அசோகமித்திரனின் தண்ணீர்,கரைந்த நிழல்கள் மற்றும் இன்று ஆகிய படைப்புகளை படித்த போது ஒரு எண்ணம் எழுந்தது. அவர் தொடர்ச்சியாக தன் படைப்புகளில் இடைவெளியை "பெருக்கிக்" கொண்டே செல்கிறார் என. தண்ணீர் ஒரு தெருவின் தண்ணீர் பிரச்சினையையும் அதன் வழியாக ஈரம் குறைந்து போன ஒரு வாழ்க்கையையும் சொல்லும். இருந்தும் அக்கதை ஜமுனாவை சுற்றி தான் நடக்கும். கரைந்த நிழல்கள் ஒரு படம் கை விடப்படுகிறது என்பதை ஒரு மையம் போல வைத்துக் கொண்டு அடையாளமற்ற பல்வேறு மனிதர்களின் வாழ்க்கையை சுற்றி பயணிக்கும். இன்று நாவலை இன்று வரை ஒரு நாவலென்றே ஒத்துக் கொள்ள முடியவில்லை. அந்த அளவிற்கு அது எந்த மையமும் இல்லாமல் சுழன்று செல்லும். அதுபோலவே டால்ஸ்டாயிடமும் அவர் படைப்புகளின் கால வரிசையைக் கொண்டு ஒரு "பரிணாம" வளர்ச்சியை காண முடிகிறது. அவர் சாயலை பிரதிபலிக்கும் போரும் வாழ்வும் நாவலின் பீயர் அன்னா கரீனினாவின் லெவின் புத்துயிர்ப்பு நாவலின் நெஹ்லூதவ் ஆகியோரிடம் அதனை காண முடிகிறது. பீயரை ஒரு கள்ளமற்ற பெருங்கோபம் கொண்ட மனிதனாக எளிதில் மனமிரங்கி விடுபவனாக சித்தரித்திருப்பார். லெவின் கறாரான பண்ணையார் லௌகீகன் அதே நேரம் ...