அதிகாரமும் அழகுமுத்து சாரும்

       
                     ஏழாம்  வகுப்பு  படிக்கும்  போது அழகுமுத்து எனக்கு  தமிழாசிரியர். உமா பார்வதி என அவருக்கு  இரண்டு  மனைவியர். அவ்வயதில் இரண்டு மனைவிகளுடைய முருகனிலிருந்து கிட்டத்தட்ட  அதே பெயருடைய  என் தாத்தா  வரை அனைவரையும்  நான்  குற்றவாளிகளாகவே கருதினேன். அது போன்றே அழகுமுத்து “அய்யா” மீதும்  ஒரு சிறு  வெறுப்பு. ஆனால் இன்று  யோசிக்கும் போது அவ்வெறுப்புக்கு வேறு காரணங்கள்  தெரிகின்றன. உண்மையான  காரணங்கள். நான்  சந்தித்த இரண்டாவது  “கண்டிப்பான” ஆசிரியர்  அவர். முதலாமானவர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சுப்ரமணியம். ஆனால் ஒரு முறை  அவர்  இரு சக்கர  வாகனத்திலிருந்து விழுந்து  விபத்து ஏற்பட்ட  போது அவர் அரற்றியதை  கேட்க நேர்ந்ததால்  “இவருக்கா பயந்தோம்” என்றொரு  அலட்சியம் ஏற்பட்டுவிட்டது. அழகுமுத்து  நல்ல அடர் கருப்பு  நிறம். குள்ளமான  மனிதர். முழுக்கை வெள்ளை சட்டை அணிந்து முட்டி வரை மடித்து விட்டிருப்பார்  அல்லது  அரைக்கை சட்டை அணிந்திருப்பார். எதையுமே வெளிக்காட்டாத முகம். சில வார்த்தைகள் தான்  பேசுவார்.  முதல்  நாள்  கடவுள்  வாழ்த்து நடத்தி விட்டு  மறுநாள்  எழுதிக் காட்டச் சொன்னார். பெரும்பாலும்  நான்கைந்து  முறை ஆசிரியர்கள்  அழுத்திச்  சொல்லி  சென்ற பின்னே  அது போன்ற “டெஸ்டுகள்” எங்கள் வகுப்பில்  நடக்கும். ஆனால்  அழகுமுத்து “அய்யா” சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும்  கூர்ந்து  கவனித்தே வந்தோம். ஒருவரை கணிக்க முடியாவிட்டால் அவர் மீது பயம் பெருகி விடுகிறது. மறுநாள் அவர் வகுப்பிற்குள் நுழைந்ததும்  இன்னதெனச் சொல்ல முடியாத ஒரு குளிர்  போல பயம் வகுப்பு முழுவதும்  பரவியது. மாணவர்களை வரிசையாக  அமரச்  செய்தார். ஒரு குறிப்பிட்ட நேரத்தில்  எழுதுவதை நிறுத்தச்  செய்தார். முதலில்  ஒருவனை அழைத்தார். நடுங்கிக் கொண்டே சென்றான். சில வினாடிகள்  அவன் எழுதியதை  கவனித்திருப்பார். “கைய  நீட்டு” என்றார். அவன் தீர்த்தம் வாங்குவது  போல லேசாக  நீட்டினான். “சுளீர்” என ஒரு அறை விழும் சப்தம். எனக்கு  அடிவயிறு  கலங்கிவிட்டது. கண்களில்  நீர்  வழிய  கையை நீட்டினான். மர அளவுகோளால் வலது மற்றும்  இடது கரங்களில்  தலா மூன்று அடிகள் விழுந்தன. எனக்கு   முன் மேலு‌ம் சிலர்  சென்றனர். என் முறை வந்தபோது தான்  எத்தனை  தவறுகளோ அத்தனை  அடி என்பது  எனக்குப்  புரிந்தது. எனக்கு  மூன்று  தவறுகள். “அவ்வளவு  தானா” என ஆச்சரியப்பட்டுக் கொண்டே கையை நீட்டினேன். முதல்  அடி வலித்ததா அல்லது  அதிர்ச்சி  அடைய  வைத்ததா எனத்  தெரியவில்லை. நெஞ்சைத் தாண்டி  உதடு வரை அழுகை வந்து விட்டது. அழக்கூடாது  என உதட்டை  இறுக்கிக் கொண்டேன். இரண்டாவது  அடி விழுந்த  போது அழுகை வரவில்லை. மூன்றாவது  அடி வலிக்கவே  இல்லை.  நான்  அவ்வயதில்  “நோஞ்சான்”. என் வகுப்பில்  சக மாணவர்கள் சிலரைக்  கண்டு நான்  பயப்படுவேன். அப்படி நான்  பயப்படும்  சில சக மாணவர்கள்  கூட அடி  வாங்கிக்  கொண்டு அழுதவாறே திரும்பினர். அதைக் கண்ட போது ஒரு குரூர  திருப்தி. ஆனால்  அதன் பிறகு  ஒவ்வொரு  முறையும்  அழகுமுத்து  “அய்யாவின்” உத்திகள்  மாறிக் கொண்டே இருந்தன. எந்நேரமும்  கணிக்க முடியாதவராகவே இருந்தார். பிற ஆசிரியர்களிடம் கூட அந்த அதிகார பாவம் நீடித்தது. சில நாட்களுக்கு  முன்  திருத்துறைப்பூண்டியில்  ஒரு கம்யூனிஸ்ட்  கூட்டத்தில்  அவரைப் பார்த்தேன். என்னுள்  முழுமையாக  அப்போதும்  அவர் மீதான பயம் நீங்கியிருக்கவில்லை. அப்போது   ஒன்று புரிந்தது . அவர் அடிப்பதை விட அதற்கு முன் மேற்கொள்ளும்  பாவனைகளே மிரளச் செய்து என்னை விட வலிமையானவர்களையும் அழவைத்திருக்கிறது.

