அந்நியமாதலும் ஆனந்தமாதலும்

      
அந்நியமாதலும் ஆனந்தமாதலும்
வெகுநேரம்  குனிந்த  படியே  மண்வெட்டியால் தரையை  வறண்டிக் கொண்டிருந்து விட்டு நிமிர்ந்த  போது இடுப்புக்கும்  மார்புக்கும்  இடையே  ஒரு கூச்சம் தோன்றியது. பல நாட்களாக  ஒரு வேலையும்  செய்யாமல்  இருந்ததன்  பலன். இருந்தும்  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக  தொடர்ந்து  மண்ணைக்  கிண்டினேன். உடல் முழுக்க வியர்வை  வழிவதை  பார்த்த  போது  திருப்தியாக  இருந்தது. மார்பிலிருந்து வயிற்றின்  வழியாக  கைலிக்குள் போன வியர்வைத்  துளிகள்  கூச்சத்தை ஏற்படுத்தின. ஒரு தோட்ட  வேலை செய்பவர்   நான்  கொடுத்த  ஒரு மணி நேர உழைப்பை  கிண்டல்  செய்து  விட்டு  கடந்து சென்று விடலாம். ஆனால்  எனக்கு அது மகிழ்ச்சியைக்  கொடுத்தது. ஏன் என யோசித்த போது நினைவெழுந்த வார்த்தை “அந்நியமாதல்”. அப்படி  என்றால்? ஒரு பொருளை உற்பத்தி  செய்வதற்கு  ஒரு உற்பத்தியாளன் நேரடியாக  எவ்வளவு  உழைக்கிறானோ அந்தளவிற்கு  அவனுடைய மகிழ்ச்சி பெருகும். ஒரு சிறந்த  தேநீர்  விடுதியில்  தேநீர்  குடிப்பதற்கும்  தன் கையால்  கலந்த ஒரு தேநீரைக் குடிப்பதற்கும்  உள்ள வேறுபாடு. இது என் சுய சிந்தனை  எல்லாம்  கிடையாது. ஏற்கனவே  மார்க்ஸியம் அலசி சலித்த  ஒன்று தான். “அந்நியமாதல்” என்பதை  நான் புரிந்து  கொண்டவாறு விளக்க  முயல்கிறேன். 

அந்நியமாதல்  என்ற கோட்பாடு வலுவடைந்ததற்கு முக்கிய  காரணம்  கடந்த மூன்று நூற்றாண்டுகளுக்குள்ளாக நடைபெற்றிருக்கும் எந்திரங்களின் வளர்ச்சி. உற்பத்திப் பொருள்  உற்பத்தி  செய்பவனிடமிருந்து விலகிச்  சென்று  கொண்டே  இருக்கிறது. உற்பத்தியின்  மீதான  உழைப்பாளியின் கட்டுப்பாடு இன்றைய  நிலையில் கிட்டதட்ட  இல்லை.

