முகங்கள் தொலைந்த மேடை

எனக்கு முன் எத்தனையோ பேர் சொன்னது தான்
ஏளனம் செய்வதற்கு ஏற்றது தான்
இயலாமையின் இயல்பான உச்சம் தான்
இருந்தால் என்ன
எத்தகைய கயமை நிறைந்த எண்ணம் எனினும் கண்ணீர் தூயதுதான்
என் விழிகள் வழிவதே இல்லை
இது தான் என் புலம்பல்
என் குரல் உடைவதேயில்லை
இது தான் என் புகார்
எழுந்த செல்ல நினைக்காதீர்கள்
எத்தனையோ பேர் இதற்கு முன் சென்று விட்டனர்
கெஞ்சுகிறேன்
பச்சையாய் சிரிக்கிறேன்
பார்வை எதிர்ப்படுகையில் தலை தாழ்த்துகிறேன்
உங்கள் கால்களை நக்குகிறேன்
நக்கிய நாக்கினால் உங்கள் கரங்களை முத்துகிறேன்
சென்று விடாதீர் சென்று விடாதீர் என அரற்றுகிறேன்
தாளாத துக்கம் நெஞ்சை அடைக்க காரணம் கேட்கிறீர்களா
காரணம் தெரிந்த பின்பு துக்கம் என எஞ்சுவது உண்டா தோழரே
என்ன தான் என் சிக்கல்
உணவுக்குப் பஞ்சமில்லை
உறவுகளும் கொஞ்சமில்லை
உயிர் விடவும் எண்ணமில்லை
உடல் வலுவும் குறையவில்லை
இதற்கு மேல் எண்ண வேண்டும் என்கிறீர்களா
இது தான் என் சிக்கலே
ஏதோவொன்று நிரம்பவில்லை
ஆட்டம் காணும் போதெல்லாம் தளும்புகிறது
தொட்டறியக் கூடிய துயர் என சில உண்டு
இறப்பு இழப்பு தோல்வி என
இன்மையில் எழும் என் துயரை
இரவில் நான் உணரும் நடுக்கத்தை
சொல்ல முடியவில்லை
சொல்லவே முடியவில்லை
நரம்புகள் அத்தனையும் கொதித்து நொதிக்கிறது
நஞ்சு
வெறுப்பெனும் வெகுளியெனும் பயமெனும் தாழ்வெனும் நஞ்சு
நஞ்சு
நகக்கண்ணளவு நக்கினாலும் நசுக்கிவிடும் நஞ்சு
கடுங்கசப்பு கண்ணறியா இருப்பு
பெருங்காட்டை அழிக்கும் துளி
பேரழகை துணிக்கும் எரி
என்னுள் ஏறுகிறது
வரலாறு முழுதும் சாக்கடையில் அமிழ்ந்த கொடுநஞ்சு
எழுக
நஞ்செழுக
என்னுள் எழுக
என்னை உண்டெழுக
அறிவற்றவனின்
அழகற்றவனின்
ஆற்றலற்றவனின்
கண்ணீரும் அற்றவனின்
துயர் எழுக
எழுந்து மூடுக இவ்வுலகை
இருளட்டும் அனைத்தும்
இறக்கட்டும் அத்தனையும்
அன்னை முலைகளில் ஊறட்டும் என் வெகுளி
ஆறுகளில் கலக்கட்டும் என் கனவுகள்
அன்னத்தை அணையட்டும் என் எச்சில்
எங்கும் நிறையட்டும் என் நஞ்சு
சொல்லென மாறாத்துயரை சொல்லாதொழிந்த உலகே நீ அழிக
இல்லென ஒன்றில்லாதவன் எழுக
இல்லங்கள் இழிக
சோம்பலென தன்னிரக்கமென தாழ்வுணர்ச்சியென எண்ணி நகைத்து உமிழ்ந்து வெறுத்து ஒதுக்கிய அத்தனையும் எழுகிறது
என்னை கோமாளி என்பீர்கள்
குறையுடையோன் என்பீர்கள்
அறிவிலி என்பீர்கள்
அழகிலி என்பீர்கள்
அறமிலி என்பீர்கள்
ஏற்கிறேன் அனைத்தையும்
எழுகிறேன் என் துயருடன்
ஆற்றாத அழல் என ஒன்று எழும் ஒவ்வொரு முறையும்