ஆட்சியதிகாரத்தை அவருடன்  ஒப்பு நோக்கும் போது  ஒரு உண்மை விளங்குகிறது. அதனையே  விளக்க முயல்கிறேன். அதிகாரம் என்பதன் குறியீட்டு  வடிவமாக (symbolic  reference) அவரை நான்  எடுத்துக்  கொள்கிறேன். மனிதன்  அடிப்படையில்  தனக்கான  தனிப்பட்ட  விருப்பங்களும்  சுதந்திரமும்  கொண்டவன். குழுவாக  இணைந்து  வாழத்  தொடங்கும்  போதே அவனுடைய  தனிப்பட்ட  விருப்பங்கள்  கட்டுப்படுத்தப்படுகின்றன. திருமணம்  என்று ஒரு ஆணும் பெண்ணும்  குழுவாக்கப்படும் போது சில தனிப்பட்ட  விருப்பங்களை விட்டுக்  கொடுக்க வேண்டியிருப்பதைப் போல். பழங்குடி  சமூகங்களில்  பெரும்  பூசல்கள்  தொடர்வதற்கு முக்கிய  காரணம்  அவர்கள்  சுதந்திரமாக  இருக்க விழைவதே. சுதந்திரம்  என்பது  தலைமையை  ஏற்றுக் கொள்வதற்கு எதிரான  மனநிலை. ஆனால்  ஒரு சமூகம்  முன் செல்ல வேண்டுமானால்  ஒரு மையம்  அவசியமாகிறது.அம்மையத்தை ஏற்றுக்  கொள்ளச்  செய்வதும்  அவசியமாகிறது. அதற்காக  மையத்திற்கென ஒரு தோரணை  (posture) உருவாக்கப்படுகிறது. “இங்கு நீ கீழானவன். இதற்கு  நீ மதிப்பளித்தாக  வேண்டும்” என்ற எண்ணத்தை நிறுவுவதற்காக மையத்தில்  தலைவனாக வீற்றிருப்பவன் பிறரிடமிருந்து  “வித்தியாசப்படுவது” அவசியமாகிறது. மதம் கடவுள்  போன்றவற்றிற்குள் நான்  செல்லவில்லை. அதிகாரம்  செயல்படும்  விதத்தையே குறிப்பிடுகிறேன்.

