக் கொட்டிவிட்ட குற்றவுணர்வுடன் அவள் சற்று நேரம் நின்றாள். மீண்டும் சதீஷை பார்த்தபோது அவளது வருகையை ரசித்த அவனது ஆழம் கருகியிருந்தது அவன் புன்னகையில் தெரிந்தது. கோழிக்குஞ்சுகளை சிகரெட்டால் சுடுவது போன்ற ஒரு நிறைவினை உணர்ந்தேன். 

பதினொரு வயதுக்குப் பிறகு சதீஷ் அப்பாதான் என்னைப் படிக்க வைத்தார் என பட்டம் பெற்றபிறகே தெரிந்தது. வழக்கம் போல் குடித்திருந்த ஒரு மாலையில் தலையை தொங்க போட்டபடி அமர்ந்திருத்த அப்பா இதைச் சொன்னார். உடல் எரிய அவரை ஓங்கி மார்பில் உதைத்தேன். வியர்வையில் நனைத்திருந்த பனியனை இழுத்து "உண்மையச் சொல்லு நா உனக்கு தான் பொறந்தனா" என அழுதேன். அவரும் அழுதார். அப்படியே கழுத்தை உடைத்து அந்த மனிதரை கொல்ல நினைத்தேன். கொல்லும் அளவுக்கு வெறி ஏறியிருந்ததால் அவரை அடிக்கத் தோன்றவில்லை.

சதீஷ் அதன்பிறகு தான் அறிமுகமானான். அவனை முதன்முறையாக சந்தித்தபோது அவனுக்கு பதினேழு வயது. நான் ஆயுள்காப்பீட்டு நிறுவனமொன்றில் வேலைக்குச் சேர்ந்திருந்தேன்.

"அண்ணா" என பின்னால் இருந்து அழைத்தவனை முதலில் அடையாளம் தெரியவில்லை. அவன் புன்னகையுடன் சொல்லத்தொடங்கியபோதே அவன் முகம் மண்டையில் ஒரு அடிபோல இறங்க அவனை அறைந்தேன். இன்னும் பத்து முறை அறைய வேண்டும் போல இருந்தது. அவன் மண்ணில் விழுந்தான். வெள்ளைச் சட்டையில் மண் அப்பி இருந்தது. அவன் தடுமாறி எழுந்தபோது பரிதாபமாக இருந்தான். அப்போது தான் அவன் ரொம்பவும் சிறுவன் என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் அவன் ஆளுமை என்னை பாதித்தது. பரிதாபம் தான் ஒருவரை என்றென்றைக்குமாக நினைவில் நிறுத்தி வைக்கிறது. கருணையுடையவர்களாக இருக்க விழைகிறவர்கள் பரிதாபமானவர்களை நினைவில் வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தான் அத்தகையவர்களின் கருணைக்குச் சான்று. சதீஷும் எனக்குத் தேவைப்பட்டான். குடியிருக்கும் வீட்டைவிட்டு தலையை தொங்கப் போட்டுக்கொண்டே சென்று வரும் எனக்காக விலையுணர்ந்த இருசக்கர வாகனத்திலோ காரிலோ வந்து ஒருவன் காத்து நிற்பது என்னை நிமிர்வு கொள்ளச் செய்தது. நான் எப்படியெல்லாம் இருக்க விழைந்தேனோ அதையே உண்மையென நம்பி அவனுடன் பேசினேன். பெண்களுடன் பேசியறியாத நான் எப்படி பெண்களுடன் பேச வேண்டுமென அவனுக்கு அறிவுரைகளை அள்ளி வழங்கினேன். நடத்துநரிடம் சில்லறை கேட்கக்கூட தயங்குகிறவன் அவனுக்கு ஆளுமை உருவாக்கம் பற்றி வகுப்பெடுத்தேன். விடலையில் பசங்களிடம் புத்திசாலித்தனம் அதிகம். அதேநேரம் தன்னை மொத்த சமூகத்துக்கும் எதிராக மாற்று சமூகத்தை கற்பனை செய்கிறவனாக அவர்கள் முன்காட்டிக் கொண்டு அவர்களை எளிதாக ஏமாற்றிவிடலாம் எனக் கண்டுகொண்டேன். கனவும் லட்சியமும் நிறைந்தவனாக சதீஷ் என்னை நம்பினான். அவன் அம்மாவின் மீதும் எனக்காக கோபம் கொண்டிருக்கிறான். உண்மையில் பருவடிவான கஷ்டங்கள் எதையுமே நான் கண்டிருக்காவிட்டாலும் அவனாகவே தாயின்றி நாம் துயருற்றிருப்பதாக நம்பிக் கொண்டான். அம்மாவை காணாத போது எண்ணாமல் இருக்கும் போது நான் அடையும் நிம்மதியை எண்ணி சிரித்துக் கொண்டேன் .