ஓ! உலக மக்களே! எந்திரங்களை  விடுத்து இயற்கைக்குத் திரும்புங்கள்  என்று நான் கோரிக்கை  வைக்கப்  போவதில்லை. எந்திரங்களால் நாம் நிறையவே அடைந்திருக்கிறோம். அதிகமான  உற்பத்தியை  குறைந்த  மனித பலம்  கொண்டே செய்ய முடிவதால்  உலகம்  முழுக்கவே பண்ணை  அடிமைகள்  விடுவிக்கப்பட்டு ஒரு மனிதன்  இன்னொருவனை விலைக்கு  வாங்குவது  ஆகப் பெரிய அநாகரிங்களில்  ஒன்றாக  இன்று பார்க்கப்படுவதற்கு எந்திரங்கள்  மிக முக்கிய காரணம். எனவே  உழைப்பிலிருந்து  அந்நியப்படுவது  தவிர்க்க  முடியாததாகிறது. சரி அப்படி  என்றால்  இந்த “அந்நியப்படுதலால்” நாம்  இழந்தது  என்ன? நம்மை சுற்றி கவனித்தாலே பதிலை அடைந்து  விட முடியும். நிறைய  நேரம்  நமக்கு  மிஞ்சியது. கேளிக்கைகள்  பெருகின. உடல் உழைக்கும்  போது நம்முள்  இருக்கும் ஏதோவொன்று  பெரும்  நிறைவினை  உணரும். உற்பத்திப் பொருள்  குறித்த  நிறைவு என்று கூட அதைச்  சொல்ல முடியாது. உழைப்பும்  ஒரு செயல்பாடு நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது  என்ற நம்பிக்கையும்  கொடுக்கும்  நிம்மதி  அது. செயலின்  மீதான  நம் கட்டுப்பாடு  எந்தளவிற்கு  குறைகிறதோ அந்தளவிற்கு  நாம் நிம்மதி  இழக்கிறோம். உதாரணமாக நான் வேலை பார்க்கும்  அஞ்சல்  துறையில் ஐம்பது  வயதைக்  கடந்தவர்களிடம் ஒரு பொதுவான  பேச்சினைக் காணலாம். கணிப்பொறி வேலையின்  மீதான  அவர்களின்  பிடிப்பையும்  கட்டுப்பாட்டையும் தளர்த்தி விட்டதாகக் குறை சொல்வார்கள். கையையும்  கண்ணையும்  நம்பி செயல்பட்டவர்கள் தாங்கள்  தட்டுவதற்கு அந்தப்  “பெட்டி” கொடுக்கப் போகும்  பதிலுக்காக பீதியுடன்  காத்திருக்கத் தொடங்கிய  போது தங்கள்  வேலையிலிருந்து அவர்கள்  அந்நியப்பட்டார்கள். இது  ஒரு சிறிய  உதாரணம்  மட்டுமே.  தன் பிடி உழைப்பில்  தளர்வதாக எண்ணும்  ஒருவன்  இயல்பாகவே  கேளிக்கை  நோக்கி நகர்கிறான். கேளிக்கைகளும் ஒரு கட்டத்தில்  சலித்து விடும். காரணம் நம்மையறியாமலேயே நம் மனம்  அந்த உழைப்பின்  நிறைவினை  கேளிக்கைகளில் அடைய  முடியாது  என்பதை உணர்ந்து  விடும். தன்னை தொடர்ந்து  கவனிக்கும் ஒருவரால்  ஒரு எல்லைக்கு  மேல் கேளிக்கைகளில்  திளைக்க  முடியாது. சினிமா பந்தயம்  போன்ற தீவிரமற்ற கேளிக்கைகளோ அரசியல்  ஆன்மீகம்  போன்ற தீவிரமான  கேளிக்கைகளோ ஒரு எல்லையில்   சலித்தவிடும். ஏனெனில்  நாம் எவ்வளவு சௌகரியமாக வாழ்ந்தாலும் உற்பத்தியினால் மட்டுமே  நிறைவடையும் நம் தொல்மனம்  அரற்றிக் கொண்டே  இருக்கும். அந்த அரற்றலை எதிர் கொள்வது பயங்கரமானது என்பது  சற்று நேரமாவது  அதனை எதிர் கொண்டவர்களுக்குத் தெரியும். அதற்கு  அஞ்சியே நாம் மேம்போக்கான சமூக  இணையங்களிலும் ரசனையற்ற கேளிக்கைகளிலும் தீவிரமற்ற  புரட்சிகளிலும் தெளிவற்ற உணர்ச்சியைத் தூண்டக்  கூடிய  ஒற்றை வரிச்  சிந்தனைகளிலும் வாழ்க்கையை கடத்திக்  கொண்டிருக்கிறோம்.

சிந்திக்கையில் இந்த சாரமின்மைக்கும் தீவிரமின்மைக்கும் காரணம்  நாம் கட்டுப்படுத்தக்  கூடிய  எதுவுமே  இவ்வுலகில் இல்லை  என்ற அப்பட்டமான உண்மை முகத்திலறையும் . எந்திரங்களின்  வருகைக்கு  முன்பு இயற்கையின் கட்டுப்பாடின்மைக்கு மட்டும்  அஞ்சி  தன் பொறிகளையும் செயல்களையும் தனக்கேற்றவாறு  அமைத்துக்  கொள்ள மனிதனால் முடிந்தது. ஆனால்  எந்திரங்கள் வளர்ந்த பின்னர்  அந்தப்  பிடியும்  தளர்ந்தது. உதாரணமாக  வீட்டிற்குள்  இருக்கும் ஒரு மண்ணெண்ணெய்  விளக்கு  எப்போது  அணையுமென்று  ஓரளவிற்கு  நாம் உறுதி கொள்ள முடியும். இன்வெர்ட்டர்  இல்லாத  ஒரு மின்விளக்கில் அந்த உறுதியைக்  கொடுக்க முடியாது. யோசித்துப்  பாருங்கள்  நடந்தே  கடந்த  நம் “மூத்த” சகோதர்களையும் நோடிபிகேஷன் பேனலில் எந்த விமானம்  எவ்வளவு  நேரம் தாமதம்  எனத்  தெரிந்து  “உச்” கொட்டும்  நம்மையும். அதனால்  எல்லா விமானங்களையும்  தொழிற்சாலைகளையும் உடைத்து  விட்டு  இலை தழைகளை அணிந்து  கொள்ளலாம்  எனச்  சொல்ல வரவில்லை. நாம் எவ்வளவு அந்நியப்பட்டிருக்கிறோம் என்பதை  உணர்த்த  விழைகிறேன். இந்த அந்நியமாதல் பெருகிக்  கொண்டு  தான் இருக்கும். உணவகங்களும்  தேவையை  நிறைவேற்றும் செல்பேசிச் செயலிகளும் அப்பார்ட்மெண்ட்களும் இன்ஸ்டன்ட ஆன்மீக  தீர்வுகளும் முப்பரிமாண  தொலை நேருரையாடல்களும் இன்னும்  பிற கேளிக்கை தொழில்நுட்பங்களும் சில  நாட்கள் கிளர்ச்சியைக்  கொடுத்து  ஒதுங்கி நகருமெனவே தோன்றுகிறது. இவ்வரிசையில் உடல்  இன்பத்தினை  மட்டுமே  நோக்கமாகக் கொண்ட உடலுறவையும் இணைத்துக்  கொள்ளலாம். மிதமிஞ்சிய  பணச் சேர்ப்பும் இந்த  அகச் சோர்வினை  மறைப்பதற்கான நாடகமே. தோட்டத்தில் இடுப்பு வலிக்க நிமிர்ந்த  போது ஒன்றை  எண்ணினேன். நம்முடைய  இயல்பான  பங்களிப்பும் கற்பனையும்  செயல்படாத  ஒரு வாழ்க்கை  எவ்வளவு  சொகுசு நிறைந்ததாக இருந்தாலும்  சலித்து விடும்.