அதிகாரத்தில்  பங்கு கொள்ள அவசியமான குணம்  இயல்பின்மை. எந்நேரமும்  ஒரு நாடகத்  தருணத்தைப் போன்று வாழ்க்கை நடத்துபவனே தலைமை  கொள்ள முடியும். சிறு  வயது முதலே  அதிகாரத்துடன்  பொருந்திப்  போகுமாறே நாம் வளர்க்கப்படுகிறோம். ஒரு குழந்தை  ஒன்பது  மணிக்கு  ஒரு பள்ளியில்  சென்று அமர வேண்டும்  என அறிவுறுத்தப்படும் போதே  அதன்மீது  மறைமுகமாக  அதிகாரம் செயல்படத்  தொடங்குகிறது. தலைமையின்  முக்கிய  நோக்கம்  அனைத்தையும்  ஒன்று போலாக்குதல். ஒரே மாதிரியான  சீருடை ஒரே மாதிரியான  பேச்சு ஒரே மாதிரியான  பிரார்த்தனை  என நாம் நிறைய  “ஒரே மாதிரிகளை” பார்த்தே வளர்வதால்  அந்த “ஒரே மாதிரிக்கு” வெளியே இருப்பவை இழிந்தவையாகவும் எதிரானவையாகவும் தெரிகின்றன. தாய் வழிச்  சமூகங்களில்  ஒரு பெண் பல ஆண்களை  மணந்து கொள்வது   நம் மரபில்  வழக்கத்தில்  இருந்த ஒன்று தான்  என்பது கூட “அதிர்ச்சி” அளிப்பதாக  இருக்கும். ஏனெனில்  அதிகாரத்தின்  வழியாக  நாம் தொடர்ச்சியாக  ஒற்றைப்படையாக சிந்திக்க  பழகுகிறோம்.

சிறு அரசுகள்  ஒன்றிணைந்து  பேரரசு  உருவாகும் போது  இந்த அதிகார இறுக்கம்  மேலும்  அதிகமாகும்.  பேரரசுகளும்  அழிவுற்று நம்மைப் போல் நூற்றியிருபது  கோடி மக்கள்  கொண்ட ஒரு பெரும்  ஜனநாயக  நாடு  அமையும்  போது அதிகாரம் அதன் உச்சத்தில்  செயல்பட்டால்  மட்டுமே   இந்நாட்டினை உடையாமல் காக்க  முடியும். அதே நேரம்  ஆட்சியதிகாரம் குறித்த  பார்வையை உருவாக்கிக்  கொள்ளாமல்  பணிந்தே நடந்தால்  அது அழிவிற்கே  இட்டுச்  செல்லும்.