எல்லா விடலைகளையும் போலவே அவனும் உணர்வு மீறியெழும் போது "நீ எங்ககூடவே வந்துருண்ணா. நீ நான் தங்கச்சி அம்மா எல்லாம் ஒன்னா இருக்கலாண்ணா" என்று சொல்வான். அச்சமயத்தில் கூட அவன் தன் அப்பாவையும் என் அப்பாவையும் தவிர்த்து விடுவதை எண்ணி புன்னகை செய்வேன்.

'சதீஷ் நீ வென்ற தகப்பனின் மகன். என் தகப்பன் தோற்றவன். ஒருவகையில் நீ என் அம்மாவின் வெற்றி என் அப்பாவின் தோல்வி. நாம் இணையவே முடியாது. உன் தகப்பன் என் அம்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். அத்தேர்வினை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு நான் அகம் விரிந்தவன் கிடையாது' என்றெல்லாம் அவனிடம் சொல்ல நினைப்பேன். என் உணர்வுகளின் தடம் அவனுக்கு புரியாதிருந்த வரையில் சிக்கல் இல்லை. ஆனால் அவனுக்கு அது புரியத்தொடங்கியபோது அவ்வகை பேச்சுகளை தவிர்க்கத் தொடங்கினான். அதிலும் அம்மாவைப் பற்றிய பேச்சு வருமானால் கல்லென முகமிறுகி அமர்ந்து விடுவான். அக்கல்லை எல்லா திசைகளில் இருந்தும் முட்டிப்பார்த்து தோற்பேன். அவனுடைய இறுகல் தாங்க முடியாததாக மாறியபோது அவனை விலக நினைத்த போது அவன் குடும்பத்தின் வீழ்ச்சிகளின் தகவல்களை என்னிடம் சொல்லத் தொடங்கினான். சம்பந்தமே இல்லாமல் மனதின் ஒரு மூலை கொண்டாட்டத்தில் திளைத்தது. அம்மாவின் நகைகள் அடகுக்கு சென்றபோது இரண்டு மாடிவீடுகள் விற்கப்பட்டபோது அவன் அப்பாவிற்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டபோது என ஒவ்வொரு பொருளாதார வீழ்ச்சியும் எனக்கு மகிழ்வையே அளித்தது. அதிலும் எப்போதும் பளிச்சென்று திரியும் அவன் தங்கையும் மங்கத் தொடங்கினாள். ஒவ்வொரு நாளும் ஒரு தோல்வியின் செய்தியுடன் சதீஷ் என்னிடம் வந்தான். ஒருநாள் அவன் வராவிடில் ஒருநாள் அவன் வீட்டில் நடக்கும் துயரை அவன் சொல்லாவிடில் நான் நிலைகொள்ளாதவனாக மாறிப்போனேன். முடியாமல் படுத்திருக்கும் அப்பாவிடம் அவற்றை சொல்வேன். அவர்கள் கஷ்டங்கள் பெருகியபோது நான் அப்பாவை மேலும் நன்றாக கவனித்துக் கொண்டேன். ஏதோவொன்றை எதிர்கொள்வதற்காக அவர் எனக்குத் தேவைப்பட்டார். அவர்கள் வீட்டில் பணம் குறைந்த போது பணம் குறையும் எல்லா வீட்டிலும் நடைபெறுவது போல கண்காணிப்பும் கட்டுப்பாடும் பெருகியது. சதீஷின் அப்பாவிற்கு அவன் என்னுடன் பேசுவது எரிச்சல் முட்டியது. அம்மாவும் வழக்கம் போல என்னை வெறுத்தாள். ஒடுங்கிய இந்த ஒருமாடி வீட்டுக்கு அவர்கள் குடியேறி ஒரு பழைய அம்பாசிடருடன் அமைந்தபோது நானும் ஏறக்குறைய அந்த அளவிற்கு ஒரு வீடு கட்டியிருந்தேன். முதலில் அம்மாவை அந்த வீட்டுக்கு அழைத்துச் செல்லும் உந்துதல் எழுந்தது. அவளது ஏளனம் செய்யும் முகபாவங்களை அஞ்சி அவ்வெண்ணத்தை கைவிட்டேன். அவர்கள் நிலை இன்னும் சருக்கட்டும் எனக் காத்திருந்தேன்.

