ஒளிர்நிழல் எதிர்வினைகள் மற்றும் விமர்சனங்கள் 2

மணிமாறன்

அன்பு பிரதீப்

 
ஒளிர்நிழல் வாசித்தேன்.  . 

 
நாவலின் வடிவத்தை கட்டமைத்திருக்கக்கூடியத் திறன் திகைக்கவைக்கிறது. 

 
உங்களது அனுபவ அவதானிப்பிற்குட்பட்ட ஒரு வாழ்க்கைச் சித்திரத்தை உங்கள் வயதளவிற்கான அத்தியாயங்களாகப் பிரித்து தேர்ந்த கவனத்தோடு  முன் பின்னாக கலைத்தடுக்கி ஒரிலக்கிய வாசகனுக்கே சாத்தியப்பாடுள்ள ஒரு நுண்சரடால் அதுவும் சற்றும் தொய்வில்லாத மொழி நடையில் கோர்த்திணைத்து முன்வைத்திருப்பது அபாரம்.   

அந்த வாசிப்பனுவத்தை எந்த அளவு வார்த்தைப்படுத்த முடியுமென தெரியவில்லை. ஏனெனில் பெரும்பாலான மகத்துவம் வாய்ந்த நாவல்கள் போல ஒளிர்நிழலும் எனதனுபவத் தளத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தது.  சென்று வாழும் தருணம் என ஏதும் இடம்பெறவில்லை  எனினும் நான் தொட்டுணர்ந்த கணங்கள் ஏராளம்.  அதில் பெரும்பாலானவைகள் விரிவாக பேசப்பட்டுவிட்டன.  குறிப்பாக நமது சுநீலின் விமர்சனம்.  மிகக் கச்சிதம்.

 
என் வரையில் சந்திரசேகர் எனும் கதாபாத்திரம் சொற்பமான சொற்களிலேயே முழுமையான குணசித்திரம் கொண்டுள்ளதாக நினைக்கிறன்.  வாசித்துக்கொண்டிருக்கும் போதே நான் அவாதனித்தது... பால்யம் முதல் தனது அப்பாவை அருவருப்புடன் மட்டுமே பார்க்க முடிந்த சந்திரசேகர் அவரை கண்டுணருமிடம் என ஏதுமில்லை. தனது மகனுக்கு சுந்தரம் என பெயர் சூட்டியிருப்பதைத் தவிர்த்து.

    
இந்நாவலின் கதாபாத்திரங்கள் முழுமையான குணச்சித்திரங்களாக வளர்த்தெடுக்கப்படுவதற்கான போதிய சாத்தியங்கள் உள்ளதாகவே நினைக்கிறேன்.  அடுத்ததடுத்த வாசிப்பில் கைகூடலாம்.  

 
எனதன்பும் வாழ்த்துகளும் என்றென்றும்.

 
மிக்க அன்புடன்

மணிமாறன்.

ஜெ.சாந்தமூர்த்தி

ஒளிர் நிழல் -ஒரு வாசிப்பு !
               ⇏⇏⇏⇏⇏⇏⇏⇏⇏⇏⇏⇏⇏⇏⇏

ஒளிர் நிழல் ஒரு வித்தியாசமான நாவல் என்பதற்கு சில காரணங்கள் உண்டு.

அதே போல் அது நல்ல நாவல் என்பதற்கும்,மோசமான நாவல் என்பதற்கும் கூட சில காரணங்கள் உண்டு.பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாவல் படித்தேன்.பெயர் நினைவில்லை.பதிப்பகத்தில் தூக்கக் கலக்கத்தில் எதோ  தவறு நடந்திருக்குமோ என்றுதான்
முதலில் நினைத்தேன்.நான்கைந்து அத்தியாயங்கள் கொத்தாக கலைந்து கிடந்தன.இல்லை.அது தெரிந்து செய்தது.எதோ டெக்னிக் .ஜெயமோகனின் விஷ்ணுபுரம்  நாவலின்   மூன்று பாகங்களும் கூட வயதுக் கணக்கின்படி வரிசையாக இருக்காது.
          
ஒளிர் நிழல்  அத்தியாயங்கள் 1,2,3 என்று முருகன் வரிசைப் படுத்த சொல்வாரே அப்படி வரிசையாகத்தான் இருக்கும்.ஆனால் கதை கால வரிசைப் படி இருக்காது.அது இஷ்டத்துக்கு முன் பின்னாக இருக்கும்.இது கதைக்குள் கதை.எனவே,கதையின் எண் ,ஒளிர் நிழல் கதையின் எண் என்று இரு அத்தியாய எண்கள் இருக்கும்.ஒரு அத்தியாயத்தில் பிரசவம் நடக்கும்.அடுத்ததில்
குழந்தை உருவாகும்.அடுத்ததில் காதலிக்க தீர்மானிப்பார்கள்.அடுத்ததில் குழந்தையின் அம்மா பிறப்பாள்.
           