ஒரு அடிப்படை  புரிதல். சமூக  இயக்கம் என்பது ஒரு வட்டம்.  மக்கள். மக்களுடைய  தேவைகளை நிறைவேற்றும்  பிரதிநிதி. அப்பிரதிநிதிகளிலிருந்து அமைச்சர்கள்.  அமைச்சர்களிலருந்து முதலமைச்சர்  அல்லது  பிரதம அமைச்சர். இது அரை வட்டம். மேலாண்மை வட்டம்  (management circle) எனவும்  சொல்லலாம். முடிவெடுக்கும்  அதிகாரம் (decision  makers ) படைத்தவர்கள் இவ்வட்டத்தினர். அதன்பின்  அரசின் முதன்மைச் செயலர்  (chief secretary) துறைச்  செயலர்கள்  மாவட்ட  ஆட்சியர்கள்  அவர்களுக்கு அடுத்த நிலையில் மாவட்ட கல்வி மருத்துவம் விளையாட்டு  என பிற துறை அலுவலர்கள் அதன்  பின்னர் வட்டாட்சியர்  வருவாய்  ஆய்வாளர்  என மக்களை  நேரடியாக  அணுகும் அலுவலர்கள். பின்  மக்கள். இது இன்னொரு  அரை வட்டம்.  இவ்வட்டத்தை நிர்வாக  வட்டம்  (administrative  circle) எனலாம். இவ்வட்டத்தில்  இருப்பவர்களை  செயல் அலுவலர்கள் (implementors) எனலாம்.  சுருக்கமாக  ஒரு குழந்தை அம்மாவிடம்  வெளியே  அழைத்துப்  போகச் சொல்லி அடம் பண்ணுகிறது. தாய் அதை எங்கே அழைத்துச்  செல்ல  வேண்டுமென  முடிவெடுக்கிறாள். தந்தை அழைத்துச்  செல்கிறார்  எனக் கொள்வோம். இங்கு குழந்தை  மக்கள் . தாய் மேலாண்மை. தந்தை நிர்வாகம். இந்த வட்டம்  உதாரணம்  எல்லாம்  ஒரு  பொதுப் புரிதலை உருவாக்கவே. இதன் வழியே புலப்படுவது மக்களின் தேவைகளுக்கு  ஏற்றவாறே  நிர்வாகமும்  மேலாண்மையும் செயல்பட வேண்டும் என்பதே.தங்களுடைய  தேவைகளை சரிவர உணராத  மக்கள் பெரும்பாலும்  தவறான மேலாண்மையாளர்களை தேர்வு செய்வார்கள். மேலாண்மை  நிர்வாகம்  இரண்டுமே  மக்களை அணுகி அறியும்  நுண்ணுணர்வு  கொண்டிருக்க வேண்டும். மேலாண்மையாளர்களான அரசியல்  வாதிகள்  மக்கள்  குறித்து ஒரே விதமான  கண்ணோட்டத்தை கொண்டிருக்க  முடியாது. ஏனெனில்  மேலாண்மை  நிரந்தரமல்ல. அவர்கள்  மக்களையும்  மக்கள்  அவர்களையும்  தொடர்ந்து  கண்காணிக்க  வேண்டியிருக்கிறது. ஆனால்  நிர்வாகம்?

குடிமைப்  பணிகள் (civil services) என்று சொல்லப்படும்  அரசு நிர்வாகத்தின்  முகமாகவே  எனக்கு  அழகுமுத்து  தெரிந்தார். பிரிட்டிஷ்  காலத்தில்   உருவாக்கப்பட்ட  குடிமைப் பணிகளுக்கான  ஆட்களை தேர்வு செய்யும்  முறை பெரிய அளவில்  மாற்றம்  இல்லாமல்  இன்றும்  அப்படியே  தொடர்கிறது  என்றே நினைக்கிறேன். ஏதேனும்  சம்பந்தமில்லாத  இரு துறைகளில்  அடிப்படை  அறிவு  ஒரு இளங்கலைப்  பட்டம்  “பயிற்சி” செய்து  பெறக் கூடிய “ஆளுமை”. இந்தத்  தகுதிகள்  இருந்தால் ஒரு  பயிற்சி மையத்தில் பயின்று ஒருவர் தன்  பெயருக்கு பின் ஐ.ஏ.எஸ்  அல்லது  இ.ஆ.ப என எழுதிக்  கொள்ளலாம். மிக இள வயதில்  அதிகாரம்  கைக்கு வந்துசேரும். நல்லது. ஆனால்  இன்றைய  சூழலில்  இத்தகைய  “பயிற்சி” பெற்ற நிர்வாகத்தினரா நம் தேவை? சற்று பின்னோக்கி யோசித்தால்  புரியும். நிலப்பிரபுத்துவ   காலத்தில்  நிர்வாகம்   மக்களை ஆண்டது தோரணைகள் வழியாகவே. அழகுமுத்து  என்ன நினைக்கிறார் எனத் தெரியாமல் நாங்கள்   பயந்தது போல ஆட்சியாளன்  என்ன நினைக்கிறான் எனத் தெரியாமல் மக்கள்  பயந்தே இருக்க வேண்டும். சுயத்தின் மீது  தனி மனிதனின்  நம்பிக்கை பெருகிக்  கொண்டிருக்கும்  இக்காலத்திலும் ஆட்சிப் பணிப் பயிற்சிகள்  நிலப்பிரபுத்துவ  கோட்பாடுகளையே தூக்கிப்  பிடிக்கின்றன. பணி பயிற்சி  முடிக்கும்  ஒருவர் தன் தலைமையை  முழுதேற்பவராக சாமானியர்கள் மீது ஒரு  வெறுப்புணர்வும்  பரிதாப உணர்வும்  கொண்டவராக “கண்டிப்பானவராக” தனித்தவராக வெளி வருகிறார். “ஒரே மாதிரிகளை” தாண்டி சிந்திக்கும்  அனைவரையும்   வெறுக்கிறார். அரசு எந்திரத்தில்  இன்னொரு  பரிதாபமான  கருவியாக  தன்னை இணைத்துக்  கொள்கிறார். இந்தியாவின்  அறிவார்ந்த  நிர்வாகவியல் உச்சத்தை அடைய அனைத்து சாத்தியங்களும் இருந்தும் இன்று வரை  இந்திய  ஆட்சிப்  பணியில் இருந்து ஒரு சிந்தனையாளர் கூட உருவாக முடியாததற்கு நம்முடைய   பழமையான  நிலப்பிரபுத்துவ  “பயிற்சி” முறைகளே காரணம்.