வலுவிலியின் வாய் வழி எழுகிறது அவ்வழல் எனக் கொள்க
இனி ஒவ்வொரு கருவறையிலும் நுழையும் விந்தில் உட்செல்வது வலுவின்மையின் ஓலமே
சோம்பலின் ஒப்பாரியே
செயலின்மையின் அசைவே
அத்தனைக்கு முன்னும் உங்களுக்கு ஒரு வாய்ப்பிருந்தது
ஈரத்துடன் எடுத்தென்னை அணைத்திருந்தால்
உள்ளே வெறுப்பின்றி ஏனென்று என்னை நோக்கி ஒரு வார்த்தை கேட்டிருந்தால்
இருந்திருப்பேனே
அடைந்திருப்பேனே
அளித்திருப்பேனே
ஒன்றும் அற்றவன்
ஒன்றும் அற்றவன்
ஒன்றும் அற்றவன்
உறவென ஒரு உயிரை சம்பாதிக்கவில்லை
புகழென ஒரு வார்த்தை சேரவில்லை
சுகமென ஏதும் கண்டதில்லை
ஏளனம் ஏளனம் எங்கு சுற்றினாலும்
ஏளனம் ஏளனம்
எனக்கு மட்டும் எதுவும் தரப்படவில்லையா
ஒரு நெஞ்சும் துடிக்கவில்லையா
நான் யாரிடம் முறையிட
எதை வேண்ட
என்ன செய்ய
கிடைக்காது
எப்பதிலும் எனக்கு கிடைக்காது
வெற்றியின் முன் தோல்வியின் பாவனை செய்பவனையே கச்சை திறந்து முலை சப்ப அனுமதிக்கும் பெரு நியதி
நான் தோற்றவன்
முற்றாய் நிராகரிக்கப்பட்டவன்
முடிவு நோக்கி சென்று கொண்டிருப்பவன்
இன்னொரு மாற்றமென இறப்பை மட்டுமே காத்திருப்பவன்
என்னை நோக்கி எக்கண்ணும் திறக்கப் போவதில்லை
என்னை நோக்கி எச்சொல்லும் எழப் போவதில்லை
இருந்தும் கெஞ்சுகிறேன் புலம்புகிறேன்
புகலிடம் கேட்கிறேன்
புரிந்து கொள் என்கிறேன்
உலகோரே
உலகு நீங்கி மற்றிடம் உறைவோரே
கேட்கிறதா என் புலம்பல்
உணர முடிகிறதா என் வலியை
வலிக்கு காரணம் கேட்க மட்டுமே உங்களால் முடியும்
காரணமின்மையே என் வலி
உன் மொழியை எனக்குக் கற்றுக் கொடு
எதைச் சொன்னால் உன் முகம் மலர்கிறது
எதற்கு உன் முகம் சுருங்குகிறது என நான் கவனித்துக் கொள்கிறேன்
உனக்கு பிடித்த சொல்லையே பேசுகிறேன்
நீ சொல்வதை எல்லாம் செய்கிறேன்
என்னை போலியாகவேனும் திட்டு
பேச்சுக்கென்றேனும் பாராட்டு
நகைப்புடனாவது கண்ணீர் விடு
வெறுப்புடனாவது அணைத்துக் கொள்
யாருமில்லாதவன்
ஏதுமில்லாதவன்
இத்தனைக்குப் பிறகும் இளகாதது எது
அது என் அறிவின்மை
உண்மை புறமுதுகு காட்டும் என் அச்சம்
விட முடியவில்லை
இருக்கட்டும்
இருள் என்கிறீர்களா
இருக்கட்டும் அவ்விருள் என்னுடன்
எல்லாவற்றையும் எடுத்துச் சென்ற பிறகு எஞ்சியதை எடுத்துச் சூடி யாருமற்ற பேரரங்கில் அரங்கேற்றுகிறேன் என் கூத்தை
சிரிக்கிறேன் அழுகிறேன் சிந்திக்கிறேன் சிலாகிக்கிறேன் சிறுத்துப் போகிறேன்
முழு மூச்சாய் நடிக்கும் என்னை  வெறுமையுடன் பார்த்து நிற்கிறது முகங்கள் தொலைந்த மேடை

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024