ஒரு குழந்தையிடம்  இருந்து தொடங்கலாம். ஒரு பொருளை  குழந்தையின்  கையில் கொடுக்கும்  போது அது அப்பொருளை உடைக்கவே நினைக்கும். நீங்கள்  ஏற்கனவே உருவாக்கியதை அது விரும்பாது. அதனை உடைத்து  தன்னுடைய  “உற்பத்தி”ப் பொருளை உருவாக்கவே  குழந்தை முனைகிறது. இக்குணம் நம்மை விட்டு நீங்குவதே கிடையாது. இன்னொரு மனிதனின் உற்பத்திக்கான  செயல்பாடான உடலுறவு என்பது அறிவுத் தளத்திலும் உணர்வுத்  தளத்திலும் கவர்ச்சியான முக்கியத்துவம்  பெற்று விடுகிறது. அந்த உற்பத்திச்  செயல்பாட்டில்  அதிக பங்களிப்பு  பெண்ணுடையது  என்பதால்  “தாய்” என்ற அடையாளம் உலகின் அனைத்து நாகரிக  சமூகங்களாலும் மதிக்கப்படுகிறது. எல்லாத்  துறைகளிலும் எல்லை மீறி புதுமை புரிபவர்கள்  தீவிர  அடக்கு முறைக்கு  ஆளாகி தனிமைப்படுத்தப்பட்டு  இன்னல்களுக்கு  ஆளாகி அவர்கள்  வாழ்வின் அடிப்படையே தகர்ந்து  போகும்  நிலை வந்தாலும்  புதிய சிந்தனைகளையும்  செயல்களையும்  கைவிடவே மாட்டார்கள். “புதிய  உற்பத்தி” கொடுக்கும்  கவர்ச்சி  அது . நம்மில்  பலர் கேட்டிருக்கக் கூடிய  ஒரு உபதேசம்  “வீட்டில்  ஒரு பூச்செடியை  நட்டு அதில் பூக்கும் மலரில்  தினமு‌ம்  கண்  விழியுங்கள் உங்கள்  மனம்  மகிழ்வடையும்” என்பதாகும். அதற்கு காரணம்  அந்தப்  பூ மலர்வதில் நம்முடைய உழைப்பு அதிகம்  இருப்பதே காரணம். காந்தி  இறுதிவரை  ராட்டை சுற்றியதற்கும் இதுவே  காரணமாக இருக்குமோ?

இன்றைய சூழலில்  உலகம்  என்பது மூர்க்கமாக  முன்னேறும்  ஒற்றை விலங்கு. மனித  இனத்தை குறிப்பிட்ட கட்டமைக்கப்பட்ட  எந்த அமைப்பும்  ஆளவில்லை. மனிதர்கள்  மேலும் மேலும்  நெருங்கி  மேலும்  மேலு‌ம்  அறிந்து  மேலு‌ம்  மேலும் தங்களை உயர்த்திக்  கொள்ளவே  விழைபவர்கள். நாம் நுகர  நம்மைச்  சுற்றி நிறையவே  உள்ளன. ஆனால்  அந்த நுகர்வு  முடிந்ததும்  நுகர்வு  தொடர்புடையவை எல்லையற்ற  வெறுப்பினைத் தூண்டும். படம் முடிந்த திரையரங்கம் காலியான மதுக்  குப்பி  போன்றவையே அனைத்து  நுகர்வுகளும். புணர்ந்த உடலையும்  இந்த வரிசையில்  இணைத்துக்  கொள்ளலாம்  என்பது கேள்வி ஞானம்  மட்டுமே. ஆகவே பேரின்ப  பெருவாழ்வு  வாழ்வதற்கான  சாத்தியங்களை  நான் சொல்லவில்லை. நம்முடைய  நேரடியான  பங்களிப்பினை  அளிப்பதன்  வழியாக  சில செயல்களில் கட்டுப்பாட்டினையும் நிறைவினையும் கற்பனையையும் மீட்டுக்  கொள்ள  முடியும்.