சிகப்பு  தலைப்பாகை  அணிந்த  உதவியாளன்  நீதிபதிகளின்  மேலங்கி உயிருக்கு போராடும் நோயாளியை நினைவுறுத்தும் ஊளையிடும் வாகனம் போன்ற  கடந்த கால குறியீடுகளை  களைவதன் வாயிலாக  இன்றைய  முதலாளித்துவ  மனநிலையை  மக்கள்  மத்தியிலும்  “கடுமையான” பணியாளர்கள்  மத்தியிலும்  உருவாக்க முடியும். தங்களை மேலானவர்களாக அவர்கள்  கற்பனை  செய்து  கொள்வதிலிருந்து தடுக்க  முடியும். நிர்வாகத்  துறை  சார்ந்த  அலுவலகங்களில் பெரும்பாலும்  மலத்தினை  கண்டால் ஏற்படும்  முகச் சுழிப்பு ஊழியர்கள்  மத்தியில்  உறைந்திருக்கும். அதற்கு  அடிப்படை  காரணம்  வேறென்ன  மீண்டும்  அழகுமுத்து தான். அங்கு  உட்ச அதிகாரத்தில்   இருப்பவர் தன்னை முற்றிலும்  மறைத்துக்  கொள்பவராக இருப்பார். மாணவர்களின்  மன ஓட்டம் அறிந்து தன்னையும் முன்னேற்றிக் கல்வித் தரத்தையும்  மேம்பாடடையச் செய்யும் நேர்மையான  ஒரு மாவட்ட கல்வி அலுவலர்  நிச்சயம்  எங்கும்  நிமிர்ந்து நிற்கும்  ஆணவத்தை கொண்டிருப்பார். அப்படிப்பட்ட  ஒருவரிடம்  ஒரு மாவட்ட  ஆட்சியர்  அலட்சியத்துடன்  தனக்கு  “கீழ்” உள்ளவர் தானே என அதிகாரம் செலுத்த  நினைத்தால்  அலுவலரின்  ஆணவம் அங்கு சீண்டப்படும்  அல்லது முறிக்கப்படும். அர்ப்பணிப்பு  மிக்கவர்களின் ஆணவம்  முறிந்தால் அந்த சமூகத்திற்கே அது கேடு.

மேட்டிமைத்  தனம் இல்லாத நுண்ணுணர்வு  கொண்ட நிர்வாகிகளை உருவாக்கும் வகையில்  நம் இ.ஆ.ப பயிற்சிகள்  மாறுமா? ம் பார்ப்போம்

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024