எடுத்தவுடன் ஒரு நாவல் எழுதும் துணிச்சல் பல எழுத்தாளர்களுக்கு வராது .அதுவும் சுரேஷ் பிரதீப் இருபத்தைந்து வயது இளைஞர்.நான் வாழும் மண்ணைப் பற்றி,வாழ்க்கையைப் பற்றி,
எங்கள் மொழியில்,எழுதும் போது நாவல் இன்னும் நெருங்கி ஈர்க்கிறது.
           
நாவல் புரிந்து கொள்வதில் கொஞ்சம் சிரமம் கொடுத்தாலும் ,அதுவே நாவலுக்கு ஒரு வசீகரத்தையும் ,புதிர்த் தன்மையையும் ,வாசகனுக்கு ஒரு சவாலையும் கொடுத்து விடுகிறது.
மண் வாசனையை நுட்பமாக  சுரேஷ் பதிவு செய்திருக்கிறார். உரையாடல்களும்,தஞ்சைப்
பகுதிக்கே உரிய சில பிரத்யேக சொற் பிரயோகங்களும் கிண்டல்களும் இயல்பாக கையாளப்   பட்டுள்ளன.இப்படிப் படித்து ரொம்ப நாளானது போல் இருக்கிறது.ஒரு ஏக்கமும் வருகிறது.
             
சில பாத்திரங்களும் சில நுண்ணிய  விவரிப்புகளும் சில அலசல்களும் பிரமிப்பை தருகின்றன."நீ உம்னு ஒரு வார்த்தை சொன்னா( ரோடு காண்டிராக்டர் கண்ணன் ) தங்கத்திலேயே எளச்சிருவான் உன்னை" என்று சுந்தரம் சொல்லும் போது மனைவி சிவகாமி
அழுகிறாள்.செத்தாலும் உங்களை விட்டு போக மாட்டேன் என்று அவள் சொல்வாள் என்று எதிர் பார்க்கிறான்.சொல்ல வேண்டும் என்று விரும்புகிறான்.அவள் சொல்லவே இல்லை.அழுகிறாள்.
அவ்வளவுதான்.சந்திரசேகரின் வேதனையும் அதிகம் விவரிக்காமலேயே நம்முள் கடத்தப் படுகிறது.சக்தி, அருணாவை மேலாதிக்கத்துக்குள் கொண்டு வரும்  இடம் சுரேஷின் இன்னொரு
பக்கத்தைக் காட்டியது.
        
சரி,குறைகளுக்கு வருவோம்.கதையை முன் பின் மாற்றியது எதற்கு? அதன் மூலம் கை  கூடியது, சாதித்தது என்ன? நிறைய பாத்திரங்கள்.பலவற்றுக்கு நியாயம் செய்யப் படவில்லை என்றே தோன்றுகிறது.சில பாத்திரங்கள் வெறும் பெயர்களாகவே எஞ்சுகின்றன.
பலவற்றுக்கு ஆழமில்லை.கூட்டத்தை குறைத்திருக்கலாம்.அல்லது நாவலை பெரிதாக்கி இருக்கலாம்.எடுத்துக் கொண்ட கால அளவும் பெரிதானது.பிரச்சினைகளும் பெரியவை.தலை முறை இடைவெளி, தலித் எழுச்சி,சமூக மாற்றங்கள் இவை கோருவது பெரிய கேன்வாஸ்.
           
பாத்திரங்களுக்குள் சிலர் ஒரே ஜாடையில் இருக்கிறார்கள்.பெரிய வித்தியாசங்கள் இல்லை.
வெறுப்புணர்வு பொது குணமாகவே தெரிகிறது. சுரேஷும்,தூயனும் கெட்ட வார்த்தைகளை சாதாரணமாகப் பயன்படுத்துகிறார்கள். புணர்தல் என்ற சொல்லும் அடிக்கடி வருகிறது.ஆங்கிலேய நாவல்களில் அது விகல்பமாகத் தெரியவில்லை.தமிழில் தெரிகிறது.
எதார்த்த வாழ்க்கையில் உள்ளதில் ஒரு சதவீதம் கூட  இவர்கள் எழுதவில்லைதான்.ஆனாலும் அது தேவையா? தேவை எனில் பயன்படுத்தட்டும். கொள்ளப் புறம் என்று வருகிறது.தவறுதலாக இருக்கும் என்று நினைத்தேன்.அடிக்கடி வருகிறது.கொல்லைப்  புறம் என்பதை அந்த பகுதியில்
அப்படித்தான் சொல்வார்களோ?.ஒரு மாவட்டத்திலேயே எத்தனை சொற் பேதங்கள்!
              