டொனால்ட் ட்ரம்ப்  வெற்றி பெற்றாலோ ஆப்பிரிக்காவில்  ஜனநாயகம் மலர்ந்தாலோ நம் அண்டை நாடுகளில்  முன்னேற்றம்  விழைந்தாலோ மொத்த  ஐரோப்பாவும் தன்னை ஒரே நாடு  என அறிவித்துக்  கொண்டாலோ தமிழகத்  தேர்தலில் புதுமை ஏதேனும்  நிகழ்ந்தாலோ அது ஏதோவொரு  விதத்தில்  நம்மையும்  பாதிக்கும்  எனச் சொன்னால்  உங்களுக்கு  சிரிப்பு வரலாம். ஆனால்  அது உண்மை. உலகம்  மேலும் மேலும்  நெருங்கிக்  கொண்டும்  சுருங்கிக் கொண்டும்  வருகிறது. அப்படி இருக்கையில்  என் வாழ்வை  நானே  நிர்ணயிகக்கிறேன் என்பது  ஒரு குழந்தைத் தனமான  கற்பனையே.  சிறு வயது முதலே  இதை மட்டும்  செய் இதன் பிறகு மகிழ்ச்சியாய் இருக்கலாம்  என்றே சொல்லி வளர்க்கப்படுவதால் செய்வதில் இருக்கும்  ஆனந்தம்  அங்கீகாரம்  இல்லாமல்  அடங்கி விடுகிறது. அந்நியமாகாத போதே  ஆனந்தம்  ஏற்படும். உயிர் பிழைப்பதற்காக உழைப்பும்  கேளிக்கையும் இருக்கட்டும் . சற்று நேரமாவது  நம் கற்பனையோடும் ரசனையோடும் “வாழலாம்” என நான்  நினைக்கிறேன். நீங்கள்  என்ன நினைக்கிறீர்கள்?

Comments

  1. இனிய நண்பன் சுரேஷுக்கு,

    அந்நியமாதலுக்கு இத்தனை அர்த்தங்களா? எந்திரங்கள் மனித உழைப்பிற்குள் தன் ஆக்கிரமிப்பைச் செலுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அவனையே அவனிடமிருந்து அந்நியமாக்கி வருவதை இப்படிப்பட்ட கோணத்தில் நான் இதுவரை சிந்திக்கவில்லை. உடல்இன்பத்திற்காக மட்டுமே புணரப்பட்ட உடல்களும் அவரவர்களுக்கு அந்நியமே என்பது சற்றும் எதிர்பாராத புதுவிதமான சிந்தனை. "தாய்மை" என்னும் தொன்மையே மனித குலத்தின் மாபெரும் உழைப்பின் , செயல்பாட்டின் உயர்ந்த அங்கீகாரமாக மனித உயிர்கள் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை இருந்துவருகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. பிறர் உழைப்பில் சுகம் காணும் சும்மாயிருப்பவர்கள் நிச்சயம் உழைப்பவர்களுக்கு அந்நியர்களே! உழைப்பில்தான் உண்மையான ஆனந்தம் அடங்கியுள்ளது என்பதைப் புரியவைக்க எடுத்தாளப்பட்டுள்ள உதாரணங்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டன. சிறந்த சிந்தனை! அந்நியமாதலை இழந்து ஆனந்தமயத்தைத் தழுவ மனித இனத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ள நண்பன் சுரேஷின் எழுத்துப்பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    இப்படிக்கு,
    அன்புத்தோழி,
    பி. மேரி எர்னஸ்ட் கிறிஸ்டி.

    ReplyDelete
    Replies
    1. அன்புத் தோழிக்கு
      மிக்க நன்றி. அந்நியமாதல் மார்க்ஸிய சிந்தனைகளில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அலசப்பட்டுவிட்டாலும் அது குறித்த விழிப்புணர்வு பொதுத் தளத்தில் இல்லாமலேயே இருக்கிறது. அதனை அறிமுகப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.இக்கோணத்தில் நீங்களும் சிந்திக்க நினைத்தால் இன்னும் பல திறப்புகளை அடைய முடியும்.
      மீண்டும் நன்றி
      அன்புடன்
      சுரேஷ்

      Delete

Post a Comment

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024