சில கவிதைகள்

கவிதைகள் குறித்தும் கவிஞன் குறித்தும் எப்போதுமே எழுச்சிமிக்க ஒரு பார்வை எனக்குண்டு. எப்படியாயினும் நாம் அனைவரும் "உச்சி மீது வானிடிந்து" என்று தொடங்கியவர்கள் தானே. ஆகவே சிறந்த கவிதைகளுக்கு அளிக்கக்கூடிய மிகப்பெரும் மரியாதை நான் சிறந்தவை என எண்ணுபவற்றை பகிர்ந்து கொள்வது. மிகப்பெரிய அவமதிப்பு என்பது நான் எழுதியவற்றை பகிர்ந்து கொள்வது. இப்பதிவு அவமதிப்பே!

மறைதுயர்

இன்றிரவு உதிரப் போகும் உன் கண்ணீர் துளிகளில் கலந்திருக்கிறது என் உப்பும்

எவ்வளவு தனித்தவள் நீ!

ஒளித்து வைக்கப்படும் உன் ஒவ்வொரு துயரும்

தூங்கிய குழந்தையை தொலைத்தப் பெற்றவள் என

என்னை நிலைகொள்ளாமல் அடிக்கிறது

அறிவாயா நீ

உன் சிரிப்பின் ஒவ்வொரு முத்துக்கும் நான் மூழ்கும் ஆழங்களை

-----

வெளியேற்றல்

களீரெனும் அச்சிரிப்பில் மறைந்திருக்கும் உன் அழுகை

அறிந்தவன் நான் மட்டும்

இறுமாப்பு கொள்கிறேன்

அச்சிரிப்பு உச்சிக்கேறி வெளியேறும் கண்ணீர்

கண்ணீரில் கலந்து விடுகிறது

உன் துயரும்

அது கடந்த சமனும்

மீண்டும் தலை குனிகிறேன்

-----

பை

அவர்களின் பை அடக்கமானது

மாட்டிக் கொண்டு போய் விடலாம்

அது பிறரின் முகத்தில் இடிப்பதோ

மாட்டியிருப்பவர் வலுவை கூட்டிக் காண்பிப்பதோ அவர்களுக்குத் தெரியாது

பின் படிக்கு முந்தைய இருக்கை இடுக்கில் சொறுகி இருக்கும் என் பை அப்படியல்ல

அது பிறரைக் கீறும்

எடுத்துக் கொண்டு இறங்க நேரமாகும்

முன் செல்பவரை எனக்குத் தெரிவது போல் இடிக்கும்

ஆனால்

அது உருவாக்கும் அத்தனை அசௌகரியங்களும்

அனைவருக்கும் தெரிந்தே இருக்கும்

------

வினா-அடி-வினா

அடி

என்னடா

நீ அழகல்ல

சரி

கோபமில்லை?

கோபம் தான்

ஆனால் நீங்கள் அழகு

மலர்கொத்துகள் தான் உனக்கு விருப்பமா?

இல்லை ஒரு மலரின் ஒவ்வொரு இதழும்

என்ன?

உனக்குள் இருக்கும் நீங்கள்

என்ன?

அடர் இருளின் துளி வெளிச்சமென குளித்த ஈரம் சொட்டும் உன் கூந்தல் நுனிகள்

ம்

பனியின் வெள்ளை படர்ந்த உதட்டுச் சுருக்கங்கள்

ம்ம்

உடைக்கும் உடையின்மைக்கும் இடையே மின்னும் தோள்

ப்ச்

பழிப்பு காட்டுகையில் பார்க்கக் கிடைக்கும் உள் உதட்டுச் சிவப்பு

டேய்

கழுத்தில் மின்னும் வியர்வை

ம்ஹும்

கண்களில் எரியும் தீ

எப்போது

கவலை மறைக்கும் புன்னகை

இல்லவே இல்லை

சிறுமியென மூக்குறிஞ்சல்கள்

போடா

வெட்கமில்லா பெருஞ்சிரிப்பு

அடிப்பேன்

விரைந்து வெளியேறும் திக்கல் பேச்சு

ம்ஹ்ம்

வியந்து நோக்கும் விரிந்த விழிகளும் திறந்த சிறு வாயும்

அய்யோ

அணுக்கத்தில் தெரியும் உடற்புள்ளிகள்

வேண்டாம்

மேலும் அணுகையில் எழும் உடல் மணம்

போதும்

ஏன்

போதும்

ஏன்

போதும்

சரி

சரியா?

சரிதான்

------

இரு முத்தங்கள்

இவ்விள மஞ்சள் வெயிலுடன்

என்னை எழுப்புகின்றன

இரு முத்தங்கள்

ஒன்று உன் கனிவின் முத்தம்

மற்றொன்றென் கனவின் முத்தம்

------

சட்டென

அவள் குரலில் என்னதான் இருக்கிறது

விரைந்து செல்லும் பேருந்துக்கு

தலைசாய்க்கும் அரளிச்செடி

ஆக்கிவிடுகிறது என்னை

------

முடிக்காமலிருத்தல்

முழுதாக உண்ணப்படாமல் சேர்த்து வைக்கப்படுகின்றன

அவளின் ஒவ்வொரு சொற்களும்

புதுப்பொருளை

வருடி வருடி மகிழும் பிஞ்சு போல

எடுத்துவிட்டு

எடுத்துவிட்டு

திரும்ப வைக்கிறது

சிந்தை

அவள் சொற்களை

------

பாவனித்தல்

சென்று கொண்டிருக்கும் பேருந்தில்

காதடைக்கும் குளிர்காற்றை சுவாசித்தபடி

வாசித்துக் கொண்டிருக்கிறேன்

அடுத்த நிறுத்தத்தில் அவள் ஏறப் போகும்

பதற்றத்தை மறைக்க

-

Comments

  1. Falling in love?
    Both love &arranged marriages have their +&_ .But after 10 yrs there will be very rare arranged marriages

    ReplyDelete
  2. அன்புள்ள நண்பருக்கு,

    இக்கவிதைகள் அவமதிப்பே என்று பொறுப்பாகமையை சொல்லிவிட்டே எழுதியிருக்கிறீர்கள். அதை மனதில் எடுத்துக்கொண்டே வாசித்தேன். இன்னும் உங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்ற ஊகத்திற்கே நான் செல்ல முடிந்தது.

    உங்கள் இந்த கவிதைகளில் "பை" கவிதை மட்டும் வேறு ரகத்தை சேர்ந்தது என்றே நான் நினைக்கிறன். வெகு நேரத்திற்கு அதிலேயே மனம் வலம்வந்துகொண்டிருந்தது.

    பெரிய பய் வைத்திருப்பவர்கள் அது சொல்வது போலத்தான் நடக்கவேண்டும். அது அங்கு எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. பெரிய பைக்கு உண்டான குணாதிசயத்தை நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

    பை போன்ற கவிதைகளை எப்படி வகை படுத்திகிறார்கள் நம் கவிஞர்கள்? படிம கவிதை என்று சொல்லலாமா?

    மற்ற எந்த கவிதையும் என் நினைவில் இல்லை.


    மேலும் எழுதுங்கள்.


    --விஜயகுமார்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024