எவ்வளவு குறைகள் இருந்தாலும் அவற்றை மீறி ஒரு சிறந்த நாவல் படித்த மகிழ்ச்சியை நிறைவை ஒளிர்நிழல் உருவாக்கி விடுகிறது.இனி சுரேஷ் பிரதீப் எழுதவிருக்கும் சிறந்த நாவல்களைப் பற்றிய நம்பிக்கையை,எதிர்பார்ப்பை உருவாக்குவதில் நாவல் வெற்றி பெற்று விட்டது.விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவில் அவருக்கு கிடைத்த கௌரவமும்,அங்கீகாரமும்,
வாசகசாலை வழங்கும் விருதும் சான்று.
             
முதல் நாவல் என்ற அளவில் ஒளிர்நிழலின் வெற்றி மகத்தானது.ஜெயமோகன் சொன்னது போல் அது ஒரு பெரிய கலைஞனை அறிமுகப்படுத்தியிருக்கிறது.ஜெயமோகன் ஒரு சொல்லைக்  கூட எண்ணி கறாராக பயன்படுத்துபவர்.அவர் சொல் வாழும்.அதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருப்பது சுரேஷ் பிரதீப்பின்கடமை.

ஜெ.சாந்தமூர்த்தி ,
மன்னார்குடி

அரிபாபு பாலு

சுரேஷ் பிரதீப் பின் "ஒளிர் நிழல் " புதிய வெளிச்சம்
             
தமிழின் நாவல் போக்கைத் தீர்மானிக்கும் புதிய முயற்சிகளைப் புதிய படைப்பாளிகளே சாத்தியப் படுத்துகின்றனர். இது திரைப்படத்திற்கும் பொருந்தும். சமீபத்திய சினிமாக்கள் புதிய கதையுடனும் / கதை கூறலுடனும் வெளிப்படுவதைப் பார்க்கிறோம். மிகப் பிரபலமான இயக்குர்கள் எல்லாம் இந்த வரிசைக்குள் வந்து சேரவில்லை. ஆக, புதியவர்களாலே புதியது சாத்தியம். காரணம், இவர்களே புதிய களங்களைக்  கண்டடைகிறார்கள். மிகத் தைரியமாகவும் தெளிவாகவும் பரிசோதனை முயற்சியை மேற்கொள்கிறார்கள்.

அவ்வகையில்,சமீபத்திய நாவல் வருகையை  ஓரளவு அனுமானித்தவன் என்ற முறையில், இந்த ஆண்டின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக சுரேஷ் பிரதீப் பின் 'ஒளிர் நிழல்' நாவலைக் குறிப்பிடலாம் ...எனது ஆசிரியர் இந்த நாவலைக் கொடுத்து, நல்ல படைப்பு  முயற்சி வாசித்துப் பாருங்கள் என்ற போது,   தயக்கத்தோடே வாசிக்கத் தொடங்கினேன்.
 
ஒரு குடும்பத்தின் கதையாக இருக்கக் கூடும் என்ற எளிய தோற்றத்தை முதலில் வழங்கினாலும் பின் வாசக மனம் அதிலேயே  ஈடுபட இடங்கொடாமல் வட்டாரத்தின் கதையை, ஒடுக்க பட்ட  மக்களின் சித்திரத்தை என மாறி மாறி எடுத்துக் கூறி மனித மனங்களின் இருப்பை, அடி இருளை  உள்ள படியே காட்டி வாசகனை பதட்டமடையச் செய்கிறது.  உள் முடிச்சுகளால் பின்னப்படுவது ஒரு உத்தியாகவே இந்நாவலில் சாத்தியமாகியுள்ளது. இதே போன்றொரு கதை கூறல் ஷோபா சக்தியின் Box கதைப் புத்தகத்தில் உண்டு. (இது எனது கருத்து). கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.
          
25 வயதாகும் சுரேஷ்க்கு  முதல் படைப்பு என்ற சலுகையை வழங்கத் தேவையில்லை. காரணம் படைப்பு நேர்த்தியில் மொழி வெளிப்பாட்டில் தனித்து நிற்கிறது. சில இடங்களில் கவிதைத் தனம் கூடிய செரிவு.
         
முன்னணிப் படைப்பாளிகள்  சுரேஷ் பிரதீப்பை அடையாளங் கண்டு வரவேற்றுள்ளனர். அவ்வகையில்,  வாசக சாலை பதிப்ப நண்பர்களும்  இளம் படைப்பாளிக்கான விருதை வழங்கி வழங்கிக் கெளரவப் படுத்துகின்றனர்.

வாழ்த்துக்கள் சுரேஷ்

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024