என் பகற்கனவுகளில் பசிக்காக சதீஷின் தங்கை சாலையோரங்களில் விபாச்சாரம் செய்வதெற்கென கை நீட்டுவதையும் அம்மா பிச்சையெடுப்பதையும் சதீஷின் அப்பா என்னிடம் வந்து பணம் கேட்டு இரந்து நிற்பதையும் சதீஷ் துளியும் தன்னம்பிக்கை இல்லாமல் என் முன் குறுகி நிற்பதையும் நான் கற்பனை செய்து கொண்டிருப்பதை என் விழிகளில் இருந்து அம்மாவின் விழிகள் எப்படியோ கண்டறிந்துவிட்டிருந்தன. அவ்வெண்ணத்தை உணர்ந்த வன்மம் அவள் விழிகளில் குடியேறுவதையும் அவ்வன்மம் முழுதும் செரிக்கப்பட்டு ஒரு ஆழ்ந்த அமைதியை அவள் அடைவதையும் கண்டு நான் துணுக்குற்றேன்.

அந்த அமைதி கனிவென மாறி அவ்விழிகள் சதீஷை நோக்கின. அதுவரையிலான உள்ளுடல் இயக்கங்கள் எதிர்திசையில் திரும்பி நடைபெறுவதைப் போன்றதொரு கடுமையான தளர்ச்சி என்னை ஆட்கொண்டது. அதை அவள் அறியக்கூடாது என நான் எத்தனிக்க அந்த எத்தனமே சமிக்ஞையாக அம்மாவின் முகத்தில் ஒரு ஏளனம் கடந்து சென்றது. கணத்தில் அம்முகத்தை மாற்றிக் கொண்டு சதீஷை ஒரு சிறுவனாக பாவனை செய்தபடி "கொஞ்சமாவது க்ளீனிலினெஸ் பத்தி கான்சியஸ் இருக்காடா உனக்கு இடியட்" என அவன் தலையில் செல்லமாக கொட்டியடியே அறையைப் பார்த்தாள். எழுந்தமரும் அளவிற்கு வளர்ந்த குழந்தை சிறுநீர் கழித்துவிட்டு அதையே தப்தப்பென அடித்துக்கொண்டு சிரிப்பதை காணும் போது ஒரு அன்னையின் முகத்தில் தோன்றும் பரிவு கொண்ட பார்வை அது. நான் அக்கக்காக கழன்று விழுந்து விடுவேனோ எனப் பயந்தேன். குறும்பும் திருப்தியின்மையும் மின்னும் விழிகளுடன் அவனைப் பார்த்தபடியே அவிழ்ந்து கிடந்த கூந்தலை எடுத்து முடிச்சிட்டுக் கொண்டாள்.  அறுபது வகையான சிகெரட்டுகளும் எண்பது வகையான மதுவகைகளும் அருந்தும் ஆறுமாதத்திற்கு ஒருத்தியென மிகத்தீவிரமான காதலில் ஈடுபடுபவனுமான சதீஷ் அவன் அம்மாவின் முன் குழந்தையாக நின்றது என்னை எரியச் செய்த கொண்டிருந்தபோது அறைமூலையில் கிடந்த துடைப்பத்தை அம்மா எடுத்தாள்.

"ம்மா ம்மா அதெல்லாம் நீயேன் எடுக்கிற. நான் ரூம க்ளீன் பண்றேன்" என அவளை துரத்தினான் சதீஷ். அவனளவுக்கே உயரமிருந்த அவள் அத்துடைப்பத்தை தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு அவனால் பற்றமுடியாதபடி விளையாட்டுக் காட்டினாள். அவனும் ஒரு குழந்தையின் சிணுங்கலுடன் அத்துடைப்பத்தை பிடிக்க எத்தனித்துக் கொண்டிருந்தான். நான் நிதானமாக சதீஷை நெருங்கி என் பக்கம் திருப்பி ஓங்கி வலக்கன்னத்தில் அறைந்தேன். அவன் அதிர்ந்து நிற்க இடக்கன்னத்தில் அறைந்தேன். எட்டாவது அறையில் சுருண்டு விழுந்தவனை தூக்கி அமர்த்தி மேலும் மூன்று முறை அறைந்தேன். என் முதுகில் நான் காண விழைந்த என் அம்மாவின் பார்வை இருக்கிறதென்பதில் எனக்கு சந்தேகமே இருக்கவில்லை. வெளியே நின்றிருந்த அக்காருடன் இணைந்து நானும் சிரித்துக் கொண்டிருந்தேன்.

Comments

  1. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024