கன்னி மேரி
சக இலக்கிய வாசகரும் எனது தோழியுமான திருமதி. மேரி எர்னஸ்ட் கிறிஸ்டி அவர்களின் முதல் சிறுகதை இது. மேரியின் நினைவெழுகிறது. வேளாங்கண்ணி கான்வெண்ட்டில் ஒரு குயர் கோடுபோட்ட நோட்டில் கதையெழுதிக் கொண்டிருப்பாள். மாநிறம். சிறிய வட்ட முகம். ஒல்லியான தேகம். முழு பாவாடை சட்டை போட்டிருப்பாள். பதினைந்து வருடங்கள் ஆகின்றன. இந்நேரம் அந்த நாவலைப் பிரசுரித்திருப்பாளா தெரியாது. ஒரு இரண்டு பக்கங்கள் கூட வாசித்திருக்க மாட்டேன். கான்வெண்ட் அம்மாங்க கூப்பிட்டுவிட்டார்கள். மூன்று அம்மாங்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் மெழுகுவர்த்தி அம்மா. ஒருவர் நிர்வாக அம்மா. ஒருவர் பூஜை அம்மா. நிர்வாக அம்மா சமையல் நிர்வாகத்தையும் கவனித்துக் கொள்வார். சமையல் செய்யும் துருதுரு அரைக்கால் பாவாடை சட்டை போட்ட சிறிய பெண் ரோசி ஏழாவதுதான் படித்திருப்பதாக சொன்னாள் அவளுடன் சேர்த்து நாங்கள் ஐந்து பேர் தங்கியிருந்தோம். தினமும் ஃபாதர் காலை 0630க்கு வந்து திருப்பலி நிறைவேற்றுவார். பலிபீடத்தை நாங்கள் பூஜையம்மாவுடன் சேர்ந்து அலங்கரித்து திருப்பலிக்குத் தயார் செய்வோம்...